மௌனாவின் வீட்டிலிருந்து, இருவரும் விடைபெறும் நாளும் வந்தது.
காலையிலேயே கிளம்புவதாக இருந்தவர்களை உணவுண்டு விட்டு, மாலையில் செல்லுமாறு கேட்டிருந்தனர் சிவமணியும், அன்னபூரணியும்.
இலகுவான உணவைச் சமைத்தனர். மதியம், வீட்டிலேயே செய்து , பார்சல் கட்டிக் கொடுத்து விட முடிவெடுத்தனர்.
"உங்ககிட்ட நான் லிஸ்ட் கேட்டு இருந்தேனே? எழுதி கொடுங்க" என்று பெற்றோரிடம் வந்தாள் மௌனா.
"விட மாட்டியே மா நீ? எதுவும் வேண்டாம் டா. நீயும், அகதாவும் இங்கே வந்து தங்குனதே நிறைவா இருக்கு" என்றார் அன்னபூரணி.
"அம்மா! நாங்க உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தா மாதிரி, நாங்களும் உங்ககிட்ட இருந்து அதை எதிர்பார்ப்போமே? ப்ளீஸ்!!!" என்று வேண்டி நின்றாள்.
"பொண்ணு ஆசைப்பட்டு இவ்ளோ தூரம் கேட்கிறாள்ல! எழுதிக் கொடுப்போம் பூரணி" என சிவமணியும் ஆமோதித்தார்.
அவர்கள் கொடுத்த குறிப்பை ஆராய்ந்தாள் மௌனா. அதில், அன்னபூரணி தான் வரைபடம் வரைவதற்கான பொருட்களை எழுதிக் வைத்திருக்க, சிவமணியோ, துணிமணிகள் என்று எழுதி வைத்திருந்தார்.
அவர்களைப் பார்த்து, செல்லமாக முறைத்தவள், "அகி! இந்த லிஸ்ட்டைப் பாரேன்" என்று தோழியிடம் பேப்பரை நீட்டினாள் மௌனா.
அதை வாங்கிப் படித்த அகதாவும்,
"உங்களை என்னன்னு சொல்றது!!" என்று சிரித்து விட்டாள்.
"முதல் சம்பளத்தில் நான் உங்களுக்கு டிரெஸ் வாங்கிக் கொடுக்கிறது மாத்த முடியாத விஷயம். எல்லா மாதமும் அது தவறாமல் நடக்கும். ஆனால், இப்போ உங்களுக்கு உண்மையிலேயே வாங்கனும்னு ஆசைப்பட்ற பொருட்கள்" என்று அவர்களிடம் கோபித்துக் கொண்டாள்.
"எங்களோட ஆசை என்னன்னு நீயே யோசிச்சு வாங்கிக் கொடுத்துடு மௌனா" என்று சிவமணி மகளிடம் கூறி விட்டார்.
"சரி அப்பா. நானே வாங்கி அனுப்புறேன்" என்று சம்மதித்தாள்.
உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டனர் இருவரும்.
"எவ்ளோ ஹேப்பியா அதைவிட ரிலாக்ஸ் ஆக இருந்தேன் தெரியுமா மௌனா?" என்று உணர்ந்து கூறிய அகதா தோழியை நன்றியுடன் கட்டிக் கொண்டாள்.
இதைத் தானே மௌனாவும் எதிர்பார்த்தாள்.
"தாங்க்யூ மௌனா" என்று நன்றி கூறவும்,
"என்கிட்ட அடி வாங்கப் போற அகி" என கடிந்து கொண்டாள்.
மதிய உணவை முடித்து விட்டு, அன்னபூரணி மற்றும் சிவமணியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள் அகதாவும், மௌனாவும்.
கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர் மௌனாவின் பெற்றோர்.
பேருந்தில் ஏறி அமர்ந்ததும், அகதாவுக்கு உறக்கம் வந்ததால்,
"நான் தூங்குறேன் மௌனா" என்று கண்களை மூடிக் கொண்டாள்.
ஆனால், மௌனாவிற்கு தூக்கம் வரவில்லை. வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது தான், மஹதன் இன்னும் அங்கே இருக்கிறானா? அல்லது ஊருக்குக் கிளம்பி இருப்பானோ? என்று யோசித்துப் பார்த்தாள்.
ஒருவர் தன் இயல்பு மாறாமல், எங்கும் தன் நிலையிலிருந்து தவறாமல் இருந்தாலே அவர் மேல் நல்ல அபிப்பிராயம் தோன்றி விடும். அதுவும் காதலுக்கு முதல் காரணமாக இருக்கலாம் தானே!
தன்னைப் பிடிக்கவில்லை என்று மௌனா மறுத்திருந்தால் கூட, விலகி இருப்பான் மஹதன். தன் முயற்சி பிடித்திருந்ததாலும் , காத்திருக்கச் சொல்லியிருந்ததாலும் அவனுக்கு நம்பிக்கை தோன்றியது.
இதை இன்னும் கிஷானுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அதற்காக அவனைப் பார்க்கச் சென்றான்.
மாலை நேரம் , உணவு விடுதி ஒன்றில், சந்தித்துக் கொண்டனர் கிஷானும், மஹதனும்.
" மஹத்! அன்னைக்கு மௌனாவைப் பற்றி விசாரிச்சுட்டுப் போன அதுக்கப்புறம் ஆளையேக் காணோம்?" என்று சந்தேகமாக கேட்டான் கிஷான்.
"மௌனாவோட ஊருக்குப் போய்ப், பார்த்துப் பேசிட்டு வந்துட்டேன் கிஷான்" என்றதும் இவனுக்குப் புரை ஏறியது.
"அடப்பாவி!! அன்னைக்கு அவ்ளோ அட்வைஸ் செய்தேனே? அதையும் மீறி போய் , என்னப் பண்ணி வச்சிருக்க?" என்று பொரிந்து தள்ளினான் கிஷான்.
"டேய்! டெஸ்ட் தான் பண்ணிப் பார்க்கக் கூடாதுன்னு சொன்ன! எனக்கு அவ மேல் உண்மையிலேயே லவ் வந்துடுச்சு! அப்பறம் எதுக்கு நான் யோசிக்கனும்? அதான் போய் சொல்லிட்டேன்" என்று அலட்சியமாக கூறினான் மஹதன்.
"ஓஹோ! அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?" என்று கேட்டான் கிஷான்.
அடுத்த நிமிடங்களில், நடந்ததை விவரித்திருந்தான் மஹதன்.
"பார்த்தியா? அவங்க அக்சப்ட் பண்ணலை" என்றான்.
"ஆனால் ரிஜெக்ட்யும் பண்ணலையே?" என்று நண்பனிடம் சவடால் பேசினான்.
"ஆமாம். அதனால் வேலையெல்லாம் விட்டுட்டு அவங்க ஓகே சொல்ற வரைக்கும் , வெயிட் பண்ணப் போறியா?" என்றான் கிஷான்.
"பிஸினஸை ஏன் விடனும்? அதையும் ஜாலியாகப் பார்த்துட்டு, மௌனா யெஸ் சொல்ற வரைக்கும் வெயிட் பண்ணுவேன்" என கூறினான் மஹதன்.
"ஆனால் நான் சொன்னதுக்காக டெஸ்ட் பண்ணாமல், லவ் புரபோஸ் பண்ணதுக்கு தாங்க்ஸ்டா. யாரோட உணர்வுகளையும் ஹர்ட் பண்ணி, விளையாடக் கூடாது அதனால் தான் உன் மேல இருந்த உரிமையில், பாசத்தில் கடுமையாக சொல்லிட்டேன். சாரிடா!"
"ஹேய்!! நீ சொன்னதால் தான் நான் கிளியர் ஆக யோசிச்சு இருக்கேன்.அதுக்கு உனக்குத் தான் தாங்க்ஸ் சொல்லனும்" என்று நண்பனுடைய கரங்களைப் பரிவாக அழுத்தினான் மஹதன்.
"முக்தாகிட்ட பேசியாச்சா?" என்று கிஷானிடம் வினவினான்.
"பேசிட்டேன் மஹத்.அவ கொஞ்சம் யோசிக்கனும்னு சொன்னா"
"ஒரு விஷயம் கவனிச்சியா? நீயும், நானும் ஒரே சுவிட்சுவேஷனில் தான் இருக்கோம்"
"அட! ஆமா மஹத்!" என்று ஆச்சரியம் அடைந்தான் கிஷான்.
"ம்ம்! மௌனா நாளைக்கு ஹோட்டலுக்கு வந்துடுவா தான?" என்று கேட்டான் மஹதன்.
"வந்துடுவாங்க டா. அப்பறம் நீயும் இனிமேல் டெய்லி அங்கே வருவ போல?" என்று குறும்பாக கேட்டான் கிஷான்.
"இல்லை கிஷான். லவ் சொன்ன அப்பறம் எதுவும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு ஃபிக்ஸ் ஆகிட்டேன். நான் அவளைப் பழி வாங்கப் போறதா நினைச்சுட்டு இருக்கா. அதை முதல்ல மாத்தனும்.அதுக்கான ஸ்டெப் தான் இது!" என்று தெளிவாக கூறினான் மஹதன்.
"தெளிவான டிசிஷன்டா. அதை மட்டும் இல்லைன்னு ப்ரூவ் பண்ணிடு"
"ப்ரூவ் பண்ணி, லவ் வர வேண்டாம்டா. நான் நானாக இருக்கேன். பழி வாங்குற இன்டென்ஷன் எதுவும் எனக்கு இல்லைன்னு அவளே பார்த்து புரிஞ்சிக்கட்டும்"
பழி வாங்கும் படலம் இல்லையென்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று தான் மஹதன் நினைத்திருந்தான். அதை நிரூபித்துப் பெறும் காதலை அவன் ஏற்க மறுத்து விட்டான்.
மௌனாவின் இயல்பு எவ்வாறு தனக்குப் பிடித்ததோ, ஈர்த்ததோ அதே போல, தன்னுடைய இயல்பும் அவளை ஈர்த்தால், நிச்சயம் காதல் மலரும்.
"பார்சலில் இருக்கிற சாப்பாட்டை சுட வச்சுக் கொண்டு வர்றேன். நீ சாப்பிட்டுத் தூங்கு அகி" என்று அரைகுறை உறக்கத்தில் இருந்தவளை உலுக்கியவள், சமையலறைக்குள் போய், உணவைக் கொண்டு வந்தாள் மௌனா.
"தூக்கம் வருது மா" என டைனிங் டேபிளிலேயே தலை வைத்துப் படுத்துக் கொண்டாள் அகதா.
"எழுந்திரு அகி!!" என்று எழுப்பி, அவளை உண்ண வைத்து விட்டு, உறங்க அனுப்பினாள்.
பெற்றவர்களுடன் கழித்த சந்தோஷ நேரங்களை அசை போட்டுக் கொண்டு, துயில் கொண்டாள் மௌனா.
"குட் மார்னிங் சார்!" என புன்முறுவல் கொண்டு, வாழ்த்தியவளிடம்,
"ஹாய் மிஸ். மௌனா! குட் மார்னிங்" என அவளுக்குப் பதிலளித்தான் கிஷான்.
இந்த வேலையையும் விட்டு விடுவாளோ? என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. ஆனால் இப்போது மௌனாவுடைய சாதாரணமான நடவடிக்கையைப் பார்த்து நிம்மதி அடைந்தான்.
மௌனா எதையும் வெளியே காட்டிக் கொள்ளத் தயாராக இல்லை. மஹதன் மூலமாக இவனுக்குத் தெரிந்தாலும் ஒரு போதும் அவளுக்குக் கவலையில்லை என்ற ரீதியில் வேலையைப் பார்த்தாள்.
அலுவலக அறைக்குச் சென்ற கிஷான் தனது புலனத்தை ஆராய்ந்தான்.
இன்னும் அவனுடைய எண்ணை ,
முக்தா தன்னுடைய செல்பேசியில் சேமித்து வைக்கவில்லை என தெரிந்தது.
'நம்பரைக் கூட இன்னும் சேவ் பண்ணலையா? நிலைமை மோசம் தான்!' என்று நொந்து போனான் கிஷான்.
"நம்மளோட ஒரு பிராஞ்ச் - சில் வருமானம் கம்மியாக இருக்கு மூர்த்தி! என்னப் பண்ணலாம்?" என்று அலுவலக விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர் திருமூர்த்தியும், நீலகண்டனும்.
"நீலகண்டா! அதை நான் விசாரிச்சுப் பார்க்கிறேன்.அக்கௌண்ட் செக்ஷனிலும் விசாரிக்கிறேன்" என்று கூறினார் திருமூர்த்தி.
"இதை முதலில் முடிச்சுடுவோம்" என்று அடுத்த விஷயத்தைப் பார்த்தார் நீலகண்டன்.
"திருவான்மியூர் பிராஞ்ச்சில் வருமானம் தாராளமாக வருது" என்று அந்தக் கணக்கையும் காண்பித்தார்.
"மூர்த்தி ! நம்ம பங்குப் பணம் வந்ததும் என்னோட பணத்தை முக்தாவோட அக்கௌண்ட்டில் கிரெடிட் பண்றியா?" என்று கேட்டார் நீலகண்டன்.
ஒரு சிறு அதிர்வுக்குப் பிறகு,
"பண்ணிட்றேன் நீலகண்டா! அக்கௌண்ட் டீடெய்லை வாட்ஸப்பில் அனுப்பி விடு" என்றார்.
"கௌசல்யா தங்கச்சி எப்படி இருக்கா? மஹதன் நல்லா இருக்கானா?" என்று பொதுப்படையாக விசாரித்தார் நீலகண்டன்.
"அவங்க நல்லா இருக்காங்க. முக்தா எப்போ ஃபாரீன் கிளம்பறா? விசா எடுத்தாச்சா?" என்று கேட்டார் திருமூர்த்தி.
"விசா எடுத்தாச்சு மூர்த்தி. அடுத்த வாரம் கிளம்பிடுவா.அவளுக்கு நான் நல்ல மெமரீஸை கிரியேட் பண்ணிக் கொடுக்க நினைக்கிறேன். அதுக்குத் தான் அவ கூட அடிக்கடி வெளியே போய், பிடிச்சதை வாங்கி கொடுப்பேன்.ஃபோட்டோ ஃப்ரேம் போடப் போறோம் மூர்த்தி" என்று அடுக்கடுக்காக முகத்தில் பெருமையுடன் பேசிய நண்பனைப் பார்த்து, நிம்மதியாகப் புன்னகைத்தார் திருமூர்த்தி.
"சூப்பர் நீலகண்டா! அப்படியே கையோட மாப்பிள்ளைப் பார்த்துடு"
"அதைப் பத்தி தான் உங்கிட்ட பேசனும்னு இருந்தேன்.மஹதனோட ஃப்ரண்ட் கிஷானைப் பத்தி விசாரிக்க சொல்லி இருந்தேன். நல்ல குடும்பம், கொஞ்சம் கொஞ்சமாக தன்னோட கம்பெனியை அவனே உருவாக்கி இருக்கான்.குணத்திலும் குறை இல்லை. முக்தா கிட்ட ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்திக் கேட்டான். அவ அப்போ இருந்த மனநிலையில் வேண்டாம்னு சொல்லிட்டா. இப்பவும் அவன் அதே ஐடியாவில் தான் இருக்கான்" என்று விரிவாக கூறினார்.
"நீயே அவனைப் பத்தி விசாரிச்சேன்னு சொல்ற, அதே மாதிரி எனக்கும் அவனைப் பத்தி தெரியும் நீலகண்டா! ஆனால் முக்தா ஃபாரீன் போக இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு?"
"ஆமாம் மூர்த்தி. அதுக்குள்ள அவ நல்ல முடிவாக எடுக்கட்டும்னு நான் ஒன்னும் சொல்லலை. ஆனால் இந்த மாப்பிள்ளையை விட எனக்கு விருப்பமில்லை. இந்த சம்பந்தம் கை விட்டுப் போகக் கூடாதுன்னு நினைக்கிறேன்"
"அப்போ கிஷான் கிட்ட பேசி, இரண்டு வருஷம் காத்திருக்க சொல்லு, இல்லையா! முக்தாவை அவளோட ப்ளானைக் கேன்சல் பண்ண சொல்லு. முடியலைன்னா, ஃபாரீன் போக வேண்டாம்னு கேட்டுப் பார் நீலகண்டா. உனக்கு இந்த சம்பந்தம் வேணும்னா, முக்தாகிட்ட பேசுறது தான் சரி" என்றார் திருமூர்த்தி.
தான் விரும்பியது கிடைக்காமல் தான், வெளிநாடு செல்ல முடிவெடுத்து இருக்கிறாள் முக்தா.
இப்போது , 'நீ வெளிநாடு சொல்லாதே' என்று அவரால் எப்படி அவளைத் தடுக்க முடியும்? மகளின் மனதை தெரிந்தே காயப்படுத்த நினைப்பாரா நீலகண்டன்?
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக