உணவகம் ஒன்றைத் தங்களது உரையாடலுக்காகத் தேர்ந்தெடுத்து இருந்தனர் நண்பர்கள் இருவரும்.
இம்முறை தான் தான் தவறு செய்து விட்டோம் என்றதொரு மாயையால் சூழப்பட்டிருந்த திருமூர்த்தியோ, நண்பன் நீலகண்டனின் வருகைக்காகக் காத்திருக்கலானார்.
வேண்டுமென்றே தாமதமாக வந்தாரோ! என்பது போல, ஆடி அசைந்து தான் வந்து சேர்ந்தார் நீலகண்டன்.
இந்தச் சந்திப்பும் முக்தாவிற்குத் தெரியாது! தெரிந்திருந்தால் தடுத்திருப்பாளோ?
மகளிடம் கூறாது அவளது வாழ்க்கைக்காகவும், சந்தோஷத்திற்காகவும் தான் இதைச் செய்கிறோம் என்று மனதில் உருப்போட்ட படி வந்த நண்பனின் முகத்தைப் பார்வையால் அளந்தார் திருமூர்த்தி.
மிதமான புன்னகை கூட இல்லாமல், முக பாவனைகளைக் கணிக்கக் கூட வாய்ப்புத் தராமல், அவரின் எதிரில் அமர்ந்தார் நீலகண்டன்.
"வா நீலகண்டா! சௌக்கியமா இருக்கியா?" என்று ஒப்புக்கு ஒரு வரவேற்புப் படலம் அரங்கேறியது.
"சௌக்கியமா இருக்கேன் மூர்த்தி. திணறாமல் வந்த விஷயத்தைப் பேசி முடி. அப்பறம் உனக்கும் நிம்மதியாக இருக்குமே!"
என்று நண்பனைப் பேச ஊக்குவித்தார் நீலகண்டன்.
"அது!! நீலகண்டா! உன் பொண்ணுப் போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு வந்ததைக் கேள்விப்பட்டதும் எனக்கு ஷாக் ஆயிடுச்சு.மஹதனை நல்லா திட்டி விட்டுட்டேன்"
இவர் தான் முகத்தில் நவரசங்களையும் காட்டிக் கொண்டு பேசினார். ஆனால் நீலகண்டனோ உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், கல் போல் இருந்தார்.
அதற்கு நேர் எதிராக மனதினுள்,
'அப்பாடா! இதுக்கப்புறமும் மஹதனைச் சமாளிக்கனுமோ என்று நினைச்சேன். அதுக்கு அவசியமே இல்லாமல் போயிடுச்சு' என்று பூரித்துக் கொண்டார்.
"அப்பறம் ஒரு விஷயம் சொல்றேன். கேட்டா நீ ரொம்பவே சந்தோஷப்படுவ" எனவும்,
நீலகண்டனின் பார்வை கூர்மையானது.
"எல்லாத்துக்கும் காரணமான அந்தப் பொண்ணு ரிசைன் பண்ணிட்டுப் போயாச்சு நீலகண்டா" என்று தன் நண்பனின் தோளில் கையைப் பதித்தார் திருமூர்த்தி.
"என்னது? அந்தப் பொண்ணு இப்போ அங்கே வேலைச் செய்யலையா?" என அவரிடம் ஆர்வமாக கேட்டார்.
"ஆமாம்.மஹதன் தான் அதைச் சொன்னான். இனிமேல் எந்தப் பிரச்சினையும் இல்லை நீலகண்டா!"
கண்களில் மின்னி மறைந்த பிரகாசத்தைக் கண்ட மாத்திரத்தில், திருமூர்த்திக்குக் காணாமல் போன, உற்சாகம் திரும்ப வந்து விட்டது.
தன் மகளுக்கு இனிமேல் எந்த இடையூறும் இல்லை என்று ஆத்ம திருப்தி அடைந்தார் நீலகண்டன்.
"அப்போ முக்தாவுக்கும், மஹதனுக்கும் கல்யாணத்தை நடத்தி வச்சுடலாமா?" என்று பகிரங்கமாக கேட்டார்.
அதில், விழி பிதுங்கிப் போனார் திருமூர்த்தி.
"அது!!! நீலகண்டா! இப்போது தான் இதை ஆறப் போட்டு இருக்கோம். அதுக்குள்ள கல்யாணப் பேச்சு எடுத்தா எப்படி?" என்று தடுமாறினார்.
இவர் இப்படித்தான் மறுமொழி கூறுவார் என்பதைக் கணித்திருந்த நீலகண்டன்,
"வேற என்னப் பண்ணலாம் மூர்த்தி? என் பொண்ணோட ஆசையை நான் சீக்கிரம் நிறைவேத்தி வைக்கனும்ல?
அந்த மௌனாவை மஹதன் கல்யாணம் பண்ணிக்கப் போறானோ என்று அவ ரொம்ப ஃபீல் பண்ணினா! அதைப் பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்துச்சு. இனிமேலும் தாமதிக்க விரும்பல மூர்த்தி. புரிஞ்சுக்கோ"
தீர்க்கமான குரலில் கூறிய நண்பனைப் பார்த்து திகைப்படைந்தார் நீலகண்டன்.
இந்த உறுதியை இவனிடத்தில் எதிர்பார்க்கவில்லை என்பது போல் பார்த்தார் திருமூர்த்தி.
ஏனெனில், அதைப் பற்றி மகனிடம் பேசு என்று கூட சொல்வான் என தான் எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், தோழனின் உறுதியான குரலில் இவரின் உறுதி மறைந்து போயிற்று.
"அதெப்படி?? மஹதன்!!" என்று அநியாயத்திற்குத் திருமூர்த்திக்கு வாய் குழறியது.
"உன் மகன் தான் என் பொண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்துக்குக் காரணம்! அதனால், மஹதனைச் சம்மதிக்க வைக்கிறது உன் பொறுப்பு மூர்த்தி. நம்ம பிஸினஸ் பார்ட்னர்ஷிப் இதுக்கப்புறமும் தொடரனும்னு ஆசை இருந்தா, நீ இதைச் செய்து தான் ஆகனும்"
நண்பனாகவே இருந்தாலும், தன் பலவீனத்தை அவனிடம் பகிர்ந்து கொள்வது எவ்வித ஆபத்தில் இழுத்து விடும் என்பதை தற்போது உணர்ந்திருந்தார் திருமூர்த்தி.
தன் அலுவலகங்கள், தன் பங்குப் பணம் அல்லாது, நீலகண்டனின் பணமும் முதலீடு செய்யப்பட்டு, உருவாக்கிய அலுவலகங்கள் தான் இப்போது உயரத்திலும், பண வரவிலும் முதன்மையாக உள்ளன.
அப்படியிருக்க, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனக்குச் செக் வைக்கும் நண்பனைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்தார் திருமூர்த்தி.
"நீலகண்டா! இப்படியொரு செக் வைக்குற? உனக்கு மனசாட்சி இருக்கா?" என்று மனம் கேளாமல் நண்பனிடம் வினவினார்.
"உன் பையனுக்கு முதல்ல மனசாட்சி இருந்துச்சா?" என்று இரக்கமின்றி கேட்டார் நீலகண்டன்.
அதற்குப் பிறகு பதிலேதும் சொல்லாமல், வந்த வழியாக சென்று விட்டார் திருமூர்த்தி.
அவரை இப்படி நோகடிப்பதற்கு விருப்பமில்லை என்றாலும், நீலகண்டனுக்கு வேறு வழி தெரியவில்லை.
மகளுடைய வாழ்க்கைக்கு முன்னால், எதுவும் பெரிது இல்லை என்பது போல் அவர் நடந்து கொண்டது திருமூர்த்திக்கு வேதனை அளித்தது.
வீட்டிற்குப் போனவர், மனைவியிடம் கூட இதைப் பகிர்ந்து கொள்ளவில்லை.ஆனால், அவரது முகத்தில் தெரிந்த வேற்றுமை கண்டு, நீலகண்டனுடனான பேச்சு வார்த்தையை அவர் சொல்லாமலேயே அறிந்து கொண்டான் மஹதன்.
அவனுக்கு முக்தாவை மணந்து கொள்ளும் எண்ணம் துளி அளவும் இல்லை.
அதை அவளிடமும், நீலகண்டனிடமும் புரிய வைக்க முயன்று அயர்ந்து போனான் மஹதன். அதைத் தான் இப்போது தந்தையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்.
இதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று மஹதன் கடந்து செல்ல நினைத்து விட்டான்.
"மூர்த்தியைப் பார்த்தாலும் பாவமாகத் தான் இருக்கு. சுயநலம் பிடிச்ச இந்த மனசுக் கேட்க மாட்டேங்குதே! மன்னிச்சுடு மூர்த்தி"
என்று மகளுடைய அறைக்குச் சென்றார்.
கதவைத் தட்டிய சத்தம் கேட்டதும்,
"உள்ளே வாங்க அப்பா" என்று உள்ளே அழைத்தாள் முக்தா.
"முகி! திருமூர்த்தி வெளிநாட்டில் இருந்து வந்துட்டான். அவன் கிட்ட மஹதனுக்கும், உனக்கும் கல்யாணம் நடக்கனும்னு ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிட்டேன். அவனும் பையனைச் சீக்கிரம் கன்வின்ஸ் பண்ணிடுவான்" என்று மகளின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க முயற்சித்தார் நீலகண்டன்.
புன்னகைக்காமல், தந்தையைக் கூர்மையாகப் பார்த்தாள் முக்தா.
"உண்மை தான் முகி. மூர்த்தி நிச்சயமாக எனக்காக இதைச் செய்வான். நீ கவலையேபடாதம்மா" என்று அவளது தலையை வருடிக் கொடுத்தார்.
"என்னால் நம்பவே முடியல அப்பா. மஹதன் அவ்ளோ உறுதியாக இருந்தானே? அப்பறம் எப்படி?"
தன்னாலாகாத விஷயத்தைத் தந்தை எப்படி சுமூகமாக முடித்தார்? என்ற ஐயம் முக்தாவிற்கு வெகுவாக எழுந்தது.
"அதெல்லாம் மூர்த்திகிட்ட பேசிட்டேன் முகி" என்று அழுத்தம் திருத்தமாக அவர் கூறினாலும்,
"பேசிட்டீங்க சரி. மஹதன் எப்படி ஓகே சொல்லுவான்? அவன் என்னச் சின்னக் குழந்தையா அப்பா? அவனோட முடிவுகளுக்குள்ள யாரையும் தலையிடவே விட மாட்டான். அப்பா சொன்னால் இதை மட்டும் செய்துடுவானா?"
மஹதனைப் பற்றி இவளுக்கு நன்றாகவே தெரியுமே! தந்தைக்கும் தெரியும்! பிறகு எப்படி இது சாத்தியம்? என்று முக்தாவிற்குத் தோன்றாமல் இருக்குமா?
"செய்ற மாதிரி மகன்கிட்ட மூர்த்தி சொல்லுவான். அதைப் பத்தி உனக்கு என்னக் கவலை? மஹதன் மனசு மாறினால் சரி தான? கண்ணைக் கசக்காம இரு" என்று முக்தாவிடம் கூறினார் நீலகண்டன்.
மலையளவு அவருக்கு இருக்கும் திடம் , இவளுக்குக் குன்றளவும் கூட இல்லை.
'தன் மேல் எந்தப் பழியும் விழுந்து விடக்கூடாது' என்று கவனமாக இருக்க நினைத்தாள் முக்தா.
"அதுவே படைக்கும்,
அதுவே உடைக்கும்,
மனம் தான் ஒரு குழந்தையே!"
என்ற பாடலைக் கண்மூடிக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.இப்பாடலின் வரிகளுக்கு அடிமை அவள்! தனக்கு மனச் சுணக்கம் வரும் நேரங்களில் எல்லாம் இப்பாடலை ஒலிக்க விட்டு, உலகை மறந்துக் கேட்டு ரசிப்பாள் மௌனா.
இப்போதும் அதே போல, பாடலின் வரிகளை ஆழ்ந்து அனுபவித்துக் கேட்டாள்.
ஊன் உண்ணத் தோன்றவில்லை! அமைதி கொள் பெண்ணே! என்றது மனம். பாடல் முடிந்ததும், ஹெட்செட்டைக் கழட்டியவள்,
"இந்தப் பாட்டு மட்டும் இல்லைன்னா, நம்மப் பொழப்பு அவ்ளோ தான்" என்று கூறிக் கொண்டாள்.
"நீ சாப்பிட வரப் போறியா? இல்லையா?" என்று அவளை அதட்டிக் கேட்டாள் தோழி அகதா.
"பசிக்கலை அகி" என மறுத்தாள் மௌனா.
"சாப்பாட்டு மேல தான் கோபம் எல்லாம் வருமா? ஒரு விஷயம் மனசை உடைச்சிருச்சுன்னா, அதை மட்டும் விட்டுத் தள்ளி ஒதுங்கி வந்திடனும். அதை விட்டுட்டு, அதுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாததை எல்லாம் வேணும் என்றே ஒதுக்கக் கூடாது மௌனா! சாப்பிடலன்னா தூக்கம் வராது, இதையே நினைச்சுட்டு தூங்காமல் இருப்ப.இருக்கிறதையும் பறி கொடுத்துடாத. அது பணமாக இருந்தாலும் சரி, நிம்மதியாக இருந்தாலும் சரி" என்று தன் கருத்து மழைகளைப் பொழிந்து கொண்டிருந்தாள் அகதா.
"ப்ளீஸ் அகி! என்னால முடியல. நானே வந்துட்றேன்" என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, உண்ண ஆரம்பித்தாள் மௌனா.
அகதாவுக்குமே தினந்தோறும் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவளோ நிறைகுடம் போல் தளும்பாமல், தன் போக்கில், வாழ்கிறாள் அதைத் தான் தோழிக்கும் போதித்துக் கொண்டு இருக்கிறாள்.
(அவளது வாழ்க்கையைப் பற்றிப் போகப்போக தெரிந்து கொள்வோம்)
தோழியிடமிருந்து பெற்ற அறிவுரைகள் நன்றாக வேலை செய்தது எனலாம். மௌனாவோ,
"மஹதனோடது மட்டும் தான் ஹோட்டலா? வேற வேலையைத் தேடி அவன் முன்னாடி போய் நிக்கனும்" என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.
அடுத்த நாளிலிருந்து, தன் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு, வேலையைத் தேட கிளம்பி விட்டாள் மௌனா.
தந்தை, தாய்க்கும் சம்பளம் அனுப்பத் தேவையில்லை என்றாலும், அவர்களிடம் அவ்வப்போது வேலையைப் பற்றி பகிர்ந்து கொண்டால் போதும் என்று வாரத்திற்கு இரண்டு நாட்கள் அவர்களுக்கு அழைத்துப் பேசி விடுவாள்.
அவளுக்கு வேலை கிடைக்கும் வரை, தோள் கொடுத்துச் சகல வழிகளிலும் உதவினாள் அகதா.
நண்பியின் ஊக்கத்தாலும் , அவளது தேடலுக்கானப் பலனாகவும் மௌனாவிற்கு வேலையும் கிடைத்தது.
"எம்.டி வந்திருக்கார். அவரைப் பார்த்துட்டு வேலையைப் பாருங்க. ஆல் தி பெஸ்ட் " என்று மேனேஜர் கூறி விட்டுச் சென்றதைக் கேட்டதும்,
'என்ன மஹதனோட ஹோட்டலில் நடந்தா மாதிரியே இருக்கு' என்று திகைத்தாள்.
ஆனாலும், வேலையின் முதல் நாள் அல்லவா! அந்த தங்கும் விடுதியின் முதலாளியைப் பார்க்கச் சென்றாள் மௌனா.
அங்கு தனக்குக் கிடைத்த அதிர்ச்சியை யாரிடம் விளக்கிக் கூறப் போகிறாள் மௌனா?
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக