முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 9

 


மகனோ பதிலில் தந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட, தந்தையோ செய்வதறியாது திகைத்திருந்தார். 


திருமூர்த்தி, "என் பேச்சுக்கு மரியாதையே இல்லை கௌசி" மனைவியிடம் பொருமலை ஆரம்பித்தார். 


கௌசல்யா, "வேண்டாம்னு சொல்றவனைப் பிடிச்சு சுத்தி சுத்தி அடிச்சா! அவனும் எவ்வளவு தான் பொறுமையாக இருப்பான்?" என்று மஹதனுக்காகப் பேசினார். 


"உன் மகனுக்கு மட்டும் ஆதரவா பேசு. புருஷனைப் பத்திக் கவலை இருக்கா?" 


அப்போதும் தன்னை உணராமல், மனையாளிடம் தான் கோபத்தைக் காட்டினார். 


"அவன் பொதுவாக தான் பதில் சொல்லியிருக்கான் ங்க. நான் கேட்டாலும் இதே தான் சொல்லுவான். நீங்க உங்க ஃப்ரண்டை கன்வின்ஸ் பண்ணுங்க" என்று கூறிவிட்டார். 


"அவன்கிட்ட நான் என்னன்னு போய் சொல்லுவேன் கௌசி? இவனைத் தான் நம்பினேன்" என தலையிலடிக்காத குறையாக வருத்தப்பட்டார் திருமூர்த்தி. 


"இவனை நீங்க நம்பலைங்க. உங்க பிஸினஸ் பார்ட்னர்ஷிப் போய் விடக் கூடாதுன்னு, யூஸ் பண்ணிக்கப் பார்க்கிறீங்க" என்று தைரியமாக கணவனை எதிர்த்தார் கௌசல்யா. 


எல்லாம் ஒரு அளவு தானே! மகனும் தான் எத்தனை தடவைகள் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக் கொண்டே இருப்பான்? தாய் மனம் பெற்றவனுக்காகப் பதறியது. அதனால் தான் இந்த விளைவு. 


"அப்படின்னு யார் சொன்னது கௌசி? என்னோட சொத்து எல்லாம் மகனுக்குத் தான? என்ன யூஸ் பண்ணப் பார்க்கிறேன்?" 


"பின்னே! இதை வேற எப்படி சொல்றதுங்க? உங்க ஃப்ரண்ட் உண்மையிலேயே ப்ளாக் மெயில் தானே செய்திருக்கார்?" இடுங்கிய கண்களுடன் கணவரிடம் வினவினார் கௌசல்யா. 


"ப்ளாக் மெயில் பண்ணலை கௌசி. இத்தனை வருஷ நட்புக்கு இதைக் கூட செய்ய மாட்டியான்னு கெஞ்சினான்! பாவமாக இருந்துச்சு" 


"ஓஹோ! நீங்க பாவம் பார்க்கிறதுக்கு என் பையன் வாழ்க்கை தான் கிடைச்சுச்சா?" 


கௌசல்யாவிற்குள் புதிய சக்தி எதுவும் புகுந்து விட்டதா? என்பது போல கணவனிடம் பொரிந்து கொண்டிருந்தார். 


"நான் என்னமோ அவனுக்கு ஸ்டேட்டஸ் பார்க்காமல் கல்யாணம் செய்து வைக்கிறா மாதிரி பேசுற கௌசி? நீலகண்டனோட பொண்ணு தானே? வசதிக்குக் குறைவாக இல்லையே?"


 எதையெல்லாம் நேர்மறையாக சொல்ல முடியுமோ, அதையெல்லாம் கடை பரப்பினார் திருமூர்த்தி. 


"இருக்கட்டுமே - ங்க. அதுக்காக அவனுக்குப் பிடிக்கலை அவ்ளோ தான்" என்று இவரும் உறுதியாக கூறவும், 


தொடர்ந்து இந்த பதில்கள் வந்த வண்ணம் இருந்தாலும், திருமூர்த்திக்கு கோபம் உண்டானது. 


"என்ன நீயும் எதிர்த்துப் பேசுற? அவனுக்கு நல்லது சொல்லிப் புரிய வை. அவன் சம்மதிக்கனும்" என்று உத்தரவிட்டார். 


"அவனோட பிஸினஸ் விஷயத்திலேயே நம்மளை தலையிட விடல. சொந்த கல்யாண வாழ்க்கையில் மட்டும் அதைப் பண்ணிடுவானா? நீங்களும், உங்க ஃப்ரண்ட் - உம் தான் பிஸினஸ் பண்றீங்க! அப்போ அதுக்குள்ள தேவையில்லாமல் அவனோட வாழ்க்கையைப் பணயம் வைக்கிறீங்க! அவனுக்குப் பொறுமை கம்மி. இருந்துமே இந்த அளவுக்குப் பேசி இருக்கான்ங்க. பெரிய மனுஷன் மாதிரி புரிந்து நடந்துக்கோங்க " என்று புத்திமதி சொன்ன மனைவியைப் பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தார் திருமூர்த்தி. 


"அதிகமாகப் பேசாத கௌசி. நான் கொஞ்சம் தனியாக இருக்கனும். போ" என்று விரட்டினார். 


துணையின் அருமை இப்போது எங்கே புரியப் போகிறது அவருக்கு. 


"மௌனா கிட்ட பேசனும் அன்னம். போன தடவையே நம்மளை ரொம்ப மிஸ் பண்ணினா" என்று உணவுண்டு கொண்டே கூறினார் சிவமணி. 


" ஆமாங்க. வேலைக்குச் சேர்ந்ததும் பிஸியாக இருப்பான்னு நானுமே அவ கால் செய்யும் போது தான் பேசுவேன். இருந்தாலும் மனசு தவிக்குது.பகல்ல பேசுவோம்-ங்க" என்று அன்னலட்சுமி கூறினார். 


தந்தையின் அருகாமையில் பிள்ளைகள் எப்போதும் பாதுகாப்பு, நிம்மதியாகத் தானே இருப்பார்கள்! மௌனாவிற்கும் அதே தான் தோன்றியதோ? 


இனிமேலும் மௌனாவிடம் அடிக்கடி பேசி விட வேண்டும் இல்லையெனில் மகள் ஏங்கிப் போய் விடுவாள் என்று முடிவெடுத்தார் சிவமணி. 


நீலகண்டன் தன் பொறுமைக்குப் போட்டிருக்கும் எல்லையைக் கடந்து விடுவார் போல! மகளிடம் அமைதியாக இருக்குமாறு கூறியவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. 


அலுவலகம், பார்ட்னர்ஷிப் என்றெல்லாம் மண்டையைக் கழுவி அனுப்பி வைத்தேனே? அதெல்லாம் வீணோ? 


முக்தாவிடமும் இதைச் சொல்லி விட, அவளோ, "எனக்குத் தெரியும் ப்பா. அந்த மஹதனை யாராலும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவன் தனியாக, சொந்தமாக பிஸினஸ் பண்றான். பரம்பரை சொத்தும் அவனுக்குப் போகிறதை தடுக்க முடியாது. அப்படியிருக்கும் போது, அங்கிள் அவனை என்ன சொல்லி வழிக்கு வர வைப்பார்?" என்று தந்தையிடம் கூறினாள். 


"அப்பாவுக்காக கூட அவன் மாறலாம் இல்லையா முக்தா? அந்த குருட்டு நம்பிக்கையில் தான்…" என்று இழுத்தார் நீலகண்டன். 


"ஒன்னுப் பண்ணுங்க. மூர்த்தி அங்கிளுக்குக் கால் செய்து கேளுங்க. அவர் குரலிலேயே உண்மை தெரிஞ்சிடும்"என்று வழி காட்டினாள் மகள். 


திருமூர்த்திக்கு அழைத்து விட்டார் நீலகண்டன். 


தனிமையில் இருக்க நினைத்தவருக்கு அந்த அழைப்பு சினம் மூட்டியது.


'நீலகண்டன்' பெயரைப் பார்த்ததும், திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்ததை அவரது வாய் முணுமுணுத்தது. 


அழைப்பை ஏற்று காதில் வைத்தவுடன், 

"மூர்த்தி!" கணீரென்ற குரல் அவருக்குள் பதட்டத்தை வாரியிறைத்தது. 


"சொல்லு நீலகண்டா" 


எச்சிலை விழுங்கிக் கொண்டு பேசியவரின் தடுமாற்றம், தக்க பதிலைக் கொடுத்தது நீலகண்டனுக்கு. 


"அப்பறம்! நான் கேட்டது, நீ வாக்குக் கொடுத்தது! என்னாச்சு?" அவரது குரலிலிருந்த நையாண்டித்தனத்தின் ஆட்சியைப் புரிந்து கொண்டார்


" மஹதனுக்கு விருப்பம் இல்லைன்னு தெளிவாக சொல்லிட்டான் நீலகண்டா" 


சொல்லித் தானே ஆக வேண்டும்! அதை இப்போதே, செல்பேசி வாயிலாக கூறியதில் நிம்மதி திருமூர்த்திக்கு. 


நீலகண்டன், "எல்லாத்தையும் யோசித்துப் பார்த்துத் தான் சொல்றியா மூர்த்தி? உன் பேச்சையே உன் பையன் கேட்கலையா?" என்று உச்சஸ்தாயியில் கேட்டார். 


"கேட்கலைடா.புரிஞ்சுக்கோ!" என்று மன்றாடினார். 


இவனிடம் இப்படியெல்லாம் மன்றாட வேண்டி வரும் என்று நினைத்துப் பார்த்திடாத திருமூர்த்தி, தன் இழிநிலையை எண்ணித் தொய்வு அடைந்தார். 


"என்ன மகன் அவன்? பெத்த அப்பாவோட வார்த்தையை மதிக்காமல் சுத்துறான்!" என்று மஹதனை அவனது தந்தையிடமே இழிவாக பேச ஆரம்பித்து விட்டார். 


"நீலகண்டா!" 


"என்ன மூர்த்தி? நான் சொல்றது கரெக்ட் தான? இதில் தான் உன் மரியாதை, மதிப்பு எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சும் இப்படி சொல்லிட்டானே?" 


தூபம் போடும் வேலையைத் தொடர்ந்தார் நீலகண்டன். 


"விடு மூர்த்தி. நான் உன்னை என்னமோ என்று நினைச்சேன். இப்படி ஆகிடுச்சே?" என்று திருமூர்த்தியைக் கிண்டல் செய்தார். 


அவமானத்தின் தடத்தைப் பொறுமையாக கடந்து செல்லும் நிலையில் இருந்தார். 


முன்னோக்கிச் செல்ல முடியாமல், வழியை அடைத்திருப்பது போல, மனதளவில் தள்ளாட்டம் கொண்ட திருமூர்த்தி உடலளவிலும் சோர்ந்தார். 


பேச்சற்று இருக்கிறான் நண்பன் என்பதை உணர்ந்த நீலகண்டன், 

"நீ ரெஸ்ட் எடு மூர்த்தி. உடம்பைப் பார்த்துக்கோ. நான் இதுக்கு வேற வழி தேடிக்கிறேன்" என்று இறுதியாக ஒருமுறை காலை வாரி விட்டு திருப்தியாக அழைப்பைத் துண்டித்தார். 


நீள்சாய்விருக்கையில் கால்களை நீட்டி விட்டுக் கொண்ட திருமூர்த்தி, 

"கௌசி" என்று நிதானமற்ற குரலில் மனையாளை அழைத்தார். 


தனிமையை விரும்பியவர், தன்னை அழைக்கவும், உடனே சென்றார் கௌசல்யா. 


"என்னாச்சு-ங்க?" தளர்ந்து போன உடலைக் குறுக்கிப் படுத்திருந்த கணவரைப் பார்த்ததும், ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டார் மனைவி. 


"ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வா-ம்மா" என்று நடுங்கிய, நளுங்கிய குரலில் கேட்டார் திருமூர்த்தி. 


"இதோ கொண்டு வரேன்-ங்க" 


சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். 


வாங்கி குடித்த மூர்த்தி, "இங்கேயே தூங்குறேன்ம்மா" என்று கண் அயர்ந்தார். 


நன்றாக இருந்த மனிதர் இப்படி ஆகி விட்டாரே! என்று கௌசல்யாவின் கண்களில் இருந்து நீர் பெருகியது. 


அதற்குள் கண் திறந்த மூர்த்தி, "நீ அழுகாத கௌசி.நான் அடுத்து என்னன்னு யோசிக்கனுமே? அதுக்குத் தான் தூங்கி எழுந்திரிக்க நினைக்கிறேன். நீ போ" என்று அனுப்பி வைத்தார். 


அவர் அப்படி சொல்லியதும், 

கௌசல்யா மகனுடைய அறைக்குச் சென்றார். 


கதவை தட்டியதும்,"வாங்க அம்மா" என்று கூறினான் மஹதன்.


நொடிப்பொழுதும் தாமதிக்காமல், அவன் முன்னால் சென்றவர், 

"மஹதா! அந்த நீலகண்டன் உங்க அப்பாகிட்ட என்ன சொன்னார்ன்னு தெரியலை.மனுஷன் ரொம்ப தளர்ந்து போய்ட்டார்" என்று தவிப்புடன் கூறினார் கௌசல்யா. 


"ஃபோனில் பேசினாரா அம்மா? இனிமேல் பேசுவதாக இருந்தால் எங்கிட்ட அவரை பேச சொல்லுங்க அம்மா" என்றான் தனயன். 


" இது இப்படியே முடியாதுன்னு நினைக்கிறேன் மஹதா" 


நீலகண்டனும், அவரது மகளும் இவ்விஷயத்தில் எளிதாக விடப் போவதில்லை என்பதை இவரும் புரிந்து கொண்டார் போலும்! 


இதில் சிக்கித் தவிப்பது மகன் மட்டுமில்லாமல் கணவனும் தான் என்பதால் தான் கௌசல்யாவிற்கு இருவரையும் காப்பாற்ற மனம் பரபரத்தது. 


" தெளிவாகச் சொன்ன பிறகு அவங்களுக்கு இருக்கிற பிடிவாதத்தில் நானும், அப்பாவும் பலியாக முடியாது அம்மா! அப்பாவுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்னு இல்லை. அவர் கூட தான் நிழலாக நான் இருக்கேன். ஆனால் அது அவருக்குத் தெரியாது. நீலகண்டன் அங்கிள் அவர் கூட இருக்கிற பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலகிட்டால், அப்பாவுக்கு எதுவுமே இருக்காதுன்னு நினைக்கிறாங்க. ஆனால் அது உண்மை இல்லை அம்மா.நீலகண்டன் அங்கிளுக்கும் அப்பா பயப்பட தேவையே இல்லை. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.அப்பாவுக்கு இப்போ மன அமைதி தேவை. அது மட்டும் போதும் " என்று தந்தைக்காக தான் எப்போதும் நிழலாக இருப்பேன் என்பதை தாயிடம் உரைத்தான் மஹதன். 


"நீ கூட இருக்கேன்னு அவர்கிட்ட நேரடியாக சொல்லலாமே மஹதா?" என்றார் கௌசல்யா. 


"சொல்லலாம் தான் அம்மா. ஆனால் அவர் கூட இருக்கிறவங்க எப்படிப்பட்ட ஆளுங்கன்னு பார்த்து தெரிஞ்சிக்கட்டும். நேரம் வரும் போது நானே அவர்கிட்ட பேசுவேன் அம்மா" 


அப்பா, மகளுடைய பிடிவாத குணத்திற்காக எல்லாம் தானும் , தன் தந்தையும் கொடி பிடிக்க முடியாது என்ற இறுமாப்பு மஹதனுக்கு இருந்தது. 


முக்தாவை நினைத்தால் இப்போதும் எரிச்சல் மூண்டது மஹதனுக்கு. 


அவளுக்கு அழைத்துப் பேசி விட வேண்டும் என்று கால் செய்தான். 


கண்கள் முழுவதும் புத்துணர்ச்சி பெற்று ஒளிர்ந்தது மஹதனின் அழைப்பைப் பார்த்த முக்தாவிற்கு. 


"மஹத்! இப்போ தான் அப்பாகிட்ட உன்னைப் பத்தி பேசிட்டு இருந்தேன். அதுக்குள்ள கால் செய்துட்டியே! எனக்கே டவுட் தான் ! நீ ஓகே சொல்வியா? மாட்டியான்னு? இப்போவும் எதிர்பார்ப்போட தான் கால் அட்டெண்ட் பண்ணப் போறேன்!" என்று துள்ளலுடன் அவனது அழைப்பை ஏற்றாள். 


"ஹலோ மஹத்!" உற்சாகத்தில் குறைவு எதுவும் இல்லை.


"முக்தா! நீயும், உங்க அப்பாவும் விளையாட்றதை நிறுத்துறீங்களா?" 


"விளையாட்றோமா? புரியல மஹத்"


"ப்ச்! என் அப்பாவை உங்கப்பா பிளாக்மெயில் பண்ணி இருக்கார்.அது தெரியும் தான?" என்று காட்டமாக கேட்டான் மஹதன். 


"அவங்க ரெண்டு பேரும் நேரில் பார்த்து பேசினது தெரியும் மஹத்.ஆனால்…" 


"தெரியும் தான? பார்ட்னர்ஷிப்பை வச்சு பிளாக்மெயில் பண்ற அளவுக்குப் போய்ட்டாரா உங்க அப்பா?" என்றதும், 


தந்தையின் செயல்பாட்டால் தனக்குத் தான் எதிராக நடக்கிறது என்று நொந்து கொண்டவள், 

"அப்படி இல்லை மஹத்" என்றாள். 


"இங்கே பாரு முக்தா. எங்க அப்பா கூட நான் வெளிப்படையாக பிஸினஸ் பண்ணலை தான். நான் சுதந்திரமாக கம்பெனி நடத்தினால் அப்பா கூட இல்லைன்னு அர்த்தம் கிடையாது. இதை உங்கப்பா கிட்ட சொல்லு. பார்ட்னர்ஷிப்பை முடிச்சுக்கலாம்ன்னா எங்க அப்பாவுக்கும் சம்மதம் ன்னு சொல்லிடு. எப்போ அதுக்கான லீகல் வொர்க் பார்க்கலாம்னு கேளு. நாங்கள் தயார். பாய்" என்று தெளிவான விளக்கமளித்து விடை பெற்றிருந்தது அவனது குரல். 


தந்தையின் அறைக்குள் வேகமாக சென்றாள் முக்தா. 


"இந்த ஹோட்டலை இன்னும் சரியாகவே சுத்திப் பார்க்கலையே நாம? வேலை நேரம் முடியட்டும். நிதானமாக சுத்திப் பார்ப்போம்" என்று ஆவலாகத் தன் வேலையைத் தொடங்கினாள் மௌனா.


- தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...