மஹதனுடைய ஒவ்வொரு நல்ல செயல்களும் இப்போது தான் ஒவ்வொன்றாக புரிந்தது மௌனாவிற்கு.
முக்தா விஷயம் தொடங்கி, இப்போது கடைசியாக கிஷானின் விடுதியில் நடந்தது வரைக்கும் பொறுமையாக யோசித்துப் பார்த்தாள்.
அதில், தனக்கு முழுமையாக சாதகமாக இல்லையென்றாலும், நியாயமாக நடந்து கொண்டான் மஹதன்.அதுமட்டுமின்றி, முக்தா தனக்கு நன்கு தெரிந்த பெண்ணாக இருந்தாலும், தவறு எனும் போது, உண்மையின் பக்கம் நின்றான்.வேலையை விட்டுச் செல்கிறேன் என்று இவள் சொன்ன போது கூட, அதற்கான மாற்று வழியையும் அறிவுறுத்தினான்.
இது மட்டும் அவள் சம்மதம் சொல்வதற்குப் போதுமா? என்றால் நிச்சயமாக இல்லை.
தன்னுடைய ஊரைக் கண்டுபிடித்து வந்தது தவறு என்று இப்போதும் முழு மனதுடன் நம்பினாள்.அவளுடைய அனுமதியின்றி மஹதன் ஊரைக் கண்டுபிடித்து இருக்க வேண்டாம் என்று நினைத்தாள்.
இருவருக்கும் இடையில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் பூதாகரமாக தோன்றியது மௌனாவிற்கு.
நியாயமாகப் பார்த்தால், அவள் இதையெல்லாம் யோசித்து இருக்கவே கூடாது. ஏனென்றால், மௌனா எப்போதும் தன்னம்பிக்கை உள்ள பெண். எனவே, தான் யாருக்கும் கீழே இல்லை என்ற மனநிலையை எப்போதும் கொண்டிருப்பவள். அதனால் தான் முக்தாவுடன் பிரச்சினை நடந்த போது, அவளைத் தைரியமாக எதிர் நோக்கிச் சமாளித்துச் சரியாகப் பேசினாள் மௌனா.
இப்போது காதல் என்று வந்ததும், தன் மொத்த வாழ்க்கையையும் அவனிடத்தில் ஒப்படைக்க நினைக்கும் போது, இப்படியெல்லாம் யோசிக்க வைத்தது மூளை.
இதை அவனிடம் பேசி சரிப்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, இரவு உணவிற்கு உதவப் போனாள்.
"அகி! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்?" என்று சட்னிக்குத் தாளித்துக் கொண்டே பேசினாள் மௌனா.
"சொல்லு மா?" என்றதும்,
"நான் வொர்க் பண்ற ஹோட்டலுக்கு மஹதனோட அம்மா வநதாங்க" என்று அவள் கூறியதும்,
"என்னது? உன்னைப் பார்க்கவா வந்தாங்க?" என்று வினவினாள்.
"இல்லை அகி. கிஷான் சாரைப் பார்க்க வந்தாங்க" என்று நடந்ததைக் கூறினாள் மௌனா.
"ம்ஹ்ம்! அவங்க எதேச்சையா வந்ததை நீ தப்பாக புரிஞ்சிக்கிட்ட" என்றாள் அகதா.
"ஆமாம் அகி. மஹதன் சாரை வேற ரொம்ப கடுமையாக திட்டிட்டேன்" என்று சங்கடமாக உணர்ந்தாள்.
"நாம மட்டும் தான் எப்பவும் சரின்னு இருக்கக் கூடாது மௌனா. அவங்களைப் பத்தியும் யோசிச்சுப் பார்க்கனும்.இதையே நீ அவங்க அம்மா முன்னாடி கேட்டிருந்தால், அவங்க மனசு கஷ்டப்பட்டு இருக்கும்ல!" என்று கூறினாள்.
அதைக் கேட்டதும் , தூக்கி வாரிப் போட்டது மௌனாவிற்கு.
"யெஸ் அகி. நான் பாட்டுக்கு பொரிஞ்சு தள்ளிடறேன். அவங்க பார்த்திருந்தா, ஹர்ட் ஆகி இருப்பாங்கள்ல?" என்று உருகிப் போய்ப் பேசிய மௌனாவை அழுத்தத்துடன் பார்த்தாள் அகதா.
ஏனெனில், மற்றவர் மனம் கட்டப்படக் கூடாது என்பது வாஸ்தவம் தான். அதற்கும் மேலாக, இவள் அவருக்காக யோசிப்பது எங்கோ இடித்தது!
ஆனால் மௌனாவே விஷயத்தைச் சொல்லட்டும் என்று காத்திருக்க முடிவு செய்தாள்.
"சொல்லு அகி! ஹர்ட் ஆகி இருப்பாங்க தான?" என்று மீண்டும் கேட்டாள் தோழியிடம்.
"ஆமாம் ஆமாம் மௌனா. ரொம்பவே ஹர்ட் ஆகி இருப்பாங்க. நீ பேசாமல் அவங்க வீட்டுக்குப் போய் மன்னிப்புக் கேட்டுட்டு வந்துடு" என்று கூறி விட்டாள்.
"வீட்டுக்குப் போகனுமா? அகி!!" என்று அதிர்ச்சியுற்றாள்.
"ஆமாம் மௌனா. முடிஞ்சா போய்ட்டு வா.கல்யாணம் ஆகி சாரோட மனைவியா, அவங்களோட மருமகளாகப் போய் மன்னிப்பு கேளு" என்று சொல்லிக் கண்ணடித்தாள் அகதா.
விழிகளைப் பெரிதாக விரித்துப் பார்த்த மௌனா,
"என்ன அகி நீ? அதெப்படி நான்…" என்று இழுத்தவளிடம்,
"எல்லாம் எனக்கு மறைமுகமாக தெரிஞ்சுடுச்சு மௌனா. நீ அவர்கிட்ட சொல்லிட்டு, என்கிட்ட கன்ஃபார்ம் பண்ணு" என்று அழகாகப் புன்னகைத்தாள் அகதா.
அதிர்ந்து விழித்தப் பெண்ணோ, கண்களைச் சுருக்கிக் கொண்டு,
"அப்படி வெளிப்படையாகத் தெரியுற அளவுக்கா இருக்கேன் அகி?" என்று சோகமாக கேட்டாள்.
"ஆமாம் மௌனா" என்று அடித்துக் கூறினாள் அகதா.
"ஹி ஹி" என்று அசடு வழிந்தாள் மௌனா.
"இது உன்னோட தனிப்பட்ட விருப்பம் தான். இருந்தாலும் நான் சில விஷயங்கள் கேட்கனும். கேட்கலாமா?" என்று தோழியின் முகம் பார்த்தாள்.
"கேளு அகி " என்றாள் மௌனா.
"எல்லாம் யோசிச்சுப் பார்த்துத் தான் முடிவு எடுத்தியா?"
"ஆமாம் அகி. நாம தெரியாதவங்க கிட்ட பேசுறதுக்கே ரொம்ப யோசிப்போம். இது வாழ்க்கை சம்பந்தப்பட்டது, கண்ணை மூடிக்கிட்டு உடனே ஒத்துக்கலை அகி. எல்லாம் நினைச்சுப் பார்த்தேன். அது மட்டுமில்லாமல், அப்பா, அம்மாகிட்டயும் அவர் எப்படி நடந்துக்கப் போறார்ன்னு ஐடியாவே இல்லை" என்று தன் கவலையையும் நண்பியிடம் பகிர்ந்து கொண்டாள் மௌனா.
"காதல் கண்ணை மறைக்கும்ன்னு சொல்லுவாங்க. ஆனால் அது அப்படி மறைச்சு, எல்லா விஷயத்திலும் அவங்க மட்டும் தான் தெரியுறாங்கன்ற மாதிரி இருந்திட கூடாது. எனக்கு அந்த லவ் ஃபீல் கல்யாணத்துக்கு முன்னாடி என்னன்னே தெரியாது.தீபக்கைக் கல்யாணம் பண்ண அப்பறமும் அதை நான் தெரிஞ்சிக்கிட்டது இல்லை மௌனா!" என்று கூறியவளது விழிகளில் துளி கண்ணீர் தோன்றியது.
மெல்ல அதை துடைத்துக் கொண்டு,
"அப்படி இருந்தாலும் நீ தவறான வழியைத் தேர்ந்தெடுத்து விடக் கூடாதுன்னு கவனமாக இருக்கனும்னு தான் இதைச் சொல்றேன். சீக்கிரம் மஹதன் சார் கிட்ட சொல்லி, வீட்லயும் பேசி, சம்மதம் வாங்குங்க. அது தான் ரொம்ப முக்கியம் மௌனா" என்று நல்ல விதமாக அறிவுரை கூறினாள் அகதா.
மௌனா எப்போதுமே சுதாகரிப்பாகத் தான் எல்லாவற்றையும் யோசித்துச் செய்வாள். ஆனாலும், இது அவளது நிகழ்காலம் மற்றும் எதிர்கால வாழ்க்கை! ஆதலால் தான் இப்படி கருத்துக்களைப் பகிர்ந்தாள் அகதா.
"கரெக்ட் அகி. நானும் வழி மாறிப் போக மாட்டேன். மஹதன் கிட்ட பேசுறதுக்கு மட்டும் கொஞ்சம் பதட்டமாக இருக்கு" என்று கைகளைப் பிசைந்தாள் மௌனா.
"ஒருநாள் முழுசா யோசி, அவசரப்படாதே! அப்பறம் பதட்டம் குறைஞ்சதும், நிதானமாக யோசிச்சுப் பேசு" என்றாள் தோழி.
"அப்பா, அம்மா சம்மதிப்பாங்களா அகி?" என்று தவிப்புடன் கேட்டாள்.
"பணக்காரவங்க, மிடில் கிளாஸ் ஃபேமிலின்னு யோசிக்கிறியா?" சரியாகப் புரிந்து கொண்டாள் அகதா.
'ஆம்' என தலையசைத்தாள் மௌனா.
"காதல் சரி. ஆனால் கல்யாணம்னா இப்படி பல விஷயங்கள் வரும். நீங்க தான் அதையெல்லாம் பார்த்துக்கனும். அவரும் ஸ்டேட்டஸ் பார்க்கிற ஆள் மாதிரி தெரியல மௌனா"
"யோசிக்கனும் அகி" என்று கூறியவளுக்குத் தனிமை கொடுத்து விட்டு அகன்றாள் மற்றவள்.
"ஏன் பப்ளிக்ல இப்படி நடந்துக்கிற தீபக்?" என்று கணவனைக் கண்டித்தாள் அகதா.
"அப்படி நடந்துக்கிட்டா தான் நீ வழிக்கு வருவ?" என்று மார்க்கமாகப் பேசினான் தீபக்.
"நான் உனக்கு ஒழுங்காக தான பணத்தை அனுப்பிட்டு இருக்கேன்? அப்பறம் ஏன் வந்து டிஸ்டர்ப் பண்ற? நடு ரோட்டில் சீப் ஆக நடந்துக்கிற?" என்று அவனிடமிருந்து கையை உதறிக் கொண்டே கேட்டாள் அகதா.
"எனக்கு அந்தப் பணம் பத்தாது அகதா! நீ என்னோட சம்பளத்திலும் பங்கு கேட்கிற!" என்று கத்த ஆரம்பித்து விட்டான் தீபக்.
சுற்றி நின்ற மக்களைப் பார்த்து கூனிக் குறுகிப் போனாள் அகதா.
அந்த நேரம் பார்த்து, மஹதனுடைய கார் அங்கே வந்து நின்றது.
அவனைப் பார்த்ததும் இன்னும் கூசிப் போனது அகதாவிற்கு.
மஹதன் இறங்கி வருவதைப் பார்த்தவள், கணவனின் பிடியிலிருந்து விலகப் போராடினாள்.
"ஹேய்! அந்தப் பொண்ணு கிட்ட ஏன் இப்படி நடந்துக்கிற?" என்று அவனிடம் கோபமாக வினவினான்.
"அது உனக்கு எதுக்குடா? தேவையில்லாமல், உள்ளே வந்து எதுக்கு தலையைக் கொடுக்கிற?" என்று அவனும் சினம் கொண்டான் தீபக்.
கண்ணீர் மல்க மஹதனைப் பார்த்தாள் அகதா.
அவள் மௌனாவின் தோழி என்பது மஹதனுக்கு ஏற்கனவே தெரியும் அல்லவா! அது மட்டும் இல்லாமல், யராக இருந்தாலும், இறங்கி வந்து உதவிடுவான்.
"டேய்! என்ன முறைக்கிற? கிளம்பு… கிளம்பு" என்று அவனை அலட்சியப்படுத்தினான் தீபக்.
அவனைக் கண்டு கொள்ளாது , அகதாவிடம் , "யாரும்மா இவன்?" என்று கேட்டான் மஹதன்.
"என்னோட ஹஸ்பண்ட்.. சார்" என்று தலை கவிழ்ந்து பதில் சொன்னாள்.
"நீ அவங்களோட புருஷன்றதைச் சொல்றதுக்கே அவமானமா நினைக்கிறாங்க. உனக்கு வெட்கமா இல்லை" என்று கர்ஜித்தான் மஹதன்.
"அவ்ளோ தான் சொல்லிட்டேன் உனக்கு! என்னை அடக்க நீ யாருடா? புருஷன்னு சொல்லிட்டால்ல? அப்பறம் ஏன் பஞ்சாயத்துக்கு வர்ற?" என்று கேட்கவும்,
தீபக்கின் கரத்திலிருந்து அகதாவின் கையைப் பிரித்தெடுத்தான்.
மறு வார்த்தைப் பேசுவதற்குள் இடி போன்ற அடியை அவனுடைய கன்னத்தில் இறக்கினான் மஹதன்.
தீப்பற்றி எரிந்தது தீபக்கின் கன்னம். அந்த அறையையும் வாங்கிக் கொண்டு சளைக்காமல்,
"யாருடி இவன்?" என்று மனைவியிடம் கேட்டான்.
"மௌனாவோட ஃப்ரண்ட்" என்று கூறினாள் அகதா.
"அவளோட ஃப்ரண்ட்னா, உனக்கு ஏன் வக்காலத்து வாங்கிட்டு வர்றான்?" என்று திமிராக வினவினான் தீபக்.
"ஹேய்!! எங்கிட்ட பேசுடா?" என்று அவனைப் பார்வையால் எரித்தான் மஹதன்.
"உன்கிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்லைடா.நான் என் பொண்டாட்டி கிட்ட பேசிக்கிறேன்" என்று அவளது கரத்தை மீண்டும் பற்றப் போக, அடுத்த இடி கன்னத்தில் இறங்கியது.
"அகதா! வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன்" என்று அங்கிருந்து உடனே நழுவி விட்டான் தீபக்.
அவனைப் பிடித்து அடித்து உதைத்து இருக்கலாம் தான்! ஆனால் , முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று அகதாவிடம் போனான்.
அவனை நிமிர்ந்து பார்க்கத் திராணி இல்லாமல், குறுகி நின்றாள்.
அவளை அழைத்துக் கொண்டு, காஃபி ஷாப்பிற்குச் சென்றான் மஹதன்.
"நீங்க மௌனாவோட ஃப்ரண்ட் தான? என்னப் பிரச்சினை?" என்று கேட்டான்.
"சார்! அவர் என்னோட ஹஸ்பண்ட் தான்" என தன் நிலையைப் பற்றிக் கூறி முடித்தாள் அகதா.
முழுவதையும் பொறுமையாக கேட்டான், "இங்கே பாருங்க அகதா. நீங்க கவலைப்படாதீங்க! உங்களோட படிப்பு, வேலை எல்லாம் பெருமையான இடத்தில் உங்களை வச்சிருக்கு.உங்களுக்கு யாருமே இல்லைன்றதுக்காக இப்படி ஒரு வாழ்க்கையைச் சகிச்சுக்கனும்னு இல்லை. ஒரு அளவுக்குத் தான் பொறுமையாக இருக்கனும் அகதா" என்று அவளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது, தோழியைக் காணவில்லை என்று அகதாவின் செல்பேசிக்கு அழைத்தாள் மௌனா.
"ஹலோ அகி! எங்க இருக்க? எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?" என்று கேட்டாள்.
"நான் ஒரு ஃப்ரண்ட் ஓட காஃபி வந்திருக்கேன் மௌனா. சீக்கிரம் வீட்டுக்கு வர்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தாள்.
மௌனா என்றதும் மஹதனுடைய கண்கள் நட்சத்திரங்கள் போல மின்னியது.
"உங்க விஷயம் எனக்குத் தெரியும் சார்" என்று மட்டும் கூறியவள், மௌனாவிற்கும் பிடித்தம் என்பதை மஹதனிடம் அவள் தெரிவிக்கவில்லை.அவனும் அதைக் கேட்கவில்லை.
வீட்டிற்கு வந்ததும், வாடிப் போன முகத்தைத் தோழியிடம் இருந்து மறைக்கப் போராடியது எல்லாம் வீணாகிப் போயிற்று. ஏனெனில், மௌனா எளிதாக கண்டுபிடித்து விட்டாள்.
அவள் கேட்பதற்குள் , வேறு வழியின்றி நடந்ததை விவரித்தாள் அகதா.ஆனால், இறுதியாக மஹதன் வந்ததை மட்டும் மறைத்து விட்டாள். அதை அவனே தோழியிடம் கூறட்டும் என்று விட்டு விட்டாள் அகதா.அதுவே மஹதனுக்கு எதிரி ஆனது.
தன் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மஹதனிடம் பேச நினைத்த மௌனா, அவனது அலுவலகத்திற்குப் போனாள்.
விஷயம் அறியாதவனோ,
"என்ன உன்னோட ஃப்ரண்ட்க்கு ஹெல்ப் பண்ணதுக்கு தாங்க்ஸ் சொல்ல வந்தியா?" என்று கேட்கவும்,
இவள் புரியாது, "என்ன ஹெல்ப்? யாருக்கு?" என்று குழப்பமாக கேட்டாள் மௌனா.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக