காலையில் விழித்தெழுந்தவர்களுக்கு இயல்பாகவே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
"குளிச்சிட்டு ட்ரெஸ்ஸை மாத்து மௌனா!" என்று மகளிடம் இளஞ்சிவப்பு நிறத்திலான சுடிதாரைக் கொடுத்தார் அன்னபூரணி.
" சரி ம்மா" என குளியலறைக்குள் நுழைந்தாள்.
"இந்தா அகி. இது உனக்கு!" என்று அவளுக்கும் உடை கொடுத்து அனுப்பினார்.
"பூரணி ம்மா! பூ, பழம் எதாவது வாங்கிட்டு வரவா?" என்று மனைவியிடம் கேட்டார் சிவமணி.
"வேண்டாம் ங்க! அவங்க வாங்கிட்டு வந்தா என்னப் பண்றது?" என்றார் மனைவி.
"அப்போ ஸ்வீட், காரம் இப்படி வாங்கலாமா?"
"கொஞ்சமாக ஸ்வீட்ஸ் வாங்கலாம் ங்க. அவங்க சாப்பிடுவாங்களா - ன்னு கூட தெரியாதே!" என்று பதிலளித்தார் அன்னபூரணி.
"கவலையை விடு ம்மா! நான் இனிப்பு மட்டும் வாங்கிட்டு வந்துடறேன். வீட்டிலேயே லெமன் ஜூஸ் மட்டும் போட்டுக் கொடுப்போம்!" என்று கூறி விட்டு கடைக்குச் சென்று விட்டார் சிவமணி.
குளித்து விட்டு வந்த மகளோ,
"அப்பா எங்கே ம்மா?" என்று கேட்டாள்.
"அவர் கடைக்குப் போயிருக்கார் மௌனா.நீ அந்தப் பையனுக்குக் கால் செய்து எப்போ வர்றாங்கன்னு கேளு"
அம்மா சொன்னபடியே மஹதனுக்குக் கால் செய்தாள்.
"ஹலோ மௌனா!" என்று களிப்புடன் அவளது பெயரை உச்சரித்தான்.
"ஹலோ மஹதன்! நீங்க எத்தனை மணிக்கு வர்றீங்க?" என்று கேட்டாள்.
"ரிலாக்ஸ் ம்மா! தடபுடலா எதுவும் அரேன்ட்ஜ் பண்ணாதீங்க.நீங்களே டைம் சொல்லுங்க. நாங்க அப்போவே வர்றோம்" என்று அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தான் மஹதன்.
"அது இல்லை…உங்க வீட்டில்.." எனவும்,
"இப்படி கேட்க சொன்னதே அம்மா தான். அதே மாதிரி, பலகாரம் எதுவும் செய்யாதீங்க. காஃபி போதும்!" என்று அவளை நிதானப்படுத்தினான் மஹதன்.
"ஓகே மஹதன். ஒரு மணி நேரம் கழிச்சு வர்றீங்களா?"
அவள் கூறியதும் கையில் வீற்றிருந்த கடிகாரத்தைப் பார்த்து விட்டு,"சரி மௌனா. நாங்க பத்து மணிக்கே வர்றோம். நீயும் டென்ஷன் ஆகாதே. மத்தவங்களையும் பொறுமையாகத் தயாராகச் சொல்லு" என்று தன்மையாகப் பேசி வைத்தான்.
"பத்து மணிக்கு வர்றதுக்கு ஓகே சொல்லிட்டாங்க அம்மா!" என்ற தகவலை அன்னையிடம் சேர்த்தாள் மௌனா.
அப்போது சிவமணியும் தான் வாங்கி வந்த இனிப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்தார்.
முந்தைய தினமே மஹதன் தன் தோழன் கிஷானுக்கு அழைத்து எல்லாவற்றையும் கூறி விட்டான்.
கிஷானோ,"கங்கிராட்ஸ் டா மஹதா!" என்று தன் வாழ்த்தைப் பரிமாறினான்.
"தாங்க்ஸ் டா"
"உன் கல்யாணத்துக்கு முக்தா வருவா தான?"
" உனக்காக நிச்சயமாக முக்தாவை இன்வைட் பண்ணுவேன் டா!" என்று நண்பனுக்கு ஆறுதல் வாக்கு அளித்திருந்தான் மஹதன்.
"நாம பூ வாங்கிட்டுப் போகனும் மஹதா!" என்றார் கௌசல்யா.
"போகும் வழியில் வாங்கிடலாம் அம்மா!" என்று கூறி தன் செல்பேசியை ஆராய ஆரம்பித்து விட்டான்.
அப்பொழுது தான் தனக்குத் தகவல் தெரிவிப்பவனிடம் இருந்து செய்தி வந்திருப்பதைக் கவனித்தான்.
அதைப் பார்த்தவுடன் அவனுக்குக் கால் செய்து விட்டான்.
"ஹலோ!" என்று மஹதனது குரலில் கோபமாக ஒலித்தது.
மறுமுனையில் இருப்பவனோ,
"விடியற்காலையிலேயே வந்துட்டாங்க சார்!" என்றான்.
" இங்கே தான் வருவாங்க. ஒரு மணி நேரம் வரைக்கும் நீ ஃபாலோ பண்ணு.அதுக்கப்புறம் நான் பாத்துக்கிறேன்" என்று கூறி வைத்தான் மஹதன்.
இன்றைய நாளைக் கெடுக்கவே வந்திருக்கிறார்கள் போலும் என்று அவனது முகம் கோபத்தில் சிவந்தது.
யாராக இருக்கும்?
"கையோட சாப்பிட்டுப் போவோம் தீபக்" என்று பேருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்த லலிதா மகனிடம் கூறினார்.
ஆம்! அவர்களைப் பற்றி தான் மஹதனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் சில மணித்துளிகளில் மௌனாவைப் பார்க்கப் போகும் முன்னர் பெற்றோரை அழைத்து விஷயத்தைச் சொல்லி விட்டான் மஹதன்.
"முதலில் போய் கல்யாணத்தைப் பத்திப் பேசி முடிச்சிட்டு அப்பறம் அவங்களை ஒரு கைப் பார்த்துடலாம்" என்றார் கௌசல்யா.
திருமூர்த்தி, "ஆமாம் மஹதா! அந்தப் பொண்ணுக்குத் துணையாக நாமளும் இருப்போம்" என்றார்.
கடிகார முள் தன் பணியைச் செவ்வனே செய்ததால், பத்து மணிக்கு வந்து நின்று இருந்தது.
"கிளம்பலாம் அம்மா! அப்பா!" என்று அவர்களை அழைத்துக் கொண்டு தன்னவளையும், அவளது குடும்பத்தையும் பார்க்கப் புறப்பட்டான்.
"ஏறுங்க அம்மா!" என்று தன் அன்னையை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அகதாவைச் சந்திக்கச் சென்றான் தீபக்.
"எப்போ வேணும்னாலும் வந்திடுவாங்க!" என்று பரபரத்தார் அன்னபூரணி.
"நாற்காலி இல்லை.சோஃபாவில் உட்கார சொல்லிடலாம்" என்று நீள்சாய்விருக்கை சுத்தமாக உள்ளதா? என ஆராய்ந்தார் சிவமணி.
அந்த நேரத்தில், காரின் ஓசை இவர்களின் காதுகளுக்கு எட்டியது.
"வந்துட்டாங்க மௌனா" என தோழிக்கு அறிவித்தாள் அகதா.
அதைக் கேட்டதும் பூவாக மலர்ந்து, விரிந்தது மௌனாவின் முகம்.
சொல்லொண்ணா உற்சாகமும், ஆவலும் அவளுக்குள் பீறிட்டுக் கொண்டு இருந்தது.
மற்றவர்கள் எல்லாரும் வாசலைத் தாண்டி அவர்களை வரவேற்கச் சென்று விட, வேகமாக துடிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, சுவற்றில் சாய்ந்து நின்றாள் பெண்ணவள்.
"வாங்க ! வாங்க !" என்று அவர்களை வரவேற்றவாறே உள்ளே அழைத்து வந்தனர்.
திருமூர்த்தி மற்றும் கௌசல்யா தம்பதியர் இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே உள்ளே நுழைந்தனர்.
"வணக்கம் ஆன்ட்டி, அங்கிள். வாங்க மஹதன்" என்று அகதா கூட அவர்களிடம் சகஜமாகப் பேசினாள்.
ஆனால், மௌனாவின் மான் விழிகளோ, தன் கண்ணாளனைப் பார்வையால் அளவெடுத்தது.
எப்போதும் போல ஃபார்மல் உடையில், ஆனால் இன்று அவளது கண்களுக்கு மட்டும் அழகானவனாக தெரிந்தான் மஹதன்.இங்கிருந்தே அவனை ரசிக்கத் துடித்தக் கண்களை கண்டிக்கும் எண்ணம் இல்லாமல் அப்படியே சிலையாக நின்றிருந்தாள் மௌனா.
கண்களைச் சுருக்கி மஹதன் இவளைப் பார்த்த விதத்தில், மனம் அவனிடம் செல்லத் தொடங்கிய போது,
"மௌனா ம்மா! நல்லா இருக்கியா" என்று அவளிடம் பேச்சுக் கொடுத்தார் கௌசல்யா.
"ஆங்!! நல்லா இருக்கேன் ங்க" என்று தன்னிலை அடைந்தாள்.
தன்னைப் பார்த்து இப்படி வசீகரமாகப் புன்னகை உதிர்த்துக் கொண்டிருப்பவனிடம் இருந்து, விழிகளை மீட்க வழி தெரியாமல் தவித்தவளது நிலையைப் புரிந்து கொண்டு தோழியின் அருகில் நின்று கொண்டாள் அகதா.
"உட்காருங்க!" என்று அமரச் சொன்னார் அன்னபூரணி.
"மௌனா! அம்மா கிச்சன் போனால் சரியாக இருக்காது. அதனால் நான் போய் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன். நீ அவங்கப் பக்கத்தில் போய் நில்லு" என்று அவளை அன்னபூரணியின் அருகில் நிற்க வைத்து விட்டு, சமையலறைக்குச் சென்றாள் அகதா.
"எங்களைப் பத்தி உங்கப் பொண்ணு சொல்லி இருப்பாங்களே?" என்று பேச்சை ஆரம்பித்தார் திருமூர்த்தி.
"ஆமாம் ங்க" என்று அவர்களது உயரத்திற்கு மதிப்புக் கொடுப்பது போல ஓரிரு வார்த்தையில் பதில் சொன்னார் சிவமணி.
"இங்கே பாருங்க. நீங்க எங்க பணத்தையோ, சமுதாயத்தில் இருக்கிற செல்வாக்கையோ பார்த்து ஒதுங்கிப் போக மட்டும் செஞ்சிடாதீங்க! எங்களோட மகனுக்கு உங்கப் பொண்ணு மேல காதல். அதே மாதிரி தான் உங்கப் பொண்ணுக்கும் இவனைப் பிடிச்சிருக்கு. அது கல்யாணம்ன்ற பந்தத்தில் அழகாகப் பொருந்திப் போகனும் அதுக்காக தான் பேச வந்திருக்கோம். இப்படி நர்வஸ் ஆகாதீங்க!" என்று அவர்களிடம் தெளிவாக கூறினார் கௌசல்யா.
"எனக்கும் முதலில் ஸ்டேட்டஸ், பணம்ன்னு தான் தோணும். ஆனால் அதை விட என் பையன் கொடுத்த ஒரு நம்பிக்கை அதுவே வாழ்நாள் முழுவதும் என்னை வாழ வச்சிடும்" என்று தன் நண்பன் நீலகண்டனுக்கும், தனக்கும் இடையேயான சிக்கலில் மகன் தனக்குக் கொடுத்த வார்த்தையைப் பற்றியும், நம்பிக்கையைப் பற்றியும் விளக்கமாக கூறினார் திருமூர்த்தி.
அதைக் கேட்டு தன்னவனை நினைத்து உவகை கொண்டாள் மௌனா.
இவர்கள் பேச்சிற்கு இடையே காஃபி கொடுத்து உபசரித்து விட்டு ஒதுங்கிக் கொண்டாள் அகதா.
தன் மகனைப் பற்றிக் கூறிய அந்த தந்தையின் கண்களில் மஹதனை நினைத்து அபாரமான பெருமை ஒளிர்ந்தது.
"அப்பா!" என்று புகழாரம் சூட்டியவரைக் கையமர்த்தப் பார்த்தான் மைந்தன்.
"எனக்கும் உன்னைப் பத்திப் பேச நிறைய இருக்கு. நீ சும்மா இரு" என்றார் திருமூர்த்தி.
"உங்களுக்கு எங்கப் பொண்ணை எப்படி பிடிச்சது?" என்று கேட்டார் சிவமணி.
அதற்கு எதிரில் இருந்தவர்களோ,
" அவங்களுக்குள்ளே நடந்த எல்லா கசப்பான, இனிப்பான பேச்சுக்களை எல்லாம் சொல்லிட்டுத் தான் என் பையன் மௌனாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னே வந்து சொன்னான் சம்பந்தி! நாங்களும் உங்களை மாதிரி தான் திகைச்சுப் போனோம். ஆனால் அவனுக்கும், உங்க மகளுக்கும் இருக்கிற நம்பிக்கையை அவங்க இரண்டு பேர் மேலும் வைக்கலாமே! அதில் தப்பு என்ன இருக்குன்னு யோசிச்சு சம்மதிச்சுட்டோம்" என்ற கூறினார் கௌசல்யா.
இருவரும் காபியைப் பருகி விட்டு, "காஃபி சூப்பர் ம்மா!" என அகதாவையும் பாராட்டத் தவறவில்லை.
"தேங்க்ஸ் ஆன்ட்டி, அங்கிள்" என அவளும் நன்றி தெரிவித்தாள்.
இன்னும் தன் கோப்பையைக் கையில் எடுக்காமல் இருந்தான் மஹதன்.
"உங்களுக்கு காஃபி பிடிக்காதா மஹதன்?" என்றாள் அகதா.
காதைக் கூர் தீட்டிக் கொண்டு அவனது பதிலிற்காக காத்திருந்தாள் மௌனா.
"பிடிக்கும் அகதா. இதோ எடுத்துக் குடிக்கிறேன்" என்று கோப்பையை எடுத்து மெதுவாக உறிஞ்சிக் கொண்டே தன்னவளையும் பார்வையால் பருகினான் மஹதன்.
"நீங்க என்ன சொல்றீங்க சம்பந்தி? நான் பூ வேற வாங்கிட்டு வந்துட்டேன்" என்று இப்போதே பூ வைத்துச் சென்று விடும் அவசரத்தில் இருந்தார் கௌசல்யா.
"நீங்க சொன்னதையே தான் நாங்களும் சொல்லப் போறோம் சம்பந்தி! இந்தச் சந்திப்பு எப்படி இருக்கப் போகுதுன்னு எங்களுக்குப் பதட்டமாக இருந்துச்சு. அதையெல்லாம் ஒன்னும் இல்லாமல் ஆக்கிட்டீங்க! எங்களோட நம்பிக்கையையும் சேர்த்து மஹதன் மேலேயும், எங்கப் பொண்ணு மேலேயும் வைக்கிறோம்! வாழ்க்கை முழுவதும் அந்த ஆசீர்வாதம் அவங்களுக்கு நிறைஞ்சு இருக்கட்டும் " என்று வாழ்த்தியும் விட்டனர் மௌனாவின் பெற்றோர்.
கண்ணிலிருந்து நீர் மணிகள் சிந்த, தன் பெற்றோரை அணைத்துக் கொண்டாள் மௌனா.
அகதாவிற்கோ சந்தோஷம் தாளவில்லை!
"கங்கிராட்ஸ் மஹதன்!" என்று அவரனுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, தோழியைக் கட்டிக் கொண்டாள்.
"நம்ம அப்பா, அம்மா உடனே சம்மதிச்சுட்டாங்களேன்னு நினைச்சுடாதீங்க. பெத்தவங்களுக்குப் பிள்ளைங்களோட ஒவ்வொரு அசைவும் தெரியும்ன்ற மாதிரி அவங்களோட ஆசையையும், கண்களில் உண்மையையும் ஈஸியாக கண்டுபிடிக்கத் தெரியும். அதை வச்சு தான் நாங்க சம்மதிச்சு இருக்கோம்" என்றார் கௌசல்யா.
"கரெக்ட்டு ம்மா!" என்று மனைவிக்கு சபாஷ் போட்டார் திருமூர்த்தி.
"நமக்கு இதிலும் ஒத்துப் போகுது சம்பந்தி!" என்று கூறினார் அன்னபூரணி.
"அப்பறம் ஆன்ட்டி, அங்கிள்!" என்று ஆரம்பித்தவளுக்கு வேலையே வைக்காமல் வந்து சேர்ந்தனர் தீபக் மற்றும் அவனது அன்னை லலிதா.
"என்ன கார் நிக்குது?" என்று முணுமுணுத்தவாறே யார் இருக்கிறார்கள்? என்று கூட ஆராயாமல் ஜம்பமாக உள்ளே வந்த இருவரையும் பார்த்து பீதி அடைந்தாள் அகதா.
தன்னைத் தேடி வருவதற்கு, போயும் போயும் இந்த நாளைத் தான் தேர்ந்தெடுத்தார்களா? என்று அவளுக்கு ஒரு பக்கம் சினம் வேறு எகிறியது.
"இவங்க தானா?" என அன்னபூரணியும், கௌசல்யாவும் ஒரே குரலில் கேட்டனர்.
அதில் வெகுவாக திடுக்கிட்ட அகதாவோ, மஹதனின் தாயாரை அதிர்ச்சியுடன் பார்த்தாள். மௌனாவும் அவரைப் புரியாமல் பார்த்தாள்.
"மஹதன் சொல்லிட்டான் ம்மா!" என விளக்கினார் கௌசல்யா.
"பணக்காரவங்களா இருப்பாங்களோ? காரு யாருது?"
"ஆமாம் அம்மா! பணக்காரவங்க தான். அதோ அங்கே சோபாவில் உட்கார்ந்து இருக்கானே! அவன் தான் என்னை அடிச்சான்" என்று தன் அன்னைக்கு மஹதனை அடையாளம் காட்டினான்.
அவனை இங்கே தீபக் எதிர்பார்க்கவே இல்லை! அன்று வாங்கிய அடியில் தோன்றிய வலி இன்னும் குறையவில்லை. அதற்குள் மற்றொரு சம்பவமா? என்ற ரீதியில் அவன் முகம் அஷ்ட கோணலானது.
" இதையெல்லாம் கவனமாகப் பேசிக் கையாளனும்டா மகனே! உன் பொண்டாட்டி இருக்காளான்னுப் பாரு?" என்று மகனிடம் கேட்டார் லலிதா.
சற்று தள்ளி இறுகிப் போய் நின்றிருந்தவளை அடையாளம் கண்டு கொண்டான் தீபக்.
"அங்கே நிற்கிறா அம்மா" என்றுரைத்தான்.
"அமைதியாகப் பேசி அவளை மட்டும் கூப்பிட்டுப் போயிடுவோம். நான் முதலில் ஆரம்பிக்கிறேன்!"
"பெரிய வீட்டு ஆளுங்களா இருக்கீங்க! ஏதோ முக்கியமான விஷயமாகத் தான் பேச வந்திருப்பீங்க. நான் தான் லலிதா. இவன் என் மகன் தீபக். அகதா தான் என்னோட மருமகள்! அவ கூட தான் மௌனா பொண்ணு தங்கி இருக்கிறதா சொன்னா. நீங்க அந்தப் பொண்ணை தான் பார்த்துப் , பேச வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். சந்தோஷமாகப் பேசுங்க. அதுக்கு முன்னாடி அகதா எதுக்கு இங்கே இடைஞ்சலாக இருந்துக்கிட்டு! நான் என்னோட மருமகளைக் கூப்பிட்டுப் போறேன்!" என்று பவ்யமாகச் சொன்னவரையும், அவர் அருகில் அப்பாவி போல் நடித்துக் கொண்டு இருந்தவனையும் பார்த்த அகதாவிற்குப் பொறுமை காற்றில் பறந்தது.
"இங்கே பாருங்க!" என்று எகிறியவளிடம்,
"இரு அகி ம்மா! அவங்க அட்ரஸ் மாறி வந்துட்டாங்க போல இருக்கு" என்று அமைதிப்படுத்தினார் அன்னபூரணி.
பின்னர் லலிதாவிடம்,
"அவ எங்களோட மக. உங்க கூட எல்லாம் அனுப்ப முடியாது" என்று காட்டமாக கூறினார்.
தன் அன்னை ஆரம்பித்துச் சிறப்பாக முடித்தும் வைத்து விடுவார் என்ற எண்ணத்தில் மௌனாவிற்கும் இறுக்கம் தளர்ந்தது.
"அம்மாடி மௌனா! கால் வலிக்கும். நீ போய் மாப்பிள்ளைப் பக்கத்தில் உட்கார்" என்று சிவமணி கூறியதும்,
துள்ளிக் குதித்த மனதுடன் மஹதனின் அருகில் அமர்ந்து விட்டாள் மௌனா.
அவரும் திருமூர்த்தியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.
"என்னது! உங்கப் பொண்ணா?" என்று வாய் பிளந்து நின்றனர் தாயும், மகனும்.
மஹதனின் மேலுள்ள பயத்தால் , தீபக்கால் மனைவியை எட்ட நின்று முறைக்க மட்டுமே முடிந்தது.
அவனைத் தன் கழுகுப் பார்வையால்
துளைத்து எடுத்தவனிடம்,
"மஹத்! கூல்!" என்று அவனுடன் தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டாள் மௌனா.
"அகதா ம்மா! இவங்க என்ன எல்லாமோ சொல்றாங்க? எங்க மேல உனக்குக் கோபம் இருக்கும் தான்! அதுக்காக நாங்க உறவே இல்லைன்னு ஒதுக்கிட்டு, சம்பந்தமே இல்லாத இவங்களைப் பேச விட்டு வேடிக்கைப் பாக்குறியே!" என்று நீலிக் கண்ணீர் வடித்தார் லலிதா.
"அவங்க சரியாகத் தான் சொல்றாங்க! நீங்க பிரச்சினை பண்ணாமல் கிளம்புங்க!" என்று அவர்களை விரட்டினார் கௌசல்யா.
இருவருடைய கணவன்மார்களும் தங்களது மனைவிகளின் பேச்சுத் திறமையையும், ஆளுமையையும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் , எக்காரணம் கொண்டும் மஹதனுடைய கரத்தை விலக்காமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் மௌனா.
"நீயே எழுந்திரிச்சுப் போய் அவனை அடின்னு சொன்னாலும் நான் பேக மாட்டேன் ம்மா! புரபோஸல் தான் கிடைக்கல. அட்லீஸ்ட் உன் கையைக் கொஞ்ச நேரம் பிடிச்சிக்கிறேனே!" என்று பிடியின் இறுக்கத்தைக் கூட்டினான்.
அதில் வெட்கம் கொண்டு,
"அச்சோ! போங்க மஹத்!" என்று அவனிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள்.
"அது எப்படிங்க முடியும்? உங்களை மாதிரி பணக்கார ஆளுங்க இல்லை தான். ஆனால் பொய் சொல்ல மாட்டோம். அவ என் பையனோட பொண்டாட்டி. என்னோட மருமக" என்றார் லலிதா.
"அட ஆமாங்க! வேணும்னா இவரைக் கூட கேட்டுப் பாருங்க" என்று மஹதனைக் காட்டி அவனிடம்,
"சார்! உங்களுக்கு என்னை ஏற்கனவே தெரியும்ல? அன்னைக்குக் கூட ரோட்டில் பிரச்சினை ஆச்சே!" என்று தங்கப் பதக்கம் வாங்கிய பெருமையைக் கூறுவது போல கேட்டான் தீபக்.
"இவன் ஒருத்தன் சுவிட்சுவேஷன் தெரியாமல் சீண்டிப் பார்க்கிறான்!" என்றாள் மௌனா.
மஹதனோ ஒரு வார்த்தைப் பேசாமல் தீபக்கை விழிகளால் எரித்தான். அதன் அபாயத்தை உணர்ந்தவனோ, வாயை மூடிக் கொண்டான்.
"எங்க மாப்பிள்ளை கிட்ட என்னப் பேச்சு உங்களுக்கு? எதுவாக இருந்தாலும் எங்க கிட்ட பேசு ப்பா!" என்று கடுமையாக கூறினார் அன்னபூரணி.
அதில் கோபம் வந்ததால் , பயத்தையும் மீறி, "ப்ச்! அவ என்னோட பொண்டாட்டி ங்க!" என்று மனைவியிடம் செல்ல முயன்றான் தீபக்.
இதற்கு மேல் தாங்காது என்பது போல், "உனக்குப் பொண்டாட்டியா வேணும்? பணம் தான் வேணும்னு சொல்லுவியே? நீங்க புதுசா பாசம் எல்லாம் காட்டுறீங்க?" என்று கணவனையும், மாமியாரையும் நக்கலாகப் பார்த்தாள் அகதா.
"எல்லாம் நம்ம ஊருக்குப் போய்ப் பேசலாம் அகி ம்மா" என்று மனைவியிடம் குழைந்தான் தீபக்.
"அதெல்லாம் வர முடியாது. இவங்க தான் என் அப்பா, அம்மா! இவங்க கூட தான் இனிமேல் நான் இருப்பேன். ஒழுங்கு மரியாதையாக இடத்தைக் காலி பண்ணுங்க. இல்லைன்னா நடக்கிறதே வேற!" என்று எச்சரித்தாள்.
"பொறுத்தது போதும்ன்னு பொங்கி எழுந்துட்டா!" என தன்னவனிடம் கூறினாள் மௌனா.
"ப்ளீஸ் அகி! என்னை மன்னிச்சு ஏத்துக்கோ" என்று வெட்கமே இல்லாமல் அவள் முன்னால் மண்டியிட்டு விட்டான் தீபக்.
"பணம் வேணும்னா இப்படி கூட காலில் விழத் தோணும்ல?" என்று அருவருப்புடன் கூறினாள் அகதா.
அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அடி கொடுக்கப் பரபரத்தக் கைகளை அடக்கிக் கொண்டு இருந்தான் தீபக்.
"இதைக் கூட நீ நம்பலையா அகி?" என்று தன் நாடகத்தை ஆரம்பிக்கலானார் லலிதா.
"கல்யாணப் பேச்சு நடக்கிற வீட்டில் வந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்கிறியே? இந்தா ப்பா! உங்க அம்மாவைக் கூப்பிட்டுக் கிளம்பு" என்று உத்தரவிட்டார் கௌசல்யா.
"நான் வேலையை விட்டுட்டு, இவங்க கூட ஊருக்குப் போய்த் தங்கப் போறேன். என்னால இனிமேல் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை" என்று தடாலடியாக கூறினாள் அகதா.
"வேலையை விடப் போறியா?" என்று அதிர்ந்தார்கள் தாயும், மகனும்.
"சும்மா சும்மா ஷாக் ஆகாமல் வேற பொழப்பை போய்ப் பாருங்க" என்றார் அன்னபூரணி.
வேறு எதையோ சொல்லத் தொடங்கியவர்களிடம், "இன்னும் உங்களால் அகதாவுக்குத் தொந்தரவு வந்தால், நான் என் பாணியில் உங்ககிட்ட பேச வேண்டியது வரும்!" என்று தன் சிம்மக் குரலில் கர்ஜித்தான் முஹதன்.
அந்தக் குரல் தந்த நடுக்கத்தையும், அதிர்வையும் தன்னுள் உணர்ந்த தீபக்கோ, "பணம் வேண்டாம் அம்மா! உயிர் போதும்! தனியாகச் சிக்குவா. அப்போ பாத்துக்கலாம். இப்போ போயிடலாம்" என்று தாயின் காதில் சொன்னான்.
அவன் கூறுவதும் சரியே! என நினைத்த லலிதாவோ கிடைத்த வாய்ப்பை கை விடாமல், "நாங்க போயிட்டு வர்றோம் டா மருமகளே!" என்று அழுவதைப் போல பாவனை செய்து விட்டு மகனுடன் வெளியேறினார்.
"என்னா ம்மா ரெண்டு பேரும் பேசி இருக்கீங்க!" என இருவரையும் பாராட்டினர் திருமூர்த்தி மற்றும் சிவமணி.
மௌனாவும் , "ஆமாம் அம்மா! அத்தை! சூப்பர்! அகதா நீயும் தான் பிச்சு உதறிட்ட" என்று தன் பாராட்டைத் தெரிவித்தாள்.
கௌசல்யாவைப் பார்த்து,"உங்களை நான் எதிர்பார்க்கலை ஆன்ட்டி!" என்றாள் அகதா.
"அதான் சொன்னேனே ம்மா! பையன் எல்லாத்தையும் சொல்லியாச்சு. அவங்க வேற லேடி. சோ, நாங்கப் பேசினா தான் கரெக்டா இருக்கும்னு சம்பந்திக்குக் கம்பெனி கொடுத்தேன்!" என்று புன்னகைத்தார்.
பிறகு மஹதன் மற்றும் மௌனாவிடம் , "இப்படியே கையைக் கெட்டியாகப் பிடிச்சுக்கோங்க. நான் மௌனா தலையில் பூ வச்சு விட்டுடறேன்" என்று அன்னபூரணி மற்றும் சிவமணியிடமும் ஒரு வார்த்தைக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா.
தன் கையைச் சிறை பிடித்திருந்தவனோ, அதை மேலும் அழுந்துப் பற்றிக் கொண்டான்.
"கெட்டியாகப் பிடிச்சு இருக்கீங்களாக்கும்" என்று மஹதனிடம் செல்லமாக நொடித்துக் கொண்டாள் மௌனா.
" நான் ஸ்வீட் எடுத்துட்டு வர்றேன்" என்று இனிப்பு அடங்கிய தட்டை எடுத்து வந்து அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார் அன்னபூரணி.
"ஒரு நல்ல காரியம் நடக்கிறதுக்கு முன்னாடியே எல்லா கெட்டதும் விலகிடுச்சு பாருங்க! இப்படியே உங்க வாழ்க்கையில் வரப் போகிற கெட்டது எல்லாம் உடனே விலகிடனும்" என்று பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் தன் வருங்கால மருமகளின் தலையில் பூவைச் சூடினார் கௌசல்யா.
"எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க! அவங்க பிரச்சினை பண்ண வருவாங்கன்னு தெரியும்! ஆனால் இன்னைக்கே வந்து நிற்பாங்கன்னு தெரியல" என்று அனைவரையும் பார்த்து கை குவித்து மன்னிப்பு வேண்டினாள் அகதா.
"அகி! நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல!" என்று அவளைக் கடிந்து கொண்டார் அன்னபூரணி.
"அட விடு ம்மா! எந்த பிரச்சனையுமே இல்லாமல் சப்புனு முடிஞ்சுருமோன்னு நினைச்சேன்! இப்போ தான் திருப்தியாக இருந்துச்சு. அதுக்குத் தாங்க்ஸ்!" என்று அவளுக்கு நன்றி தெரிவித்தார் கௌசல்யா.
அதைக் கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் நகைப்பு குறைய வெகு நேரம் தேவைப்பட்டது.
"அம்மா! இதெல்லாம் ரொம்பவே ஓவர்!" என்றான் மஹதன்.
"விட்றா! விட்றா!" என்று சொல்லி நகைத்தார்.
திருமூர்த்தி, "அப்பறம் சம்பந்தி மத்தது எல்லாம் உடனடியாக நடக்கட்டும்! நாள், கிழமை எல்லாம் பார்க்கலாம்" என்றார்.
அதற்கு சிவமணியோ, "பூ வைக்கிறது முடிஞ்சுடுச்சே ங்க சம்பந்தி. அடுத்து நிச்சயதார்த்தம் தான்!" என்று கூறினார்.
"ம்ம்! அந்த வேலையைத் தொடங்குவோம். மௌனா ம்மா நீயும், அகதாவும் அப்பா, அம்மா கூட ஊருக்குக் கிளம்புறீங்களா? இல்லை நம்ம வீட்டில் வந்து தங்கிக்கிறீங்களா?" என்று கேட்டார் கௌசல்யா.
இதைக் கேட்டதும் மௌனாவைப் பார்த்துக் கண் ஜாடை காட்டினான் மஹதன்.
"மகனே! நாங்களும் இருக்கோம்!" என்று அவனைக் கிண்டல் செய்தார் திருமூர்த்தி.
தந்தையின் கிண்டலில் வாலைச் சுருட்டிக் கொண்டான் மஹதன். அதைக் கண்டு தன் தெற்றுப் பல் தெரிய சிரித்தாள் மௌனா.
"உங்களுக்கு சிரமம் வேண்டாம் சம்பந்தி. இவங்க ரெண்டு பேரோட கல்யாணம் முடியுற வரைக்கும் , வீட்டு ஓனர் கிட்ட பேசிட்டு, நாங்களும் இங்கேயே தங்கிக்கிறோம். அந்த தீபக்கும், அவனோட அம்மாவும் வந்து பிரச்சினை கொடுத்தா நாங்க பாத்துக்குவோம்ல!" என்றார் அன்னபூரணி.
"நைஸ் ஐடியா!" என்று கூறினார் கௌசல்யா.
விலோசனங்கள் தன் மனதிற்கினியவனைப் பார்த்திருக்க , அனைத்தும் நன்மையாக முடிந்ததை எண்ணி இரு குடும்பங்களும் பேரானந்தம் கொண்டனர்.கரை கடந்த மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.இனிப்பு ஊட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
"நாங்க கிளம்பறோம் சம்பந்தி!" என எழுந்து கொண்டனர் மஹதனும், அவனது பெற்றோரும்.
"சாப்பிட்டுப் போகலாமே?" என்று அவர்களிடம் கேட்டார் சிவமணி.
"இருக்கட்டும் சம்பந்தி. இங்கே தானே இருக்கப் போறீங்க? அப்போ ஒரு தடவை வந்து சாப்பிட்டால் போச்சு" என்றார் திருமூர்த்தி.
"போயிட்டு வர்றோம் சம்பந்தி! சந்தோஷமாக இருக்கனும் மௌனா! தைரியமாக இருக்கனும் அகதா!" என்று இருவரிடமும் விடைபெற்றனர்.
அவர்கள் மெல்ல நடந்ததும் மஹதன்,
"வர்றேன் அத்தை, மாமா" என்று முறையாக விடை பெற்றுக் கொண்டு, தன் மனம் கவர்ந்தவளிடம் வந்தான்.
"நான்… போயிட்டு வர்றேன் மௌனா" என்று அவளைப் பார்த்துக் குறும்பாகச் சொல்லி விட்டு விஷமப் புன்னகைப் புரிந்தான்.
"ம்ஹ்ம்… ம்ஹ்ம்" என்று
தன் பங்கிற்கு குறுநகை செய்தாள் மௌனா.
"சார்! என்னைத் தெரியுதா உங்களுக்கு?" என்று பாவமாக கேட்டாள் அகதா.
"தெரியுது ம்மா! எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லனும். சரியா?" என்று அவளிடம் கூறி விட்டு வெளியேறினான் மஹதன்.
"அப்பா! அம்மா! எல்லாத்துக்கும் தாங்க்ஸ்" என்று காலில் விழுந்து வணங்கி எழுந்தாள் மௌனா.
"நீ மட்டுமா ? நானும் தான்!" என்று சிவமணி மற்றும் அன்னபூரணியின் கால்களைத் தொட்டு நன்றி கூறினாள் அகதா.
"எழுந்திருங்க டா ம்மா!" என்று அவர்களைத் தூக்கி விட்டனர்.
மனம் நிறைந்து போனதால், இறைவனுக்கு நன்றி சொல்வதற்கு வேண்டி, நால்வரும் கோயிலுக்குப் படையெடுத்தனர்.
"ஹப்பாடா! பெரிய விஷயத்தை நடத்தி முடிச்சுட்டோம் ங்க!" என்று கணவனிடம் கூறினார் கௌசல்யா.
"ஆமாம் கௌசி. நானும் இதை நீலகண்டன் கிட்ட சொல்லனும்" என்றார் திருமூர்த்தி.
"நானும் கிஷான் கிட்ட சொல்லனும் ப்பா" என்று வீட்டை அடைந்ததும் தன் அறைக்குள் புகுந்து கொண்டு நண்பனுக்குக் கால் செய்தான் மஹதன்.
"மஹதா! சிறப்பாக நடந்துச்சா?" என்று எடுத்ததுமே ஆர்வமாக வினவினான்.
"செம்மயா நடந்து முடிஞ்சது கிஷான்" என்று கூறினான்.
"ஓஹ் பாரேன்! அவ்ளோ களேபரமாகவா இருந்துச்சு?" என்றான் நண்பன்.
"என்னை விட்ருந்தா அடிச்சு துவம்சம் பண்ணி இருப்பேன் டா" என்று தீபக் மற்றும் அவனது அன்னையின் நடவடிக்கையைப் பார்த்துக் கொந்தளித்ததைக் கூறினான் மஹதன்.
"சரி. மௌனா வேலைக்கு வருவாங்களா?" என்றான் கிஷான்.
"தெரியலைடா! அவளே உனக்குக் கால் பண்ணி சொல்லுவா. நான் மீதி நான் நேரில் வந்து உங்கிட்ட பேசறேன் கிஷான்.பை " என்று அழைப்பைத் துண்டித்து விட்டான் மஹதன்.
"ஹலோ சார்! நான் இவ்ளோ நாள் லீவ் போட்டதுக்கு எதாவது பனிஷ்மெண்ட் தருவீங்களா?" என்று தன் முதலாளி கிஷானுக்குக் கால் செய்து கேட்டாள் மௌனா.
"தேவையில்லை மிஸ். மௌனா. நீங்க ஏன் லீவ் எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே!" என்று நமுட்டுச் சிரிப்பைச் சிந்தினான் கிஷான்.
"சார்" என்று அசடு வழிந்தாள்.
"ரிசைனிங் லெட்டர் எப்போ கொண்டு வர்றீங்க?" என்று வினவினான்.
"அய்யோ சார்! நான் இப்போ வேலையை ரிசைன் பண்ற ஐடியாவில் இல்லை. கல்யாணத்துக்குக் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் வேலை பார்க்கிறேனே?" என்று அனுமதி வேண்டினாள்.
"உங்க இஷ்டம் மிஸ். மௌனா. என்னோட விஷ் - யையும் சொல்லிக்கிறேன்" என்று வாழ்த்து தெரிவித்தான் கிஷான்.
"உங்க ஃப்ரண்டுக்கும் வாழ்த்துச் சொல்லி இருப்பீங்களே?" என்று கேட்டாள்.
"எப்பவோ சொல்லியாச்சு ங்க" என்று பெருமையாக கூறினான்.
"அதானே பார்த்தேன் சார். ஒரு வேண்டுகோள் இருக்கு! நான் அங்கே வேலைக்கு வர்றதை அவர்கிட்ட சொல்லிடாதீங்க! ப்ளீஸ்!" என்று கோரிக்கை விடுத்தாள் மௌனா.
"சொல்லவே மாட்டேன். நீங்க வரும் போது எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க" என்று வைத்து விட்டான்.
கால் கொலுசு சத்தமிட்டுக் கொண்டு இருக்க, குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மௌனா.
"ஆரம்பிச்சுட்டியா மௌனா?" என வேலைக்குச் செல்ல தயாராகி இருந்தவளைப் பார்த்துக் கேட்டாள் தோழி.
"ஏன் அகி?" என்று கேட்டார் அன்னபூரணி.
"அவ முதல் முதல்ல வேலைக்குப் போகும் போதும் இப்படித்தான் விடாமல் நடந்துக்கிட்டு இருந்தா அம்மா!" என்று விளக்கினாள் அகதா.
"ஓஹோ! அப்போ நடந்த சரி. இப்போ எதுக்கு இப்படி நடக்குற மௌனா?" என்று மகளிடம் கேட்டார் அன்னை.
"அதுவா ம்மா! அவரைப் பார்க்கப் போறேன் அதான்" என்று நாணத்தால் முகத்தை மூடினாள் மகள்.
"நீ எப்பவும் வேலைப் பார்க்கிற ஹோட்டலுக்குப் போகலையா மௌனா?" என விசாரித்தார் சிவமணி.
"அங்கே தான் ப்பா போகப் போறேன். ஆனால் மஹதன் வர வாய்ப்பு இருக்கு" என்று கூறிக் கொண்டு தோற்பையை மாட்டிக் கொண்டாள் மௌனா.
"ஆல் தி பெஸ்ட் மௌனா!" என்று புன்னகை முகமாக அவளை வழியனுப்பி வைத்தார்கள்.
முன் அலுவலக வரவேற்பாளர் வேலைக்காக தனக்குக் கொடுத்த இடத்தை அடைந்து, நாற்காலியில் அமர்ந்து , குமிண்சிரிப்புடன் வேலையைத் தொடர்ந்தாள் மௌனா.
அதே நேரத்தில், உள்ளே வந்தான் கிஷான்.
"குட் மார்னிங் சார்" என்று வழக்கம் போல அவனுக்கு வணக்கம் வைத்தாள்.
"வெரி குட் மார்னிங்" என்று தலையசைத்து விட்டு அலுவலக அறைக்குச் சென்று விட்டான்.
சில மணித்துளிகள் கழிந்ததும், அந்த தங்கும் விடுதியின் வாசலில் வந்து நின்றது கார்.அதிலிருந்து இறங்கி வந்தான் மஹதன்.
நேராக மௌனாவின் இருப்பிடத்திற்கு வந்தவனோ, "ஹேய்! குட் மார்னிங்" என்று இளநகையுடன் கூறினான்.
"குட் மார்னிங் சா… ர்!" என்று நிமிர்ந்தவளுக்கு வழக்கம் போல ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்திருந்தான் அவளவன்.
"கிஷானைப் பார்க்க வந்தேன் மேடம்!" என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறினான்.
அவளும், "யுவர் குட் நேம் சார்?" என்று ஒன்றும் தெரியாதவளைப் போல வினவினாள் மௌனா.
"மஹதன்!" என கண்களில் போட்டிருந்த கூலரைக் கழட்டினான் ஆடவன்.
"ம்ஹூம்! ஓகே சார். நான் சார்க்குக் கால் பண்றேன்" என்று தொலைபேசியில் கிஷானுக்கு அழைத்தாள்.
"ஹலோ சார்! உங்களைப் பார்க்க மஹதன் சார் வந்திருக்கார்" என்று அறிவித்தாள்.
"உங்க ரெண்டு பேரோட குறும்புக்கு நான் தான் கிடைச்சேனா? வர சொல்லுங்க" என்றான்.
"ஓகே சார்" என அழைப்பை வைத்தவள், தன்னவனுடைய குளுமையான பார்வையில் சில்லிட்டுப் போகும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
"உங்களை உள்ளே கூப்பிட்டாங்க சார். ஹேவ் அ நைஸ் டே!" என்று புன்னகையை ஒளித்து வைத்துக் கொண்டு கூறினாள் மௌனா.
"இன்னைக்கு உண்மையிலேயே எனக்கு நைஸ் டே தான் மேடம்" என்று முறுவலித்து விட்டு அங்கிருந்து அகன்றான் மஹதன்.
"நினைச்சேன்! வந்துட்டீங்க!" என்று சென்றவனையே எண்ணிச் சிரித்தாள்.
"ஹாய் டா"
"உள்ளே வா மஹதா!" என நண்பனை உள்ளே அனுமதித்தான் கிஷான்.
"ரிசப்ஷனைத் தாண்டி தானே வந்த?"
"அஃப்கோர்ஸ் டா" என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான் மஹதன்.
"முகத்தில் இருக்கிற மினுமினுப்பைப் பார்த்தாலே தெரியுது" என்று கலாய்த்தான் கிஷான்.
"ஹா ஹா!" சிரித்தவாறே அவனுடன் பேசிக் கொண்டு இருந்து விட்டு, மூன்று மணி நேரங்கள் கடந்த பின்னரே வெளியே வந்தான் மஹதன்.
"பேசியாச்சு! வந்தாச்சு மேடம்" என்று மௌனாவைச் சீண்டினான்.
"சரிங்க மிஸ்டர். மஹதன். தாங்க்ஸ் ஃபார் கமிங்! (வருகைக்கு நன்றி)" என்றாள்.
"நான் நிறைய தடவை இங்கே வந்துட்டுப் போயிருக்கேன்! ஆனால் இந்த தடவை மட்டும் தான் நீ என்னைப் பார்த்து முறைக்காமல் சிரிச்சிருக்க!" என்று குறும்புடன் கூறினான் மஹதன்.
இப்போது உண்மையாகவே அவனை முறைக்கத் தொடங்கி விட்டாள் மௌனா.
"அச்சோ! முறைப்பு வேண்டாம் மா. நான் கிளம்பிட்றேன்" என்று கையசைத்து விட்டு வெளியேறினான்.
தங்களது திருமண வைபவத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்த அவ்விருவரின் அழகான காதல் என்றும் அழியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்!
நன்றி
கிஷான் மற்றும் முக்தாவைப் பற்றி பாகம் 1 - லேயே வாசித்து விட்டோம். அதனால் அவர்களுக்கிடையேயான நட்பு , மோதல் ; இறுதியில் , இவர்கள் மற்றும் மஹதன் , மௌனா ஜோடியின் திருமண வைபவத்தைப் பற்றியும், தீபக் மற்றும் அவனது அம்மாவின் முடிவு பற்றியும் "எனக்குள் வந்து வீழ்ந்தவளே!" (நங்கையின் மறவோன் பாகம்2) - இல் காண்போம்.

கருத்துகள்
கருத்துரையிடுக