அவளுக்குக் கிடைத்த யோசனையே அவ்வளவு அர்த்தமுள்ளதாக இருந்தது.
"இது சூப்பர் ஐடியா!" என்று அகதாவிடம் சொல்வதற்கு முன்னால், மஹதனிடம் பரிமாறிக் கொள்ள நினைத்தது அவளது காதல் கொண்ட மனம்.
அவனுடைய உந்துதலால் தானே இந்த எண்ணம் தோன்றியது என்று மஹதனை மீண்டுமொரு முறை சந்திக்கத் தூண்டியது உள்ளம்.
விடுமுறை நாட்களிலும் அவன் அலுவலகம் இயங்குமா? என்பது தெரியவில்லை ஆதலால், சனிக்கிழமை போல, அவனுடைய தங்கும் விடுதிக்குச் சென்றாள் மௌனா.
வரவேற்பில் இருந்த ரிசப்ஷனிஸ்ட்,
"ஹலோ! குட் மார்னிங் மேம்!" என்று புன்னகையுடன் வினவினாள்.
"குட் மார்னிங் மேம்! மஹதன் சார் ஆஃபீஸில் இருக்காரா? நான் ஒரு முக்கியமான விஷயமாக அவர்கிட்ட பேசனும்" என்று கேட்டாள் மௌனா.
"அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் (Appointment Order) இருக்கா மேம்?"
"இல்லை மேம். ஆனால், அவருக்குக் கால் செய்து, என்னைப் பத்தி சொல்லுங்க. சாருக்கு என்னைத் தெரியும் " என்று உறுதியாக கூறினாள்.
"யுவர் குட் நேம் மேம்?" என்று அந்தப் பெண் கேட்கவும்,
"மௌனா" என பதிலளித்தாள்.
"ஜஸ்ட் வெயிட் எ மினிட் மேம்!" என்று கூறி விட்டு, மேஜையிலிருந்த தரைவழி தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தினாள் ரிசப்ஷனிஸ்ட்.
"ஹலோ சார்! உங்களைப் பார்க்க மௌனா - ன்னு ஒருத்தவங்க வந்திருக்காங்க. அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் எதுவும் இல்லைன்னு சொன்னாங்க" என்று விளக்கினாள்.
மௌனாவின் பெயரைக் கேட்டதும் , அவனுடைய அதரங்களில் தானாகவே புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
"அவங்களை உள்ளே வர சொல்லுங்க" என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு, மௌனாவின் வரவிற்காக காத்திருந்தான் மஹதன்.
"சார் உங்களை வர சொன்னார் மேம்! ஹேவ் அ ஹேப்பி டே!" என்று அவளை வாழ்த்தி அனுப்பி வைத்தாள் ரிசப்ஷனிஸ்ட்.
குதூகலத்துடன் மஹதனின் அறைக்குள் சென்றாள் மௌனா.
கதவைத் தட்டிக் கொண்டு வெளியே நின்றாள்.
"எஸ் கமின்!" என்று அவளை உள்ளே வருமாறு அழைத்தான் மஹதன்.
உடனே திறந்து கொண்டு, அறைக்குள் நுழைந்து, குறுநகையுடன் அவனைப் பார்த்தாள்.
"ஹாய்!"
மலர்ச்சியான முகத்துடன் அவளை ஏறிட்டான்.
"ஹாய் சார்!!" என்று அவனை வம்பிழுத்தாள்.
"உட்காருங்க மேடம்" என்று அவனும் மரியாதையாக அழைத்து அமரச் சொன்னான்.
"முக்கியமான… விஷயம்னு ரிசப்ஷனில் சொன்னீங்களாம்!" என்று குறும்புடன் கேட்டான் மஹதன்.
"ஆமாம் சார்…! ஆனால், அகதா விஷயமாக தான் பேச வந்திருக்கேன்" என்று அவன் வேறெதையும் தவறாகப் புரிந்து கொண்டு, ஏமாந்து விடக் கூடாது என்று கவனமாக முதலிலேயே இது தான் விஷயம் என்பது போல தயங்கியவாறு கூறினாள் மௌனா.
"அதனால் என்ன ம்மா? சொல்லு?" என்று இயல்பாக கேட்டவுடன் தான் அவளுக்கு மனம் இலேசானது.
"என்னோட ஊருக்கு நாங்க இரண்டு பேரும் போயிருந்தோமே?" என்று அவள் கூறவும் சட்டென இருவருக்கும் மஹதனின் காதல் மொழிகள் தான் ஞாபகத்திற்கு வந்தது.
அவனுடைய முகம் பளீரென்று மாறுவதை கன்னச் சிவப்புடன் பார்த்து வைத்தாள் மௌனா.
புன்னைகையை மறைத்துக் கொண்டு,
"அங்கே என்னாச்சு மௌனா?" என்று சாதாரணமாக வினவினான் மஹதன்.
"அகதா ஊரில் ரொம்ப சந்தோஷமா, நிம்மதியாக, ஒவ்வொரு நாளையும் ரசிச்சு , அங்கே இருந்தா மஹதன்! அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்"
"என்ன முடிவு?" என்று அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
"எப்படியும் நான் கல்யாணம் முடிஞ்சு, இங்கே செட்டில் ஆகிடுவேன். ஆனால், அப்போ அப்போ தான் அங்கே போய்ட்டு வர்றா மாதிரி இருக்கும். அகதாவை அப்பா, அம்மா கூட தங்க வச்சிடலாம்னு நினைக்கிறேன். அவங்களுக்கும் இது கண்டிப்பாக சரின்னு தான் தோணும் மஹதன்!" என்று தன் யோசனையை அவனிடம் கூறினாள்.
"ஷ்யூர் ஆ மௌனா?" என்று ஒரு தடவை கேட்டுக் கொண்டான்.
"நூறு சதவீதமாக சொல்றேன். அப்பாவும், அம்மாவும் அவளையும் அவங்க பொண்ணா தான் பார்க்கிறாங்க. அப்பிடி இருக்கிறப்போ இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும்" என்று நம்பிக்கையுடன் கூறினாள் மௌனா.
"முதல்ல உன் அப்பா, அம்மா கிட்ட இதைப் பேசிட்டு, அப்பறம் உடனே அகதாகிட்ட சொல்லு. அவங்க ரொம்ப டிப்ரஷனில் இருப்பாங்க" என்றான் மஹதன்.
"அடுத்த தடவை அவங்களுக்கு கிஃப்ட்ஸ் கொடுக்க ஊருக்குப் போவேன் மஹதன். அந்த நேரத்திலேயே விஷயத்தைச் சொல்லி, சம்மதம் கேட்டுட்றேன்" என்று கூறினாள்.
"அதுக்கப்புறம் என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்!" என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
"உங்களைப் பத்தி யோசிக்கலைன்னு யார் சொன்னா?" என்று இதழ்களுக்குள் வெட்கப் புன்னகையை ஒளித்துக் கொண்டாள் மௌனா.
"அப்படித் தெரியலையே?" என அவளது விழிகளைத் தன் விலோசனங்களால் சிறை செய்தான் மஹதன்.
நாணத்தில் முக்குளித்துப் போனாள் மௌனா. அது மட்டுமின்றி , இவ்வளவு நாளாக இருந்த குழப்பங்கள் எல்லாம் களையப்பட்டு,
முற்றிலுமாக தன் மனதைக் கொள்ளையடித்தவனை விழி அகலாமல் பார்த்து வைத்தாள்.
"அப்படின்னா தெரிஞ்சிக்கிற வரைக்கும் வெயிட் பண்ண வச்சுடவா?" என்று கண்டித்தாள்.
அதில் கிறங்கிப் போனவனோ,
"இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது மௌனா! ஊருக்குப் போனதும், அகதா விஷயத்தோட இதையும் சொல்லிடு.டைரக்ட் ஆக கல்யாணம் தான்!" என்று கறாராக கூறினான் மஹதன்.
நேர் எதிராக அமர்ந்திருந்த மங்கையின் உணர்வுகளை முகம் அழகாக எடுத்துக் காட்டியதை, அம்சமாகப் படம் பிடித்துக் கொண்டது மஹதனுடைய காந்த விழிகள்.
காதலைச் சொல்ல அவளுடைய உதடுகள் தயாராக இருந்தாலும், கண்கள் எப்போதோ சொல்லி முடித்திருந்தது.
"உங்க வீட்டில் இதைப் பத்திச் சொல்லிட்டீங்களா?" என்று வினவினாள்.
"அம்மாவுக்குத் தெரியும் மா" என்று கூறவும், அவனை முறைத்தாள் மௌனா.
'அய்யோ! உளறிட்டேனே!' என தலையில் கை வைத்துக் கொண்டான் மஹதன்.
"அப்போ அன்னைக்கு அவங்க என்னைப் பார்த்தது எதேச்சையாக நடந்ததே கிடையாது அப்படித்தான?" என்று கடுமையான குரலில் கேட்டாள்.
"ஆமாம் மா"
" அப்பறம் ஏன் பொய் சொன்னீங்க மஹதன்?" என்று அதிருப்தியைக் காட்டினாள்.
"நானே வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறேன்" என நொந்து போனான்.
"கரெக்ட் ! நான் உங்களை நல்ல விதமாக நினைக்கும் போதெல்லாம், நீங்களே அதில் இரண்டு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டுக்குறீங்க" என்று பொரிந்து தள்ளினாள் மௌனா.
"இதனால் தான் இவ்ளோ லேட் ஆகிடுச்சோ!"
"அதை நான் சொல்லி தான் உங்களுக்குத் தெரியனுமா?"
"ஹி ஹி!!" என்று அசடு வழிந்த , முகத்தை மறைத்துக் கொண்டான் மஹதன்.
"உங்க அப்பா?" என்று கலவரத்துடன் கேட்டாள் மௌனா.
"அவர்கிட்ட நான் பேசுறேன் ம்மா. அவர் சம்மதம் தான் சொல்வார்.நீ கவலைப்படாதே" என்று அவளுக்குத் தைரியம் அளித்தான்.
"நானும் வீட்டில் பேசறேன்ங்க" என்று உறுதியாக கூறினாள்.
"அகதாவுக்கும் இன்னைக்கு லீவ்ங்க. தனியாக இருப்பா. நான் இதைப் பேச தான் வந்தேன்" என்று இங்கே வந்த போது, இதழ்களில் இருந்த புன்னகை மாறாமல், வெளியேறினாள் மௌனா.
"சாப்பிட எதாவது எடுத்துட்டு வரவா அகி?" என்று நாளுக்கு நாள் சோர்ந்து தெரிந்தவளிடம், கவலையுடன் கேட்டாள்.
"வேண்டாம் மௌனா. தண்ணீர் மட்டும் கொடுக்கிறியா?" என்று எழ முடியாத அளவிற்கு உடல் வலியுடன் கூறினாள் அகதா.
"கொண்டு வரேன். இரு" என்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மௌனா.
"உனக்கு உடம்பு சரியானதும் சொல்லு அகி. இன்னொரு தடவை ஊருக்குப் போய், அப்பா, அம்மாவைப் பார்த்துட்டு வரலாம்" என்று தோழியிடம் கூறினாள்.
"சீக்கிரமே போகலாம் மௌனா!" என்று அழுது விட்டாள் அகதா.
அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேற்ற முயற்சித்தாள்.
" உடனே நான் அதுக்கு ரெடி பண்றேன். நீ அழுகாத"
என்று மறுநாளே விடுப்பு எடுக்கும் முடிவுக்கு வந்து விட்டாள் மௌனா.
" நீ லீவ் எடுக்க வேண்டாம். வொர்க் ஃப்ரம் ஹோம் பாரு. நான் மட்டும் லீவ் போட்டுக்கிறேன்" என்று தான் மட்டும் விடுப்பு எடுக்க முடிவெடுத்து விட்டாள் மௌனா.
அதைச் செயல்படுத்தும் விதமாக கிஷானுக்கு அழைத்து,
"ஹலோ சார்!" என்றாள்.
"சொல்லுங்க மௌனா? என்னாச்சு இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டான் கிஷான்.
இதற்கு முன்னர் எல்லாம் அவள் இப்படி தன் முதலாளிக்குக் கால் செய்தது இல்லையே!
"சார்! எனக்கு அவசரமாக மூனு நாள் லீவ் வேணும். ப்ளீஸ்..!!!" என்று அவசரமாக தனக்கு விடுப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தினாள்.
"ஏன் இப்படி பேசறீங்க மௌனா? எமர்ஜென்சியா?" என்று தன்னாலான உதவி எதாவது செய்யலாம் என்று தான் இதைக் கேட்டான் கிஷான்.
"ஆமாம் சார். எமர்ஜென்சி தான்! பட் லீவ் மட்டும் கொடுங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ணியதுக்கு ரொம்ப சாரி சார்!" என்று மறக்காமல் அதற்குண்டான மன்னிப்பையும் கேட்டாள் மௌனா.
"நாளைக்கு சண்டே தானே? சோ, அது பொதுவான லீவ். தொடர்ந்து இரண்டு நாட்கள் லீவ் எடுத்துக்கோங்க. ஆனால், வேலைக்கு வந்ததும், எனக்கு இதுக்கான காரணத்தைச் சொல்லனும்!" என்று கூறி, மௌனாவிற்கு விடுப்பு அளித்தான் கிஷான்.
"தாங்க்யூ சோ மச் சார்!" என்று ஆள மூச்செடுத்துக் கொண்டு, அவனுக்கு நன்றி கூறி, அழைப்பைத் துண்டித்தாள்.
"ஹலோ மஹத்! மௌனா சிஸ் கால் பண்ணி இருந்தாங்க" என்று அவளுடைய பதட்டத்தையும், விடுப்பு வேண்டியதையும் நண்பனிடம் சொன்னான்.
"வீட்டுக்குப் போகனும்னு சொன்னா, ஆனால் ஏன் இப்படி பதட்டமாக இருக்கான்னு தெரியலையே? எனக்கு இன்னும் அவ நம்பர் கொடுக்கலை கிஷான்.என்னாச்சுன்னு தெரியலையே?" என்று யோசனையாக நெற்றியை நீவிக் கொண்டான் மஹதன்.
"எங்கிட்ட நம்பர் இருக்கு. அனுப்பி விட்றேன். என்னன்னு கேட்கிறியா?" என்று வினவினான் கிஷான்.
"அது சரியாக இருக்குமா?"
மௌனாவின் அனுமதியின்றி இனிமேல் எதையும் செய்யக் கூடாது என்று இருந்தவனுக்கோ தற்போது இதைத் தவிர வேறு வழியில்லை என்று கிஷானிடமிருந்து அவளது செல்பேசி எண்ணைப் பெற்றுக் கொண்டான் மஹதன்.
"அகி! நாளைக்குக் கிளம்பிடலாம். நீ இப்போ நல்லா தூங்கினால் தான் எழுந்திரிக்க முடியும்" என்று தம்ளரில் பால் கொணர்ந்து, அவளைப் பருக வைத்து விட்டு, உறங்கச் சொன்னாள் மௌனா.
அந்த நேரம் பார்த்து தான் அவளுக்குக் கால் செய்தான் மஹதன்.
புது எண் என்பதால், யோசித்து, வீடு நேரம் கழித்தே அழைப்பை ஏற்றாள்.
"ஹலோ!" என்று மறுமுனையில் இருந்து வந்த குரல் அவளுக்குப் பரிச்சயம் இல்லாததா என்ன?
"மஹதன்!" என்று தன் அதிர்ச்சியைக் குரலில் வெளிக் காட்டினாள் மௌனா.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக