வெளிநாட்டு வாசம் இத்துடன் முடிவடைந்து விட்டதைப் போல, விமான நிலையத்தில் நின்று கொண்டு, உற்சாகமாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் முக்தா.
தனது இரு கைகளை அகல விரித்துக் கொண்டு மகளை நோக்கி வந்தார் நீலகண்டன்.
"அப்பா" என்று புன்னகை தாங்கிய முகத்துடன் தந்தையை நோக்கி வந்தாள் மகள்.
மகளைப் பிரிந்திருந்த துயர் தாளாமல், இறுக்கிக் கொண்டார் நீலகண்டன்.
"முகி ம்மா!" என்று கண்ணீரைச் சுண்டி விட்டுக் கொண்டே கேட்டார்.
"அழாதீங்க அப்பா" என்று அவரை இருக்கை ஒன்றில் அமர்த்தினாள்.
"பயணம் சௌகரியமாக இருந்துச்சாடா?" என்று வினவினார் தந்தை.
"ம்ம். இருந்துச்சு அப்பா" என்றவள்,
அவ்விடத்தைக் கண்களால் கூர்மையாக அலசினாள் முக்தா.
அங்கே, கிஷான் வருகை தரவில்லை என்றதும் தான், அவளுக்குள் நிம்மதி படர்ந்தது.
வந்த முதல் நாளே தந்தையின் சங்கடத்தைப் பெற வேண்டாம் என்று தான் அவனை இங்கு வரக் கூடாது எனக் கூறித் தடுத்து விட்டாள் முக்தா.
"யாரைத் தேடுற முகி?" என்று கேட்டார் நீலகண்டன்.
"என் ஃப்ரண்ட்ஸ் வரேன்னு சொன்னாங்க அப்பா" எனக் கண்களால் அளைந்தாள் மகள்.
"யாரு? உன் கூட டிரிப் வந்தாங்களே, அவங்களையா?"
"அவங்க கூட நான் பேசுறது இல்லை ப்பா. என்னோட உண்மையான ஃப்ரண்ட்ஸ்" என்று அவள் கூறவும்,
தோழிகள் அங்கு வந்து விட்டனர்.
"முகி!!" என்ற பெருங்கூச்சலுடன் தன்னை நெருங்கியவர்களைப் பார்த்து, நெகிழ்ந்து போனாள் பெண்ணவள்.
லிஷா,ஜியா,ஹீமா,ஷீலா இந்நான்கு பேரும் அவளுக்காக வந்திருப்பதைக் கண்டு, முக்தாவின் தந்தையான நீலகண்டனுக்குப் பெருமகிழ்வு உண்டானது.
"கொஞ்சம் அமைதியாகப் பேசுங்க" என்று தோழிகளுக்கு அறிவுறுத்தினாள் முக்தா.
பொது இடத்தில் மற்றவர்களுக்குத் தொல்லைக் கொடுக்கக் கூடாது அல்லவா?
அவளது அப்பாவும் அங்கிருப்பதை உணர்ந்தவர்கள்,
"அப்பா" என்று நால்வரும் அவரது நலனை விசாரித்தனர்.
"உங்களையும் பார்த்ததும் தான், முகி முகம் பிரகாசமாகி இருக்கு" என்றார் நீலகண்டன்.
அதைக் கேட்டு உவகை கொண்டனர் தோழிகள்.
"வாங்க. நம்ம வீட்டிலேயே சாப்பாட்டை முடிச்சிடலாம்" என்று அவர்களைக் காரில் ஏற்றி, தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர் தந்தையும், மகளும்.
பயணத்தின் ஊடாகவே, கிஷானுக்குத் தகவல் தெரிவித்து விட்டாள் முக்தா.
அவனும் அதை மஹதனுக்கும், மௌனாவிற்கும் அறிவித்து விட்டான்.
வீட்டிற்குள் சென்றவர்கள், "முகி! ஜெட் லாக் ஆகி இருக்கும். நீ போய்த் தூங்கி எழுந்திரு.நாங்க கிளம்பறோம்" என்று லிஷா கூறினாள்.
"அப்படியெல்லாம் இல்லை. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்.நீங்க என்கூட சாப்பிட்டுட்டுத் தான் போகனும்" எனக் குளியலறைக்குள் சென்றாள் முக்தா.
மகளது வருகையை அறிந்ததுமே, வீட்டில் பதார்த்தங்களைச் செய்து வைக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார் நீலகண்டன்.
அதை சிரமேற் கொண்டு செய்து முடித்து இருந்தனர்.
ஐவரும் பேசிக் கொண்டு இருக்க, முக்தாவும் டைனிங் ஹாலில் வந்து அமர்ந்தாள்.
"ஆஹ்ஹா!" என்று உணவைப் பார்வையாலேயே ரசித்தாள்.
"உன்னோட வேலையைப் பத்திக் கொஞ்சம் சொல்லேன்" என்று அவளது அலுவலைப் பற்றிய உரையாடலுடன் உணவுண்டு முடித்திருந்தனர்.
"நீங்க பேசிட்டு இருங்க" என்று நாகரீகமாக ஒதுங்கிக் கொண்டார் நீலகண்டன்.
அவர் சென்ற மறுநிமிடம், தோழிகளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள் முக்தா.
"கிஷான் ஏர்போர்ட்டுக்கு வரலையா?" என்று கண்ணடித்துக் கேட்டாள் ஷீலா.
"வர வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்றாள்.
"ஏன்? நினைச்சுப் பாரு! அவரும், அப்பாவும் ஒரே நேரத்தில் வந்து உனக்குச் சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தால், சூப்பராக இருந்திருக்கும்ல?" என்று கிண்டலடித்தாள் ஜியா.
"இந்நேரம் அப்பாவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். அதை என்கிட்ட அவர் காட்டிக்கலை" என்று கூறினாள் முக்தா.
"இப்போ கிஷானுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டியா?" என்று கேட்டாள் ஹீமா.
"காரில் டிராவல் பண்ணிட்டு வரும் போதே மெசேஜில் சொல்லிட்டேன்" எனப் பதிலளித்தாள்.
அதற்குப் பிறகுப் பேச்சை மாற்றி விட்டாள் முக்தா.
தாங்கள் வீட்டிற்குக் கிளம்புவதாக நீலகண்டனுக்குத் தகவல் தெரிவித்து விட்டுச் சென்றனர் முக்தாவின் தோழிகள்.
கண்ணயரும் நொடிதனில், கிஷானிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
"டேட்டிங்? என்னால் காத்திருக்க முடியலை முகி!" என்று அனுப்பியிருந்தவனை எண்ணுகையில் உவகை கொண்டாள் முக்தா.
உள்ளூரிலேயே இருந்து கொண்டு, பார்க்காமல் இருப்பது எத்தனை தவிப்பைக் கொடுக்கும் என்பதை அவளும் அறிந்திருப்பாள் தானே?
அதனால்,"தூங்கப் போறேன் கிஷான். நாளைக்குப் பார்க்கலாம்!" என்று பதில் அனுப்பவும், முக்தாவை உறங்கச் சொல்லி விட்டான்.
மறுநாளைய வேலைகள் அனைத்தையும் விடாப்பிடியாக நண்பனிடம் இருந்து வாங்கிக் கொண்டான் மஹதன்.
அன்று முழுவதும் முக்தாவுடன் அவன் பேசுவதற்காக ஒதுக்கப்பட்டு விட்டது.
அதனால் , நேரம் கடத்தாமல் நேசப் பெண்ணைச் சந்திக்க விரைந்து சென்றான் உணவகத்திற்கு.
அவள் வருவதற்கு முன்பாகவே, உணவகத்திற்குச் சென்று இருந்தான் கிஷான்.
உள்ளூர ஒரு சிலிர்ப்புத் தோன்றி மறைந்தது.
"ஹாய்" எனப் பளிச்சென்று, இதழ்ப் பிரித்துப் புன்னகைத்தாள் முக்தா.
காது குளிரத் தன்னவளது குரலைக் கேட்ட நொடியில், அவளை மென்நகையுடன் ஏறிட்டவன்,
"உட்கார் முக்தா" என்று தனக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அவளை அமரச் சொன்னான் கிஷான்.
இப்போதும் , மாடர்ன் டிரஸ் அவளை நேர்த்தியாகத் தழுவி இருக்க, உதடுகளில் கூட அதே நிற உதட்டுச் சாயம் என அப்போதிருந்த முக்தாவே இப்போதும் அவனுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.
"கிஷான்! ஏதாவது ஆர்டர் பண்ணுங்க ப்ளீஸ்!" என்கவும்,
அவள் பசியோடு இருக்கிறாள் என, துரிதமாக உணவு வகைகளைக் கொண்டு வருமாறு வெயிட்டரிடம் சொல்லி அனுப்பி விட்டான்.
"நெக்ஸ்ட் எப்போ ஃபாரீனுக்குப் போகப் போற முகி?" என்ற கேள்வியைப் பகிரவும்,
"போகனும்னு தோனலை!" என்று உடனே பதில் வந்தது அவளிடமிருந்து.
இதயத்தை அடைத்த ஏதோ ஒன்று விடுபட்டுச் சென்றதைப் போன்றதொரு பாரம் நீங்கிய உணர்வு அவனுக்கு.
எனினும்,"ஏன்? அங்கே உனக்கு வேலை இருக்குல்ல?" எனக் கேட்டான் கிஷான்.
"இருக்கு தான். அதை விட்டுட்டு இங்கேயே வரலாம்ன்ற ஐடியா" என்றதுமே,
"சூப்பர்!!" என உற்சாகம் அடைந்தவன்,
"உங்க ஆஃபீஸில் எனக்கு வேலை வேணும்" என்று திடுமெனக் கேட்டவளைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தான் கிஷான்.
"என்ன?"
"நத்திங் முகி. உன்னோட ரெஸியூம் அனுப்பு. நான் பார்த்துட்டு சொல்றேன்" என்று ஏமாற்றத்துடன் உரைத்தான்.
"எனக்கும் , உங்களுக்கும் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் வேலைக்கு வரப் போறேன். சோ , அப்போ அனுப்பினால் போதும் தான?" என்று வெட்கப் புன்னகையில் நெளிந்தாள் முக்தா.
"டபுள் ஓகே முகி!" என்று உற்சாக மிகுதியில் கூச்சல் போட்டான்.
ஏக்கங்கள் சுமந்து, இரவு தூக்கம் இழந்து கிடந்த கிஷானுக்கு, இப்போது தான் உயிர்ப்பு வந்தது, அவளது வார்த்தைகள் கொடுத்தப் புத்துணர்வால்.
"அப்பாகிட்ட பேசிடுங்க" என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினாள் முக்தா.
அதற்கான நல்ல நாளும் பார்க்கப்பட்டது.
தந்தையிடம் தன்னுடைய காதலைப் பற்றி எதையும் சொல்லவில்லை நீலகண்டனின் புத்திரி.
புதியதோர் செய்தியாக, கிஷானின் வாயிலாக, இவர்களது காதல் அவருக்குத் தெரியட்டும் என்று எண்ணினாள் முக்தா.
ஆனால் , தன் வருங்கால மருமகனின் மொத்த ஜாதகமும் இவரிடத்தில் எப்போதோ வந்து சேர்ந்திருந்ததே! அதனால், அவனுடைய எதிர்ப்புறத்தில் அநாயாசமாக அமர்ந்திருந்தார் நீலகண்டன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக