நக்கல் நிரம்பிய குரலில் மௌனா , தந்தையைப் பற்றி வினவவும், அடங்காத கோபம் உண்டானது மஹதனுக்கு.
அவளை ஆசையாகப் பார்க்க நினைத்ததால் மட்டுமே தாயை அழைத்து வந்து, சந்திக்க வைத்தான்.
அதற்காக அவள் இப்படி கிண்டல் செய்வது தவறு என்று நினைத்தவன்,
"மிஸ்.மௌனா! என் அம்மா இங்கே எதேச்சையாக வந்தாங்க. முன்னாடியே உன்னைப் பற்றி அவங்க கிட்ட சொல்லியிருக்கேன். அதனால் தான் விசாரிச்சாங்க. எதுக்கு எடுத்தாலும் இப்படி பேசுறதை முதல்ல நிறுத்து" என்று அறிவுரை வேறு கொடுத்தான்.
"சார்! நான் இப்படித்தான்! எனக்குத் தோணுச்சு , பேசினேன்" என்றாள் மௌனா.
தாயிடம் மருமகளைக் காண்பிக்கிறேன் என்று அழைத்து வந்தது தவறோ என்று எண்ணும் அளவிற்கு, இவள் தன்னிடம் பேசி விட்டாள் என கோபத்தில் மௌனாவை வெறித்துப் பார்த்தான் மஹதன்.
ஒன்றும் பேசாமல், வெளியே போனவனை, அலட்சியமாக ஒதுக்கி விட்டு, வேலையைத் தொடர்ந்தாள் மௌனா.
வீட்டிற்குப் போன கௌசல்யாவிற்கோ, தன் மருமகளைப் பார்த்த திருப்தி.அவளைப் பற்றி மஹதன் சொல்லக் கேட்டிருந்தவர், இப்போது நேரில் பார்த்தும் விட்டார்.
இன்னும் விஷயம் திருமூர்த்திக்கு மட்டும் தெரியாது.முக்தாவுடனான பிரச்சினையில் நீலகண்டனுடன் பேசிய பிறகு அவருக்கு மௌனா மீது வருத்தம் இருக்கும். அது இப்போது காணாமல் தான் போகும் என்பது கௌசல்யாவின் எண்ணம்.
அவரது செல்பேசி ஒலியெழுப்ப, அதை எடுத்துப் பேசினார்.
"ஹாய் ஆன்ட்டி" என்று முக்தா தான் பேசினாள்.
"ஹேய் முக்தா! நல்லா இருக்கியா ம்மா?" என்று கேட்டார்.
"நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நான் நாளைக்கு ஃபாரீனுக்குக் கிளம்புறேன்.உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணனும்னு தோணுச்சு. அதான் சொன்னேன்" என்று கூறினாள் முக்தா.
"நல்லபடியாக போய்ட்டு வா ம்மா. என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு இருக்கும்" என்று முக்தாவை மனதார வாழ்த்தினார் கௌசல்யா.
"தாங்க்ஸ் ஆன்ட்டி" என அவரிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு, தந்தையிடம் வந்தாள்.
"அப்பா!" என்றழைப்பில் திரும்பிய நீலகண்டன்,
"எல்லாம் தயாராக இருக்காடா?" என்று கனிவுடன் கேட்டார்.
"யெஸ் ப்பா" என்று பெட்டிகளை எடுத்துக் கொண்டாள் முக்தா.
நீண்ட இரண்டு வருடங்கள் மகளைப் பிரியப் போகிறோம் என்று பாரம் ஏறிய மனதுடன், முகத்துடன் காணப்பட்டாலும், அது முக்தாவைப் பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் நீலகண்டன்.
அதனால், உதடுகள் தாண்டாத மெல்லிய புன்னகையுடன் வலம் வந்தார்.
அதைக் கண்டு கொண்ட முக்தாவிற்கும் வேதனையாக இருந்தது.
தந்தையை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் முக்தா.
இதுவரை பிடித்து வைத்திருந்த இறுக்கம் தளர்ந்து மகளைப் பாசமாக அணைத்துக் கொண்டார் நீலகண்டன்.
கண்களின் ஓரம் நீர் துளிர்க்க,
"என்னை மன்னிச்சிருங்க அப்பா! இப்பவும் நான் என்னோட சுயநலத்துக்காக உங்களைப் பிரிஞ்சு போறேன். ஆனால், எனக்கு இதைத் தவிர வேற வழி தெரியலை அப்பா" என்று அவரிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடினாள்.
"முகி! அப்படியெல்லாம் இல்லைடா. நானும் என் பொண்ணோட முடிவை மதிக்கனும்ல.நீ போய்ட்டு வாடா" என்று ஆறுதல் கூறினார் நீலகண்டன்.
"மிஸ் யூ அப்பா" என தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் முக்தா.
தந்தையும், மகளும் விமான நிலையத்திற்குச் சென்றார்கள்.
மாதத்தில் ஒரு தடவையேனும் வர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள் முக்தா.
அவள் செல்வதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த கிஷான்.
"மிஸ் யூ முகி!" என்று முணுமுணுத்துக் கொண்டான்.
அவளுக்கும் கிஷானுடைய நினைவு இல்லாமல் போகுமா? தன்னவனை மனதினுள் நிறைத்துக் கொண்டு தான் இப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறாள் முக்தா.
"மஹதா!" என்று மகனை அழைத்தார் கௌசல்யா.
அப்போது தான் வீடு வந்திருந்தவன் தாயின் அழைப்பில் அவரிடம் சென்றான்.
"இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா. மௌனாவைப் பார்த்துட்டேனே!" என்று சிறு பிள்ளை போல கூறினார் கௌசல்யா.
அதில் புன்னகைத்தவன், "எனக்கும் சந்தோஷம் தான் ம்மா" என்று தன் மனக்கிலேசத்தை மறைத்துக் கொண்டு கூறினான்.
"முக்தா இன்னைக்கு ஃபாரீனுக்குக் கிளம்பிட்டா" என்று தெரிவித்தார்.
சிறு தலையசைப்புடன் அறைக்குள் போன மகனை, யோசனையாகப் பார்த்தார் கௌசல்யா.
எதேச்சையாக நடந்த சந்திப்புக்குத் தன் இயல்பு மீறி நடந்து கொண்டு விட்டோமோ? என்று மௌனாவிற்குத் தோன்றியது.
தான் வேலை பார்க்கும் இடத்தில் வேண்டுமென்றே வந்து பிரச்சினை செய்பவனாகவே மௌனாவின் மனதில் உலா வந்தான் மஹதன்.
அதனால் தானோ, மௌனாவிற்கு அவனுடைய காதலை ஏற்றுக் கொள்ளத் தயக்கமோ?
பணக்காரர்கள் என்றால் கெட்டவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைப்பதெல்லாம் தவறு தானே?
அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியாமலேயே கெட்டவர்கள் என்று முத்திரைக் குத்தி விடக் கூடாது அல்லவா?
அதேபோல தான் மஹதனின் காதலையும் தான் தவறாக நினைக்கிறோமோ? என்றும் அவளுக்குத் தோன்றியது.
தன் பெற்றோரை நினைத்து எழுந்த தயக்கத்தால் , இதுவரை அவனுடைய காதலை உதாசீனம் செய்து விட்டேனா? என்றெல்லாம் மனம் விடாமல் அடித்துக் கொண்டது.
தன்னைப் பழி வாங்கும் நோக்கம் அவனுக்கு இருந்திருந்தால், இந்நேரம் அதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கலாமே?
"யோசிச்சு முடிச்சுட்டா, என்ன டின்னர் செய்யலாம்னு சொல்றியா?" என்ற அகதாவின் குரல் அவளது சிந்தையைக் கலைத்தது.
"ஹாங்! சாரி அகி.இட்லி, தக்காளிச் சட்னி போதும் அகி" என அவளிடம் தன் விருப்பத்தைச் சொன்னாள் மௌனா.
"ஓகே மௌனா" என்று தோழியை
மறுபடியும் தொல்லை செய்யாமல் அன்றைய இரவு உணவை அகதாவே செய்து முடித்தாள்.
"ஏதோ யோசனையில் இருந்ததால் அப்படி சொன்னா, எல்லாமே நீயே சமைச்சிட்டியே!" என்று கலவையாக கூறினாள்.
"இருக்கட்டும் மௌனா. எப்போதாவது தான? ஒன்னும் இல்லை. வந்து உட்கார்" என அவளுக்குப் பரிமாறி, தானும் உண்டாள்.
அகதாவிற்கு தோழியின் மனதின் நெருடல் மேம்போக்காக தெரியும். ஆனால் அதைக் கேட்டு அவளைச் சஞ்சலப்படுத்தி விட வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறாள்.
தன்னுடைய குறுக்கீடு இல்லாமல், மஹதனைப் பற்றிய சிந்தனையை மௌனா மேற்கொள்ளப்படும் அப்போது தான் அவளுக்கும் தெளிவு கிடைக்கும் என்று முடிந்தளவு மௌனாவை அவள் தொந்தரவு செய்யவில்லை.
மௌனாவிற்கோ, காதல் என்று போய் நின்றால் பெற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? தன்னை நம்புவார்களா? அல்லது தன் தேர்வாக இருக்கப் போகும் மஹதனை ஏற்றுக் கொள்வார்களா?
இவளும் இன்னும் காதலை உணரவில்லை , அதற்குள் வீட்டில் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று கவலைப்படுகிறாள்! ஆனால் இதையும் அலட்சியமாக ஒதுக்குவது சாத்தியமில்லை தானே?
'எப்படி அப்பா, அம்மாவிடம் இதைச் சொல்வது?' என்ற யோசனையில் வந்து நின்றாள் மௌனா.
இதற்குப் பிறகும் காதல் இல்லை என்று மறுக்கப் போகிறாளா?
ஏதோ ஒரு தடை தங்களுக்குள் இருக்கிறது என்று நினைத்தாள் மௌனா.அவனது பணமா? பகட்டா? என்று கூட யோசித்தாள்.
உண்மைக் காதலுக்கு அன்பு, புரிதல் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அளவுக்குச் சம்பாத்தியம் இவை மட்டுமே பிரதானம் என்பது தெரியவில்லை அவளுக்கு.
அவர்கள் வீட்டில் கௌரவம் பார்ப்பார்களே? இவளது கௌரவத்திற்கு என்ன குறைச்சல்?
இந்த பதில்களை எல்லாம் மௌனாவும் அறிந்து கொண்டால் , அவள் மஹதனை மறுக்க வாய்ப்பில்லை.
எப்போதும் நிதானமாக யோசிக்கும் மௌனாவிற்கு காதல் விஷயத்தில் மட்டும் , எப்படி முடிவெடுப்பது என்பது தெரியவில்லை.உடனே ஒப்புக் கொள்ளக் கூடாது என்றும், ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் மௌனாவின் மூளை வலியுறுத்தியது.
மனதின் பேச்சை மட்டும் கண்மூடித்தனமாக நம்ப அவள் தயாராக இல்லை.அடுத்த தடவை மஹதனைச் சந்திக்கும் போது, அவளது மனம் உறுதிப்படுத்தி விடும்.
"நான் அவளைப் பார்க்கத் தான் அம்மாவைக் கூப்பிட்டு வந்தேன்னு அவளுக்கு எப்படி தெரிஞ்சது?" என்று நினைத்தான் மஹதன்.
அதை உண்மை என்று ஒப்புக் கொள்ளாமல் அவளுடன் சண்டையிடுவது போல் பேசி விட்டு வந்திருக்கிறான்.
'தான் ஒரு பெரிய பிஸினஸ்மேன் என்று மார் தட்டிக் கொண்டு, அவளைக் காதலிப்பதே பெரிய விஷயம், அதற்கு அவள் தன்னுடைய அடிமையாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
அதையும் தாண்டி, இருவரது உள்ளங்களும் காதலால் நிறைந்தால் மட்டுமே, வாழ்க்கை அழகாக இருக்கும்.அதனால் , தான் காதலிப்பவள் தன்னால் கூட காயப்பட்டு விடக் கூடாது என்பது அவனுடைய எண்ணம்.
"உன்னோட காதலின் வெளிப்பாட்டை உணர நான் ரொம்பவே காத்திருக்கேன் மௌனா!" என்று பொங்கிய காதலுணர்வுடன் தனக்குள் பேசிக் கொண்டான் மஹதன்.
ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய சிந்தனையில் மௌனாவும், அவள் மேல் கொண்ட கண்ணியமான காதலில் மஹதனும் மூழ்கி இருந்தனர்.
"முதல்ல ட்ரெஸ் எடுத்துடலாம் அகி" என்று ஜவுளிக்கடைக்குள் நுழைந்தனர் மௌனாவும், அகதாவும்.
தந்தைக்குப் பேண்ட், சேர்ட் பார்த்து எடுத்தவள், தாய்க்குப் பட்டுச் சேலை வாங்கினாள் மௌனா.
அகதா, "நானும் ஒரு செட் எடுத்துக் கொடுக்கிறேன்" என்று தன் பங்கிற்கும் அவர்களுக்கு உடை எடுத்தாள்.
பிறகு, தோழிகள் இருவரும் நகைக்கடைக்குள் நுழைந்தார்கள்.
தாய், தந்தையின் ஜோடிப் பொருத்தத்திற்கு ஏற்ப, ஜோடியாக மோதிரத்தைத் தேர்வு செய்தாள் மௌனா.
இவற்றையெல்லாம் ஏற்கனவே தன்னிடம் இருந்த சேமிப்புப் பணத்திலும், தற்போது இருக்கும் விலையில் கிடைத்த சம்பளத்திலும் வாங்கினாள்.
தன் சொந்த சம்பாத்தியத்தில் பெற்றவர்களுக்குப் பொருட்கள் வாங்கித் தருவது எத்தனை சந்தோஷத்தை அளிக்கும் என்பதை அன்று தான் முழுமையாக உணர்ந்து அனுபவித்தாள் மௌனா.
"இந்த மோதிரங்கள் உங்க அப்பா, அம்மாவுக்கு சூப்பராக இருக்கும் மௌனா" என்று அகதாவும் தோழியின் தேர்வைப் பாராட்டினாள்.
அதன் பின், இருவருடைய இஷ்ட தெய்வங்களின் புகைப்படங்களையும் வாங்கிக் கொண்டாள் மௌனா.
"உன் பேரண்ட்ஸ்ஸூக்காக இவ்வளவு வாங்கிக் கொடுத்திருக்க. அதே மாதிரி உனக்காக நான் ஒன்னு வாங்கியிருக்கேன்" என்று மௌனாவின் வலது கரத்தில், தங்க கைச்சங்கிலியை அணிவித்து விட்டாள் அகதா.
இதைப் பார்த்ததும், மௌனாவிற்கு விழிகள் கலங்கிப் போனது.
"அகி!" என்று உணர்ச்சி வசப்பட்டாள் மௌனா.
"இதே மாதிரி எனக்கும் ஒரு பிரேஸ்லெட் இருக்கு. இங்கே பாரு" என்று தன் கரத்தில் வைத்திருந்ததையும் அவளிடம் காண்பித்தாள்.
"கொடு அகி. நான் போட்டு விட்றேன்" என்று அகதாவின் கரத்தில் அதை மாட்டி விட்டாள் மௌனா.
தங்கத்தில் இல்லையென்றாலும், பிளாஸ்டிக்கில் செய்ததாக இருந்தாலும், அந்தக் கைச்சங்கிலியைப் பார்த்து இதே போல் தான் உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள் இருவரும்.
நட்பின் பெருமையை உணர்ந்தவர்களுக்குத் தங்கம், பித்தளை என்றெல்லாம் பிரித்துப் பார்க்கத் தோன்றாது.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக