கிட்டத்தட்ட ஆவேசமான குரலில் தான் பேசினான் மஹதன்.
முக்தாவும், இவளும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக இருப்பது மஹதனுக்கு எரிச்சலையே கொடுத்தது.
ஆடிப் போய் உட்கார்ந்திருந்த மௌனாவோ, அவனது வார்த்தைகள் தந்த வீரியத்தில் பேச்சற்று, தளர்ந்திருந்தாள்.
மௌனாவின் நிலையைக் கண்ணுற்ற மஹதன்,
"தண்ணீர் குடி" என்று தம்ளரை நீட்டினான்.
அவனது குரலில் தான் நிகழ்காலம் புரிந்தது மௌனாவிற்கு.
கண்கள் தன் ஒளியை இழந்தது போல், வாடிக் கிடந்தவள்,
"வேண்டாம் சார். அவங்களுக்கு என்ன பதில் சொன்னீங்க?" என்று மட்டும் வினவினாள்.
தம்ளரை எடுத்த இடத்தில் வைத்தவன்,
"நான் உன்னைக் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணிக்கவும் ஆசைப்படலைன்னு தெளிவாக சொல்லிட்டேன்" என்று விளக்கமளித்தான் மஹதன்.
தான் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை என்று அவனை ஏறிட்டவள்,
"நான் இங்கே வேலையைப் பார்க்க வந்தா, அதைத் தவிர எல்லாமே நடக்குது. இப்படி பிரஷரோட இந்த வேலையை நான் பார்க்கனுமா சார்? ரிசைன் பண்ணலாம்னு முடிவெடுத்து இருக்கேன்"
பிரம்மிப்பின் மறு பெயர் தான் மௌனாவோ! அப்படித் தான் எண்ணினான் மஹதன்.
"எனக்கும், உனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் கூட இல்லை. அப்படி இருக்கும் போது நீ வேலையை விட்றதுங்கிறது நல்ல விஷயமாகத் தோனல" என்று கூறினான் மஹதன்.
"இல்லை சார். இனிமேல் நீங்களும், அவங்களும் சேர மாட்டீங்கன்னு இல்லையே! முக்தாவும், அவங்களோட அப்பாவும் பேசியதை வச்சுப் பார்க்கும் போது, உங்களை நல்லா தெரிஞ்சவங்களா இருக்காங்க. அவங்களை எதிர்த்து எனக்கு உதவி செய்து இருக்கீங்க. இப்போ வரைக்கும் வந்திருக்கிற இந்தப் பிரச்சினை, இன்னும் சில நாட்களில் தொடர வாய்ப்பு நிறையவே இருக்கு சார். அப்போதும் நீங்க எனக்குச் சப்போர்ட் பண்ணுவீங்க என்று உறுதியாகச் சொல்ல முடியாது இல்லையா!"
தர்க்க ரீதியாக பேசினாள் மௌனா.
இந்த சம்பவத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நிறைய வழிகள் இருந்தும், வேலையை விட்டு நிற்கிறேன் என்பவளது சுயமரியாதையை இனிமேலும் கூறு போட்டு, ஆராய்ந்துப் பார்க்க மஹதனுக்கு மனம் வரவில்லை.
"சரி. போய் இராஜினாமா கடிதத்தைத் தயார் செய்து கொண்டு வா" என்று சொன்னவுடன் தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் மௌனா.
"நன்றி சார்" என வெளியேறியவள், இராஜினாமா கடிதத்தைத் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.
அந்த தங்கும் விடுதியில், மௌனா மட்டும் தான் தற்போது வேலையில் இருக்கிறாள்.
சேர்ந்த முதல் நாளே இரத்தக் காயம், இரண்டாம் நாள் வேலையை இராஜினாமா செய்யப் போகிறோம்! என்ன ஒரு புதுவிதமான அனுபவம் இது! என்று கடிதத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் மஹதனைச் சந்தித்தாள் மௌனா.
"உன்னோட வேலையை நீ எப்படி செய்ற என்று கூட நான் பார்க்கல. சம்பளமும் வாங்காமல், இரண்டாவது நாளே ரிசைன் பண்ற! இதுக்கு ஒரு வகையில் காரணம் நான் தான? என்னோட வேற ஹோட்டலில் வேலைப் பார்க்க உனக்குச் சம்மதமா?"
அவளை விட்டு விடக் கூடாது என மனம் அலை பாய்ந்தது. அதற்கு அவளுடைய நேர்மையும், துணிச்சலும் தான் முதலாக இருந்தது.
உடனே மறுத்து விட்டாள் மௌனா.
"உங்க சம்பந்தப்பட்ட எதுவுமே எனக்கு வேண்டாம் சார்.நான் இங்க வேலைக்குச் சேரலாம்னு எடுத்த முடிவை நினைத்து வருத்தப்பட்றேன்.என்னோட முடிவு சரியாக இல்லைன்னு நினைக்கிறது இது தான் எனக்கு முதல் தடவையும் கூட சார்" என்றதும்,
எங்கிருந்து தான் சினம் துளிர்த்ததோ மஹதனுக்கு,
சாதாரணமாக மௌனா அந்த வேலையும் வேண்டாமென்று மறுத்திருந்தால் கூட, மௌனாவை விட்டிருப்பானோ?
"ஓஹோ! என் சம்பந்தப்பட்டது எதுவுமே உனக்கு வேண்டாம்ல!"
அவள் கூறியது புரியாதவன் போல் கேட்டான்.
"வேண்டாம் சார்" என்று தன் மறுப்பைத் தெளிவாகத் தெரிவித்தாள் மௌனா.
"இந்தா உன்னோட சர்டிஃபிகேட்ஸ். எடுத்துட்டுப் போய்ட்டே இரு" என அவளது இராஜினாமா கடிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான் மஹதன்.
திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினாள் மௌனா.
உடனே தன் காரியதரிசிக்கு அழைத்து,
"உடனே நம்ம ஹோட்டலுக்குப் புதுசா ஒரு ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேணும்னுப் நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுங்கள்" என்று கூறி விட்டு, மௌனாவின் இராஜினாமா கடிதத்தை வெறித்துப் பார்க்கலானான் மஹதன்.
அங்கே இருந்து வெளி வந்ததும், சீராக மூச்சு விட்டுக் கொண்ட மௌனா, இந்நேரம் அகதாவும் வீட்டில் இருக்க மாட்டாள் எனவே,
வேறு எங்காவது செல்ல நினைத்தாள் மௌனா.
பூங்கா ஒன்று தென்படவும் அங்கு அமர்ந்து கொண்டு, செல்பேசியில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் கார்ட்டூன்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள் மௌனா.
மாலை முகம் கடுக்க வீட்டிற்கு வந்த கணவனைப் பார்த்ததும் கௌசல்யாவின் வதனமும் கலக்கத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.
'நான் ஒரு முட்டாள்! உடனே கால் செய்து சொன்னேன் பாரு' என்று தன்னைத் திட்டிக் கொண்டார் கௌசல்யா.
"ஏங்க?" என்று திருமூர்த்தியை மெலிதான குரலில் அழைத்துப் பார்த்தார் மனைவி.
அவரோ, "ம்ம்… என்ன கௌசி இது?"
அவரது வார்த்தைகளில் ஆதங்கம் மட்டுமே நிறைந்திருந்தது.
வந்தவுடனேயே கணவர் இப்படி ஆரம்பிப்பார் என்று கௌசல்யா எதிர்பார்க்கவில்லை.
"அவங்க தான் தவறா நடந்துக்கிட்டாங்க. நம்மப் பையன் மேல எந்தத் தப்பும் இல்லைங்க" என்று மகனுக்காகப் பரிந்து பேசினார்.
"தப்பு யார் மேலேயோ இருந்துட்டுப் போகட்டும் கௌசி. நீலகண்டன் கிட்ட அப்படி பேசினது முறையே இல்லை. நான் ஊர்ல இருந்திருந்தால் கூட பரவாயில்லை.விஷயம் கேள்விப்பட்டதும், தலையைப் பிய்க்காத குறையாக கிளம்பி வர்றேன். மஹதனுக்கு ஏன் இந்த வேலை?" என்று மகனைக் குறை கூறினார் திருமூர்த்தி.
இடைவெளி விட்டு,
"அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? பார்ட்னர்ஸிப்பை மறந்து விட வேண்டியது தான்!"
என்று ஏமாற்றமாக கூறினார்.
அவருக்குச் சரி, தப்பு பற்றிய கவலை எதற்கு? நண்பனுடைய எதிர் வேலை என்னவாக இருக்கும் என்று தான் பரிதவித்தார் திருமூர்த்தி.
இவரிடம் மறைமுகமாக தன் மகளுக்கு மஹதனைச் திருமணம் செய்து, வைக்க கேட்டுக் கொண்டு இருந்தார் நீலகண்டன்.
அதைப் பற்றிய முடிவு எடுப்பதற்குள், இந்த நிகழ்வுச் சம்மட்டியால் அடித்தது போல், அவருக்கு அதிர்ச்சியைக் காண்பித்து விட்டது.
" மஹதன் வந்ததும், அவன் கிட்ட, அந்தப் பொண்ணை உடனே வேலையில் இருந்து நீக்கச் சொல்லு கௌசி" என்று தீர்க்கமாக கூறினார் திருமூர்த்தி.
"அதுக்கு அவசியமே இல்லை அப்பா. அவ இராஜினாமா பண்ணிட்டுப் போய்ட்டா"
என்றவாறே உள்ளே வந்தான் மஹதன்.
வீட்டிற்குப் போவதற்குள் மௌனாவிற்குத் தந்தையிடம் பேச மனம் துடித்தது.
அகதா வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதால், நேரத்தை விரயம் செய்யாமல், உடனே அவளது தந்தை சுதாகருக்கு அழைத்து விட்டாள்.
இதே சமயத்தில்,
" உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அப்பா?" என்று நீலகண்டனிடம் பொங்கிக் கொண்டிருந்தாள் முக்தா.
மௌனாவைச் சந்தித்து விட்டு வந்ததும், அவசரக் குடுக்கையாக மகளிடம் அனைத்தையும் ஒப்புவித்திருந்தார்.
அதற்குத் தான் முக்தா இப்போது கோபத்தில் அர்ச்சித்துக் கொண்டு இருக்கிறாள்.
"நிதானமாகக் கேளு முக்தா" என மகளுக்கு வலியுறுத்தினார் நீலகண்டன்.
"நிதானமாகக் கேட்கிற மாதிரியாக நீங்கப் பண்ணிட்டு வந்து இருக்கீங்க? என்னைப் பொறுமையாக இருக்கச் சொல்லிட்டு, அவளுக்கு மறைமுகமாக பயத்தை உண்டு பண்ணிட்டு வந்திருக்கீங்க" என தந்தையின் தவறைச் சுட்டிக் காட்டினாள் முக்தா.
"நீ தான் எங்கிட்ட அப்படி புலம்புனியே? மஹதன் அவளைக் கல்யாணம் செய்துக்கப் போறானா என்று கேட்டியே! அதுக்கப்புறமும் என்னால சும்மா இருக்க முடியல முகி!" என்று ஆற்றாமையுடன் கூறினார் நீலகண்டன்.
"அதுக்கு இப்படியா பண்ணுவீங்க? அதுவும் மஹதனுக்கு முன்னாடியே மிரட்டி இருக்கீங்க! அவனுக்கு அது புரியாமல் இருந்திருக்கும்னு நினைக்கிறீங்களா அப்பா?"
தன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை, இப்படி உருவெடுத்து விட்டதை நினைத்தும், மஹதனை நினைத்தும் முக்தாவிற்கு உலகமே இருண்டு போனது.
"என்கிட்ட பிடிக்கலைன்னுப் பட்டுன்னு சொன்னான், இருந்தாலும் எப்படியாவது சமாளிச்சு, சமாதானப்படுத்தலாம்ன்னு கனவு கண்டேனே அப்பா! என்னை இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விட்டுட்டீங்களே! மஹதனும் சும்மா இருக்க மாட்டானே! உங்களோட நானும் கூட்டு சேர்ந்து தான் அவளை மிரட்டச் சொன்னேன்னு நினைப்பானே!"
இப்போது தான் நீலகண்டனுக்குமே வீரியம் புரிந்தது.
அவரிடம் கத்தி விட்டு, ஓய்ந்து போய் அறைக்குள் அடைந்து கொண்டாள் முக்தா.
இவ்விஷயத்தை ஆறப் போட, அவருக்கு இருந்த ஒரே துருப்புச்சீட்டு தன் நண்பனும், கம்பெனிப் பார்ட்னருமான மஹதனின் தந்தை திருமூர்த்தி!
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக