இரவு உணவு முடித்ததும், அகதாவை அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு,
அப்போது தன் பெற்றோரின் அறையில் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த மௌனா,
"அகதாவுக்கு அவளோட புருஷனும், மாமியாரும் ரொம்ப டார்ச்சர் கொடுக்கிறாங்க ப்பா! ம்மா!" என்று முந்தைய நாட்களில் நிகழ்ந்தவற்றை ஒப்புவித்தாள்.
"மனுஷங்களா அவங்க! பொண்ணை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தி இருக்காங்க!" என்று பொருமினார் அன்னபூரணி.
"அவங்களுக்குப் பணம் மட்டும் வந்தா போதும் போல" என்று கரித்துக் கொட்டினார் சிவமணி.
"அதனால் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு? உங்களுக்கு சரி - ன்னா நான் உடனே அகி கிட்டயும் பேசுவேன்!" என்று அவர்கள் இருவரிடமும் கூறினாள் மௌனா.
"சொல்லும்மா!" என்று அவளை ஊக்கப்படுத்தினார் அன்னபூரணி.
அகதாவை இங்குத் தங்க வைக்க முடிவெடுத்து இருந்ததை அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள் மகள்.
"ரொம்பவே உடைஞ்சு போயிட்டா! இப்போ உடனே ஊருக்குக் கிளம்பி வந்ததே அதனால் தான். நீங்க என்ன சொல்றீங்க அப்பா! அம்மா!" என அவர்கள் தான் கூறியதை ஒப்புக் கொள்வார்கள்? என்ற எதிர்பார்ப்புடன் ஏறிட்டாள்.
"சரி தான் மௌனா ம்மா! ஆனால் , அவங்க மறுபடியும் இங்கே வந்து பிரச்சினை பண்ணினால் என்னப் பண்றது?" என்று வினவினார் சிவமணி.
"தீபக்கை விவாகரத்துப் பண்ணலாம்னு அகதா நினைச்சிருக்கா போல ப்பா! நீங்க சம்மதம் சொன்னால், நான் அவகிட்ட கேட்கிறேன்.அதே மாதிரி, விவாகரத்துக்கு பதிவு செய்துட்டால், அதுக்கப்புறம் நடக்க வேண்டியதை நான் பாத்துக்கிறேன் ம்மா!" என்றாள்.
அதற்கு, அன்னபூரணி, "அடியாள் வச்சு அடிச்சு, மிரட்டப் போறியா?" என்று மகளிடம் கேட்டார்.
தாய் அப்படி கூறியதும், அழகானதொரு புன்சிரிப்பு மௌனாவின் இதழ்களை அலங்கரித்தது.
"என்ன மௌனா? அதையும் செய்து பார்த்துட்டியா?" என்று கேட்டார் சிவமணி.
"இல்லை ப்பா! அதுவும் தோணுச்சு. அப்பறம் ரிஸ்க் - ன்னு விட்டுட்டேன்" என்று சிரித்தாள்.
"ஓஹோ! பிரமாதம் மா" என்று அவர்களும் புன்னகைத்துக் கொண்டனர்.
"என்ன முடிவு செய்துருக்கீங்க?" என்று தந்தையிடமும், தாயிடமும் மறுபடியும் ஒருமுறை கேட்டாள் மகள்.
"அகதாவை இங்கே தங்க வைக்குறதுக்கு நாங்க வேண்டாம்னா சொல்லுவோம்? ஆனால்…" என்று மீண்டும் அவளது கணவனையும், மாமியாரையும் நினைத்துத் தயங்கினார்கள்.
"அவங்க நம்ம வீட்டுப் பக்கமே வராத மாதிரி பண்ணிடறேன். என்னை நம்புங்க!" என்று நம்பிக்கை அளித்தாள்.
"உன்னை நம்பாமல், வேற யாரை நம்பப் போறோம் மௌனா! ஆனால் எதையும் எங்ககிட்ட சொல்லிட்டு செய்!" என்றா அறிவுறுத்தினார் அன்னபூரணி.
"நான் - னு இல்லை ம்மா! அவளே தன்னோட மரத்துப் போன உணர்வுகளுக்காக நியாயம் கேட்பாள்! அவளோட தன்மானத்தைத் தக்க வச்சுக்குவா!" என்று அவள் சொல்லிக் கொண்டே இருக்கும் போது, எதிர்பாராத விதமாக,
"நான் உள்ளே வரலாமா?" என்ற குரல் கேட்டு மூவரும் அதிர்ந்தனர்.
ஏனென்றால், அகதா தான் அறையின் வாயிலில் நின்றிருந்தாள். இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டிருப்பாள் போல!
"உள்ளே வா அகி!" என்று அவளை அறைக்குள் அழைத்தாள் மௌனா.
"நீங்கப் பேசனதை எல்லாம் நான் வெளியே இருந்து கேட்டுட்டேன் ப்பா ம்மா!" என்று கூறியவளோ, அளவில்லா அன்பைத் தன் மேல் பொழியும் தோழியைக் கட்டிக் கொண்டாள் அகதா.
மற்ற இருவரும் அவர்களது தோழமையைக் கண்டு பெருமிதம் கொண்டனர்.
"ஹேய் அகி! ரிலாக்ஸ்" என்று நண்பியைச் சமாதானம் செய்தாள்.
சில நிமிடங்கள் கடந்ததும், மௌனாவிடம் இருந்து பிரிந்து,
"நீங்க எனக்காக இவ்ளோ யோசிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு. ரொம்ப நன்றி அம்மா! அப்பா!" என்று தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினாள்.
சூழ்நிலையை இலகுவாக மாற்றுவதற்கு,
"போதும் அகி. அழாமல், நாங்க பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்ட தானே? சம்மதம் சொல்லு!" என்று தோழியை அவசரப்படுத்தினாள் மௌனா.
அவளுடைய பெற்றோர் தயங்கிய விஷயம் அகதாவிற்கும் சம்மதம் சொல்வதற்குத் தடையாக இருந்தது.
"நீ எதை யோசிச்சுட்டுத் தயங்குறன்னு தெரியுது அகி! அவங்களும் மனுஷங்க தானே! தீபக்கும், அவரோட அம்மாவும் உன்னை கன்ட்ரோல் பண்ணி வச்சு இருந்துருக்காங்க! அதை நீ தான் உடைச்சு எரியனும்!" என்று அவளை ஊக்கப்படுத்தினாள் மௌனா.
"நீங்க எல்லாரும் இவ்ளோ சொல்லியும், நான் இப்படியே இருக்கிறது நியாயம் இல்லை.கண்டிப்பாக அவங்களை எதிர்த்துப் பேசுவேன்.ஆனால், என்னால் உங்களுக்குப் பிரச்சினை வந்தால், என்ன செய்றது?" என்று கவலையுடன் கூறினாள் அகதா.
"மறுபடியுமா!!!" என்று தலையில் கை வைத்துக் கொண்ட மௌனா,
"அடியேய்! நான் சொல்றதைக் கேளு. அதையெல்லாம் எங்கிட்ட விட்டுரு" என்று அழுத்தமாக கூறினாள்.
"சரி மௌனா! அடுத்த தடவை வரும் போது நான் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு இங்கே வந்துடறேன்.அப்பா, அம்மா உங்களுக்கு…?" என்று கேட்டு நிறுத்தினாள்.
"எங்களுக்கு இன்னொரு மகள் கிடைச்சுட்டா அகி ம்மா!" என்று அவளுடைய உச்சந்தலையில் அன்பு முத்தத்தை அளித்தார் அன்னபூரணி.
கடுகளவு கூட அதைப் பார்த்து, மௌனாவிற்குப் பொறாமை வரவில்லை. தன் அன்புக்குரிய தோழியும் குடும்பத்தில் ஒருவளாகி விட்டது அவளுக்கு நிம்மதியாகத் தான் இருந்தது.
"அப்பா! அம்மா! நான் காலையில் ஒரு விஷயத்தைச் சொல்லுவேன். அதை நீங்க நல்லா யோசிச்சுப் பார்த்து அதுக்கு சம்மதம் சொல்லனும்" என்று அவர்களிடம் கூறி விட்டு, மௌனாவைப் பார்த்துக் கண்டித்தாள் அகதா.
வேண்டாமென்று தலையசைத்தாள் மௌனா.
அவர்களது பார்வைப் பரிமாற்றங்களை நெற்றியைச் சுருக்கி, புருவத்தை உயர்த்திப் பார்த்தனர் சிவமணியும், அன்னபூரணியும்.
"அவ சும்மா எதாவது சொல்லுவா ம்மா! நீங்க தூங்குங்க. ஏற்கனவே லேட் ஆயிடுச்சு" என்று அகதாவின் கையைப் பிடித்து இழுத்து, தங்களது அறைக்குள் வேகமாக வந்து விட்டாள் மௌனா.
"அகி! நானே அவங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு பயந்துட்டு இருக்கேன்! நீ வேற நாளைக்கே பேசறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கிற!" என்று கலக்கத்துடன் கூறினாள் மௌனா.
"டியர்! நீங்க ஒன்னும் ஃபீல் பண்ண பண்ணவே பண்ணாதீங்க! அப்பா, அம்மாகிட்ட நல்லா விளக்கமாகச் சொல்லி சம்மதம் வாங்கித் தர்றேன்.உனக்காக இல்லை, எனக்காக நான் இதைச் செய்ய அனுமதி கொடு மௌனா!" என்றாள் அகதா.
போர்வையைப் போர்த்திக் கொண்டு அவள் உறங்க ஆரம்பித்ததும், மௌனாவின் செல்பேசியில் குறுந்தகவல் வந்தது.
அதில், 'ஹாய் மௌனா! எங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார். நாளைக்கே கூட பொண்ணுக் கேட்க வர்றதுக்குத் தயார்! உனக்கு எப்படி?' என்று ஸ்மைலியையும் சேர்த்தே அனுப்பி வைத்திருந்தான் மஹதன்.
அதை வாசித்து முடித்ததுமே, 'மஹி! நீங்க ரொம்ப ஃபாஸ்ட்! நாளைக்கு அகதாவே ரெடியாக இருக்கா! எப்படியும் நாளைக்கு அகதாவே ஓபன் பண்ணிடுவா! ஒரு பூகம்பத்துக்கு அப்பறம் புயலா, மழையான்னு சொல்றேன்!' என்று அனுப்பினாள் மௌனா.
அவனுடைய வீட்டில் தங்களது திருமணத்திற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டிருக்க, இங்கோ பெரும் சங்கடம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற தவிப்பிலே அவ்விரவைக் கழித்தாள் மௌனா.
காலையில் எழுந்ததும்,
" மௌனாவைப் பத்தி நம்ம கிட்ட ஏதோ சொல்லப் போறதா அகதா சொன்னாளே ம்மா! என்ன விஷயமாக இருக்கும் பூரணி?" என்று மனைவியிடம் வினவினார் சிவமணி.
"அதுதான் ங்க எனக்கும் புரியல. மௌனாவும் அவளைப் பேச விடாமல் கூப்பிட்டுப் போயிட்டா! அதைக் கவனிச்சீங்களா?"
சிவமணி, "ஆமாம் பூரணி! எதுவோ பெருசா வரப் போகுதுன்னு தோணுது!" என்றார்.
"அகதாவே வர்றா பாருங்க!"
அவளை அழைத்தவர் ,"இந்தா ம்மா!" என்று காஃபி கொடுத்தார் அன்னபூரணி.
அதைக் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவர்கள்,
"நைட் ஏதோ சொல்றேன்னு சொன்னியே அகி ம்மா! என்னது?" என்று பரபரத்தனர்.
"மௌனா எழுந்து வந்துரட்டும் ம்மா! அவ இங்கே இருக்கனுமே!" என்று தோழிக்காக காத்திருந்தாள் அகதா.
பல் துலக்கி , முகம் கழுவி விட்டு வந்த மௌனாவை அருகில் அமர்த்திக் கொண்டாள் அகதா. அவளுக்கும் காஃபி கொணர்ந்தார் அன்னபூரணி.
மகளையே அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவமணி.
"அப்பா!" என்று பதட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தாள் மௌனா.
"இரு ம்மா! அகதா நீ சொல்லும்மா!" என்று தீவிரமாக கேட்டார் அன்னபூரணி.
"அகி" என்றவளுக்கு வியர்த்து விறுவிறுத்தாள் மௌனா.
எப்படியானாலும் மஹதனுடனான தன் காதலைப் பெற்றோரிடம் வெளிப்படுத்திச் சம்மதம் வாங்க வேண்டும் தானே?
அதை இன்றே அகதாவின் மூலம் செய்து விடலாம் என்று பெற்றோர்களைப் பார்த்தாள் மௌனா.
தோழியின் வாழ்க்கையில் மஹதனின் வருகையையும், அவர்களுக்கு இடையே நிகழ்ந்த பூசல்களும் , அதற்குப் பிறகான உரையாடல்களும் என இரண்டு பத்திகள் விரிவாக அவர்களுக்குச் சொன்னாள் அகதா.
அவள் சொல்லும் போதே அவ்வப்போது இவர்களின் பார்வை ஊசியாக, மகளைத் தொட்டு மீண்டு கொண்டே இருந்தது.
அவளது உடல் முழுவதும் நடுக்கத்தில் குலுங்கியது. தந்தையையும், தாயையும் ஏறிட்டுப் பார்க்கத் திராணியற்று உடலைக் குறுக்கிக் கொண்டு தோழியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள் மௌனா.
தங்கள் பெண்ணை இப்படி பார்த்ததே இல்லை அவர்கள்!
மெல்ல வாய் திறந்து,
"அந்தப் பையன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா மௌனா?" என்று தான் கேட்டார் சிவமணி.
காதலிக்கிறாயா? என்று கேட்டால் அவளிடம் ஆமாம் என்ற பதில் மட்டும் தான் வரும். ஆனால், அதற்கு முதல் அஸ்திவாரமே நம்பிக்கை தானே! அது இருந்தால் தானே காதலே முளைக்கும்? அதனால் தான் மகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார் தந்தை.
"ம்ஹ்ம்! இது வரைக்கும் அவர் எங்கிட்ட ன்னு இல்லை, மத்தவங்க கிட்டயும் நடந்துக்கிறதைப் பார்த்திருக்கேன்.எனக்கு மஹதன் மேல நம்பிக்கை இருக்கு அப்பா.
அவருக்கும் என் மேல நம்பிக்கை இருக்கப் போய் தான் காதலைச் சொல்லி இருக்கார். அதேபோல, என்னோட காதல், அதைக் கல்யாணத்தில் கொண்டு போய்ச் சேர்க்கனும்ங்கிற எதிர்பார்ப்பு, நம்பிக்கை எல்லாம் தான் உங்ககிட்ட இதை வெளிப்படையாகப் பேச வச்சிருக்கு. என்னோட முடிவு எப்பவும் சரியாக இருக்கும்னு சொல்ல வரலை. நீங்க அதுக்காக சம்மதம் சொல்லனும்னும் இல்லை ம்மா! ப்பா! நீங்க அவரையும், அவர் குடும்பத்தையும் பார்த்துப் பேசனும். பெரியவங்களுக்கும் விருப்பம் இருந்தால், உங்களோட ஆசீர்வாதத்தோட எங்க கல்யாணம் நடக்கட்டும்!" என்று உணர்ச்சிகரமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பதிலளித்தாள் மௌனா.
மகளின் வதனத்தில் தெரிந்த உறுதி இவர்களை யோசித்துப் பார்க்கச் சொல்லியது.
அதனால், "சரி ம்மா. அவங்களைப் பார்த்துப் பேசனுமே?" என்று கேட்டார் சிவமணி.
"நான் அவர்கிட்ட சொல்றேன் ப்பா! அவங்க வீட்டில் சம்மதம் சொல்லிட்டாங்க. நமக்காக தான் காத்திருந்தாங்க" என்றதும்,
"அப்போ நாம அங்கே போகலாம்" என்றார் அன்னபூரணி.
ஒருவேளை அந்த ஏற்றத்தாழ்வு உணர்வு தன்னைப் பெற்றவர்களுக்கும் தோன்றி விட்டதோ? என்று "ஏன் ம்மா?" எனக் கேட்டாள் மகள்.
"நாங்க அங்கே வந்ததே இல்லையே மௌனா! வந்தா பையன் வீட்டார் கிட்ட பேசினா மாதிரியும் இருக்கும், நீங்க தங்கி இருக்கிற வீட்டைப் பார்த்த மாதிரியும் இருக்கும் அதான்!" என்று விளக்கினார் அன்னை.
"அப்படியே தீபக் பிரச்சினையையும் முடிச்சிட்டு வந்துடலாம் மா" என்று அகதாவைப் பார்த்துக் கூறினார் சிவமணி.
"சரி ப்பா" என்று மெலிதாகப் புன்னகைத்தாள் அகதா.
"லவ் யூ அப்பா! லவ் யூ அம்மா!" என்று பூரிப்படைந்தாள்.
இங்கும் விஷயம் சுமூகமாகி விட்டது என்று மஹதனுக்குக் குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டி விட்டாள் மௌனா.
விரைவில் அனைவரும் அங்கே வந்து , மஹதனுடைய பெற்றோரைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தாள்.
"இதுக்கப்புறமாவது உங்கிட்ட இருந்து புரபோஸல் வரும்ன்னு எதிர்பார்க்கிறேன் மௌனா ம்மா!" என்றிருந்தான் மஹதன்.
அந்த நாளுக்காக தானும் காத்திருப்பதாகச் சொல்லி விட்டு ஊருக்குக் கிளம்பும் நாளை முடிவு செய்தாள் மௌனா.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக