விமான நிலையத்திலிருந்து தந்தைக்கு அழைத்து,
"அப்பா! நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன். என்னைப் பிக்கப் பண்ண வாங்க" என்று அவரை வரச் சொன்னாள் முக்தா.
"என்னம்மா முன்னாடியே சொல்லக் கூடாதா?" என்று மகளின் வரவை நினைத்து மகிழ்ந்து கொண்டே, அவளை அழைத்து வருவதற்காக விமான நிலையம் சென்றார் நீலகண்டன்.
தோழிகளும் உடனிருந்ததால் ,"எங்க அப்பா வர்றார்? உங்களைக் கூப்பிட யார் வர்றாங்க?" என்று அவர்களிடம் கேட்டாள் முக்தா.
"நீ தான் எங்களை வீட்டில் கொண்டு போய் விட ஏற்பாடு பண்ணனும்! உங்க அப்பா வர்றாருன்னு நைஸாக நழுவப் பாக்குற!" என்று சீறினர் அவளுடைய சிநேகிதிகள்.
அவர்களது சுயரூபத்தைப் பார்த்தவளுக்கு மனம் வதங்கிப் போய் விட்டது.
முந்தைய நாட்கள் வரை ஒன்றாக சேர்ந்து, சிரித்துப் பேசி, சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது கறாராகப் பேசுவதைக் கேட்டு, திகைத்து,
"இவ்ளோ நாள் என் கூட நல்லா தான பேசினீங்க? இப்போ பேச்சு அப்படியே மாறுது!" என்று எரிச்சல்பட்டாள் முக்தா.
"ஆங்! நீ தானே எங்களைக் கூட கூப்பிட்டுப் போன, எங்களைப் பத்திரமாக வீட்டில் விட்றதும் உன் பொறுப்பு தான?" என்று அவளை மடக்கினர்.
முக்தாவோ இவர்களை அழைத்துச் சென்றதே தவறு என்று தலையில் அடித்துக் கொண்டு,
"இருங்க!" எனத் தன் தந்தைக்கு மீண்டும் அழைத்து இன்னொரு மகிழுந்தை எடுத்து வருமாறு கூறினாள் முக்தா.
அவள் அப்படி சொன்னதும், உடனே முகத்தையும், பேச்சையும் சாமர்த்தியமாக மாற்றிக் கொண்டவர்கள்,
"அப்பறம் முகி, கார் வர்ற வரைக்கும் ஏதாவது பேசுவோம்" என்றனர்.
"உங்ககிட்ட வாயைக் கொடுக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்!" என்று முணுமுணுத்தாள்.
"அச்சோ! காமெடி பண்ணாத முகி.நாம அடுத்த தடவையும் இந்த மாதிரி மாசத்துக்கு ஒரு தடவை ட்ரிப் போகலாம்!" என அவளிடம் குழைந்துப் பேசினர்.
ஒரு தடவைக்கே நாக்குத் தள்ளி விட்டது. இவர்களை இனி தன்னுடன் வைத்துக் கொள்வது நல்லதல்ல என்று முடிவெடுத்து இருந்தாள் முக்தா.
அதற்குள் அங்கே வந்து சேர்ந்தார் நீலகண்டன்.
தந்தையைப் பார்த்ததும் அவரிடம் சென்று,"அப்பா!" என அவரது தோள்களைப் பற்றிக் கொண்டாள்.
"முகி ம்மா!" என்று தன் ஒரே மகளைப் பிரிந்திருந்த துயரைக் குறைக்க முயன்றார் நீலகண்டன்.
இவர்களுக்கு அருகிலிருந்த முக்தாவின் தோழிகள், அசிரத்தையாகத் தங்களது காதைக் குடைந்து கொண்டிருந்தனர்.
"ட்ரிப் எப்படி போச்சு ம்மா?" எனப் பொதுவாக அனைவரையும் பார்த்துக் கேட்டார்.
"செம்மையாகப் போச்சு சார்" எனப் பவ்யமாகப் பதில் கூறினர்.
"ஓகே ம்மா. உங்களுக்காக கார் வெளியே நிக்குது. வீட்டுக்குப் போங்க" என்று அந்தப் பெண்களை அனுப்பி வைத்தவர்,
அவர்களை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மகளிடம்,"ஏன் ம்மா இப்படி ஒரு வெறுப்பு அவங்க மேல? நல்லா தான ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்துப் போட்டு இருந்தீங்க?" என்று கேட்டார் நீலகண்டன்.
"ஆமாம் ப்பா. ஆனா அவங்களோட ரியல் ஃபேஸை இப்போ தான் பார்த்தேன்" என்று வாடிப் போனவள், சுற்றுலா சென்ற நாட்களைப் பற்றி தந்தையிடம் சொல்லி முடித்தாள் முக்தா.
"உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டாங்களா?" என்று ஆதூரமாக கேட்டார் நீலகண்டன்.
அவளது கரத்தைப் பிடித்து, விமான நிலையத்தின் வாயிற்புறம் நடத்திக் கூட்டி வந்தார்.
"பணத்துக்காக, அதை வச்சு செலவு செய்றதுக்காக, என் கூட வந்தவங்க தான அப்பா? அப்படித்தான் நடந்துக்கிட்டாங்க" என்று வருத்தப்பட்டாள் மகள்.
"எல்லாத்தையும் பார்த்துக்கலாம் முகி ம்மா" எனக் காரில் வீட்டை அடைந்தனர் தந்தையும், மகளும்.
"சார்! நம்ம ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட்டுக்கு ஒரு பொண்ணோட ரெஸியூம் மேட்ச் ஆகுது" என்று கூறினார் விடுதியின் மேனேஜர்.
"அவங்க டீடெயில்ஸ்ஸைக் கொண்டு வாங்க" என்றான் மஹதன்.
சிறிது நேரம் கழித்து, கையில் ஒரு கோப்பை எடுத்து வந்து கொடுத்தான் மேனேஜர்.
அதிலிருந்த குறிப்புகளை வாசித்துப் பார்த்து விட்டு,"இவங்க ஓகே! இருந்தாலும் இன்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணுங்க. அதுக்கப்புறம், நான் இங்கே வரும் போது பேசிக்கிறேன்" என உத்தரவு அளித்தான்.
"மஹதனைப் பார்க்கனும் அப்பா!" என்று தான் வந்ததிலிருந்து தந்தையிடம் கூறிக் கொண்டிருந்தாள் முக்தா.
அவளிடம் எதுவும் சொல்லாமல் வெளியேறி விட்டார் நீலகண்டன்.
தாயகத்திற்குத் திரும்பி விட்டதை, புலனத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தாள் முக்தா.
அதைப் பார்த்த மஹதனோ நண்பனுக்கு அழைப்பு விடுத்தான்.
"நண்பா! முக்தா இங்கே வந்தாச்சு!" என்று அறிவித்தான்.
"ஹூர்ரே! தாங்க்ஸ் டா மஹத்" என்று பேரானந்தம் கொண்டான் கிஷான்.
"பெஸ்ட் ஆஃப் லக்!" என்று வாழ்த்தி விட்டு, விடுதிக்குப் புதிதாக வேலைக்குச் சேர்க்கும் பெண்ணைப் பற்றிப் பேசி விட்டு வைத்தான்.
இங்கு கிஷானோ சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்தான்.
ஆனால், முக்தாவோ இரண்டு நாட்களுக்குப் பிறகு, மஹதனைச் சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.
முன் அலுவலக வரவேற்பாளர் பணிக்கு வந்திருந்த பெண்ணோ, நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்குள் நுழைந்தாள்.
"உங்கப் பேர்?" என்று கேட்டுக் கொண்டே அவளது கோப்பை வாங்கிக் கொண்டார் மேனேஜர்.
"மிஸ்.மௌனா! சார்" என்று நிதானமாக விடையளித்தாள்.
அதற்குப் பிறகான நேரங்களில் அவளிடம் பல கேள்விகளைக் கேட்டு, நன்முறையில் நேர்முகத்தேர்வை நடத்தி முடித்தவர்,
"உங்களை இந்த வேலைக்குச் செலக்ட் பண்றோம். ஆல் தி பெஸ்ட். மிஸ். மௌனா" என்று வாழ்த்தி,
அவளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் வைத்தார் மேனேஜர்.
அடுத்த நாளே வேலையில் சேர்ந்து விடுவதாக உறுதி அளிந்திருந்தாள் மௌனா.
ஆனால், அவளது முதல் நாளைய அனுபவம் மறக்கவே முடியாததாக இருக்கப் போகிறது முக்தாவின் வருகையால்.
நீலகண்டனுக்கு மகள் மஹதனைப் பார்க்கச் செல்வது உறுத்தியது தான்!
அவளுடைய ஆசையில் தலையிட வேண்டாம் என்றும் அதற்கான உதவியைச் செய்ய நினைத்து, மஹதன் மறுத்து விட்டாலும், திருமூர்த்தியின் மூலமாக விஷயத்தைச் சாதித்துக் கொள்ள நினைத்தார் நீலகண்டன்.
"மஹத்! நீ என்னைக் கண்டுக்கலைன்னா என்ன? நான் உன்னைப் பார்க்க வந்துட்டே இருப்பேன். இன்னைக்கும், இப்பவும் வரப் போறேன்!" என்று தனக்கு மிக மிகப் பொருத்தமான உடை ஒன்றை ஆசையாகத் தேர்வு செய்து அணிந்து கொண்டாள் முக்தா.
"இந்த தடவை நீ என்கிட்ட காரணம் சொல்லி ஒதுக்கவே முடியாது!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தயாராகினாள் பெண்ணவள்.
வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவுக்குப் பின்னர்,”நங்கையின் மறவோன் பாகம் 1” - யை வாசித்து விட்டு, அடுத்த அத்தியாயத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.
நன்றி
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக