முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 24

 


"நான் தான் பேசறேன் மௌனா! அங்கே நீங்க ரெண்டு பேரும் பாதுகாப்பாகத் தானே இருக்கீங்க?" என்று இவளது அதிர்ச்சியை உணர்ந்து கொண்டாலும், முதலில் அவ்விருவரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்டான்.


அவளும் அதைப் புரிந்து கொண்டாள் போலும்! 


அதனால், "எங்களுக்கு எதுவும் ஆகல மஹதன். நாங்க பாதுகாப்பாக இருக்கோம். என்னாச்சு?" என்று கேட்டாள் மௌனா. 


"கொஞ்ச நேரம் முன்னாடி கிஷான் கால் செய்து, நீ உடனே லீவ் வேணும்னு கேட்டதா சொன்னான்! அதான், எதாவது பிரச்சனையான்னு கேட்க நினைச்சேன்?" என்று விளக்கினான். 


அவனுடைய நண்பன் தானே கிஷான்! அப்படியிருக்க, தன்னைப் பற்றிய தகவல் அவன் மூலம் மஹதனுக்கு எளிதாக கிடைத்து விடும் என்பதை யோசிக்கவே இல்லை அவள்! அத்தனை பதட்டத்தில் அல்லவா இருந்தாள்!


"அகதாவுக்கு மனசு டிஸ்டர்ப் ஆக இருக்காம்!" என்றவள், தாங்கள் இருவரும் உடனே ஊருக்குச் செல்லப் போவதாகவும், அதற்காக தான் கிஷானுக்கு அழைத்து , தான் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தாள் மௌனா. 


"நல்லது தான் மௌனா. அப்படியே அகதாவை அங்கே தங்க வைக்கிறதைப் பத்தியும் உன் அப்பா, அம்மா கிட்ட பேசிடு"


"ஷ்யூர் மஹதன்!" என்று பதிலளித்தவளிடம், 


"சாரி ம்மா! உனக்கு எதாவது பிரச்சினையோன்னு தான் கிஷான் கிட்ட இருந்து நம்பர் வாங்கிட்டேன்" என்று தன் செயலுக்கு மன்னிப்பு வேண்டியவனை, அவளால் தற்போது கடிந்து கொள்ள முடியவில்லை. 


எனவே, "பரவாயில்லை மஹதன்! ஊருக்குப் போயிட்டு கால் செய்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தாள் மௌனா. 


அவள் ஊருக்குச் சென்று திரும்புவதற்குள் தன் தந்தையிடம் மௌனாவைப் பற்றிக் கூறி, கல்யாணத்திற்குச் சம்மதம் வாங்க முடிவெடுத்தான் மஹதன். 


அதற்கு முதல் வேளையாக, கௌசல்யாவிடம் சென்று, 

"அம்மா! நான் அப்பா கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு!" என்று கூறவும், 


"என்ன விஷயம் மஹத்?" என்று விசாரித்தார் கௌசல்யா. 


"உங்க வருங்கால மருமகளைப் பத்தி! எங்க கல்யாணத்தைப் பத்தி தான் பேசனும்" என்று அழகாகப் புன்னகைத்தான் மகன். 


"ஓஹோ!! அப்போ மௌனா ஒகே சொல்லியாச்சா?" என்று சந்தோஷத்துடன் கேட்டார் அன்னை. 


"ஆமாம் அம்மா! இனிமேல் , எங்க கல்யாணத்துக்கு எந்த தடங்கலும் வராது.அப்பா கிட்ட பேசிட்டா போதும்!" என குதூகலித்தான். 


"அவருக்குக் கால் செய்து வீட்டுக்கு வர சொல்றேன்" என்று கணவனுக்குச் செல்பேசியில் அழைத்தார்.


"ஹலோ! கௌசி!! என்னம்மா?" 


"என்னங்க! மஹதனும், நானும் உங்ககிட்ட பேசனும். வீட்டுக்கு வர முடியுமா?" என்று கேட்டார். 


"ஏன் கௌசி? ஈவ்னிங் வர்றேனே! அதுக்குள்ள வெயிட் பண்ண முடியாத விஷயமா என்ன?" என்று வினவினார் திருமூர்த்தி. 


"ஆமாங்க!" என்றார் கௌசல்யா. 


"சரி ம்மா! கிளம்பி வர்றேன்" என்று உடனே வீட்டிற்கு வருவதாக கூறி வைத்தார். 


"உங்க அப்பா வர்றாராம் மஹத்!" என்று மகனிடம் அறிவித்து விட்டு, சோபாவில் அமர்ந்து கொண்டார் கௌசல்யா. 


இருபது நிமிடங்களுக்குப் பிறகு, திருமூர்த்தியின் கார் அவர்கள் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. 


"வாங்க!" என்று கணவனை உள்ளே அழைத்தார் மனைவி. 


"ம்ம்… கௌசி! மஹத்! வீட்டுக்கு வந்துட்டேன். இப்போ சொல்ல ஆரம்பிங்க!" என்று தனது செல்பேசியை அங்கிருந்து டீப்பாய் மீது வைத்தார் திருமூர்த்தி. 


"அப்பா! நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து இருக்கேன்!" என்று மஹதன் ஆரம்பிக்கவும், அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தார் திருமூர்த்தி. 


 "ம்ஹ்ம்! மேல சொல்லு மஹத்!" என்று மகனை ஊக்குவித்தார். 


தாயை ஒரு பார்வை பார்த்து விட்டு, 

"பொண்ணு!" என்று தடுமாறி விட்டான். 


"ஏன் தடுமாறிப் போற மஹத்? நீ கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகப் பார்த்திருக்கிற பொண்ணு யாரு?" என்று அழுத்தமாக கேட்டார் திருமூர்த்தி. 


"அவ பேர் மௌனா…! அப்பா!" என்று உறுதியான குரலில் கூறினான் மகன். 


அந்தப் பெயரைக் கேட்டதும், சுருங்கி விரிந்த புருவங்களை நீவி விட்டுக் கொண்டே, 

"முக்தாவோட பிரச்சினை ஆச்சே அந்தப் பொண்ணா? இப்போ உன் ஹோட்டலில் வேலைப் பார்க்கல தான?" என்று மகனிடம் கேட்டார். 


 நீலகண்டனும், முக்தாவும் எது நடக்கும் என்று கூறினார்களோ! கடைசியில் அதுவே நிகழ்ந்து விட்டது என்ற உணர்வு அவரை விழித்துக் கொள்ளச் செய்தது. 


"ஆமாம் ப்பா! அந்தப் பொண்ணு தான். நாங்க ரெண்டு பேரும்…" என்று வெகுவாக தயங்கினான். 


"இவ்ளோ தயங்குறியே ப்பா? சரி!! அந்தப் பொண்ணு எப்படி உன்னைக் கல்யாணம் செய்துக்க ஓகே சொன்னா?" 


மௌனாவின் தன்மானம், சுய மரியாதையைப் பற்றியெல்லாம் இவரிடம் அள்ளித் தெளித்து இருந்தானே மகன். மஹதனுடைய

 தங்கும் விடுதியில் பணிபுரிவதற்கே மறுப்புத் தெரிவித்திருந்தாளே! 


பிறகு எவ்வாறு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர்? என்று தான் அவருக்குத் தோன்றியது. 


"இப்போ மௌனா என் ஹோட்டலில் வேலைப் பார்க்கல தான் ப்பா! அவளோட கேரக்டரைப் பார்த்து தான் காதலிச்சுட்டேன்.அதை வெளிப்படுத்துனதும், அவளும் ஏன் காதலைப் புரிஞ்சுக்கிட்டு சம்மதம் சொல்லிட்டா!" என்று தந்தையிடம் விரிவாக கூறினான். 


"ஓஹோ! அப்போ நீலகண்டனும், முக்தாவும் சொன்னது நடந்திடுச்சு! அப்படித்தான மஹத்?" என்று இறுக்கத்துடன் கேட்டார் திருமூர்த்தி. 


அவரைக் கலவரமாகப் பார்த்தார் கௌசல்யா. 


எப்போதும் சரியாக நடந்து கொள்ளும் மகனுடைய இந்த முடிவும் சரியானதாகவே இருக்கும் என்றும், மௌனாவின் குணநலன்களும் அவருக்குப் பிடித்துப் போனதால் தான் கௌசல்யாவும் மகனுடைய விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். 


ஆனால், கணவனின் மூளை இவ்வாறு யோசிக்கும் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை! 


"ஏங்க!" என அவரிடம் பேச முயன்றார். 


"பொறு கௌசி! நான் மஹத் கிட்ட தெளிவாக கேட்டுக்கிறேன்!" என்று தன் புத்திரனைப் பார்த்தார் திருமூர்த்தி. 


அவனும் இதை எதிர்பார்க்கவில்லை என்பது, மஹதனின் உடல் மொழியிலேயே தெரிந்தது. 


"ஆமாம் ப்பா! ஆனால், இது எதேச்சையாக நடந்தது! அவங்க அப்படி சொன்ன அப்போவே நாங்க வீம்புக்கு லவ் பண்ணியிருந்தா, அது தப்பு! இப்போ எங்களுக்குப் பிடிச்சுப் போய் தான் உண்மையாக விரும்புறோம்" என்றான் மஹதன். 


ஏட்டிக்குப் போட்டியாக இல்லை! நிஜமான காதல், விருப்பம் என்பதை எடுத்துக் கூறினான். 


ஏதாவது ஏடாகூடமாக ஆகி விடுமோ! என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்தார் கௌசல்யா. 


"பயப்படாதே கௌசி! அவங்க உண்மையிலேயே விரும்புறாங்களான்னு நான் தெரிஞ்சுக்கனுமே! அதான், இப்படி கேட்கிறேன்!" என்று மனைவியின் கரத்தைப் பற்றி, அவரை அமைதிப்படுத்தினார் திருமூர்த்தி. 


அதில் ஆசுவாசமடைந்த கௌசல்யா, 

"எனக்கு இது முன்னாடியே தெரியும்ங்க" என்று குற்ற உணர்வுடன் கூறினார் மனைவி. 


"இருக்கட்டும் கௌசி! அவ உன் கிட்டயாவது விஷயத்தை முன்னாடியே சொல்லிட்டானே! நீயும் கிரீன் சிக்னல் கொடுத்துட்ட போல?" என்று சாதாரணமாக கேட்டார். 


"ஆமாம் ங்க! மருமகளை நேரிலும் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்!" என்று மற்றொரு உண்மையையும் கூறி விட்டார். 


தாயைப் போலியாக முறைத்தான் மஹதன். 


"என் வொய்ஃப்பை முறைக்காமல், மருமககிட்ட பேசிட்டு சொல்லு.முறையாகப் போய்ப் பேசுவோம்" என்றார் திருமூர்த்தி. 


தந்தை தன் சம்மதத்தை மறைமுகமாக உணர்த்தி விட்டதைக் கண்டு நிம்மதி அடைந்தவன், 


"ஒரு வாரம் போகட்டும் அப்பா! அவ சொந்த ஊருக்குத் தான் போயிருக்கா! வந்ததும் பேசறேன்" என்று கூறினான் மஹதன். 


என்ன தான் திருமூர்த்தி மகனுடைய காதலுக்குச் சம்மதம் சொல்லி விட்டாலும், நண்பனை நினைத்துக் கவலையாக இருந்தது. எப்படியும் நீலகண்டனுக்கு இந்த விஷயம் தெரிந்து விடுமே! 


அதனால், தானே அவரை நேரில் பார்த்துப் புரிய வைக்க வேண்டியது தான் என்று உடனே நண்பனைச் சந்தித்தார் திருமூர்த்தி. 


அவருடைய குழப்பமான முகத்தை யோசனையுடன் பார்த்த நீலகண்டனோ, 


"என்ன மூர்த்தி! பேச வர சொல்லிட்டு வேற எதையோ யோசிச்சுட்டு இருக்கிற?" என்று வினவினார். 


"நீலகண்டா! நான் உங்கிட்ட இப்போ சொல்லப் போறதை, நீ எப்படி எடுத்துக்கப் போறன்னு தெரில!" என்றதும், 


"எதுவாக இருந்தாலும் சொல்லுடா. நமக்குள்ள என்ன தயக்கம்?" என்று கூலாக கூறிய நண்பனிடம், 


"மஹதன் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சுட்டான் நீலகண்டா!" என்று கூறினார். 


"சூப்பர் மூர்த்தி! இதை ஏன் இவ்ளோ சோகமாக சொல்ற?"


"ம்ம்! பொண்ணு வேற யாரும் இல்லை! மௌனா!" 


இதைச் சொல்ல தான் இவ்வளவு தயக்கமா? என்பதை ஊகித்தார் நீலகண்டன். 


"ஓஹ்!! எப்போ கல்யாணம் டா?" என்று சகஜமாக வினவிய நண்பனை வியப்புடன் பார்த்தார் திருமூர்த்தி. 


"உன் பார்வையோட அர்த்தம் எனக்குப் புரியுது! முக்தா கூட பிரச்சினை நடந்த அன்னைக்கே இவங்க லவ் பண்ணிடலையே? அப்படியும் பண்ணினா என்ன தப்பு? அது அவங்களேட தனிப்பட்ட விருப்பம் மூர்த்தி! என் பொண்ணுக்கு மட்டும் தான் அந்த ஆசை இருக்கணும்னு இல்லையே! நான் வேற எதையும் கேட்டு உன்னைச் சங்கடப்படுத்த மாட்டேன். நீ தலை நிமிர்ந்துப் பையனோட கல்யாண வேலைகளைப் பாருடா!" என்று முன் சிரிப்புடன் கூறிய நீலகண்டனை நெகிழ்ந்துப் போனார்.


இவர்களது நட்பும் உடைந்து போகும் அபாயம் இல்லை எனும் போது இருந்த ஒரு கவலையும் நீங்கி விட்டதால், தன் மகனுடைய திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தார் திருமூர்த்தி. 


அதை மனைவி, மகனிடமும் மறக்காமல் பகிர்ந்து கொண்டார். 


தன் மனதை நிலைப்படுத்திக் கொள்ளவும், தன் முடிவில் ஸ்திரமாக இருக்கவும் தோழியின் உதவியுடன் மீண்டுமொரு பயணத்தை மேற் கொண்டிருந்தாள் அகதா. 


ஊரை அடைந்ததும், பேருந்தில் இருந்து வேகமாக இறங்கினாள். தோழியின் இந்த அவசரத்தைப் புரிந்து கொண்ட மௌனா, 


"நீ முன்னாடி நடந்து போ அகி. லக்கேஜை நான் எடுத்துட்டு வர்றேன்" என்று தோழியிடம் கூறினாள். 


"இல்லை மௌனா! ரெண்டு பேரும் ஒன்னா போகலாம்" என்று அவளது கரங்களைப் பிடித்துக் கொண்டு முன்னேறினாள் அகதா. 


தாயைத் தேடும் குழந்தையாக இருவரும் குதூகலித்துக் கொண்டே, கிணற்றடியில் நின்று கொண்டிருந்த அன்னபூரணியைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டனர் அகதாவும், மௌனாவும்.


"ஹேய்!! மௌனா!! அகதா!!" என்று மகிழ்ச்சியில் கூக்குரலிட்டார் மௌனாவின் அன்னை. 


மனைவியின் கூச்சலைக் கேட்டு, பதறியடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்த சிவமணியும் ஆனந்த அதிர்ச்சி அடைந்து போனார். 


"அப்பா!!" என தந்தையை அணைத்துக் கொண்டாள் மௌனா. 


சிவமணியின் பாதம் பணிந்தாள் அகதா. 


"நல்லா இருடா ம்மா!" என்று ஆசீர்வதித்து அவளை எழுப்பி விட்டார். 


  பெற்றோர் அவர்களது வருகை தங்களுக்கு ஆனந்தத்தை அளித்தாலும், திடீரென்று இந்த விஜயம் எதற்கு என்ற அவர்களது கேள்வியான பார்வை மகளைத் தொக்கி நின்றது. 


அதைக் கண்ட மௌனாவும், 'தான் பிறகு கூறுகிறேன்' என்று ஜாடை செய்தாள் மௌனா.


                         - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...