முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 4

 


மௌனா எழுந்து தயாராவதற்குள் அகதா கிளம்பி இருந்தாள். 


"ஏய் அகி! இவ்ளோ சீக்கிரம் கிளம்புற?"

என்று வியப்படைந்தாள் மௌனா. 


"ஆமாம் மௌனா. இன்றைக்குச் சீக்கிரம் வர சொல்லிட்டாங்க. உனக்கு ஃப்ளாஸ்க்ல டீ இருக்கு. காலைச் சாப்பாடு ரெடி. நான் போய்ட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு சென்றாள். 


அகதா ஒரு மென்பொருள் பொறியாளர். அவளுக்கு முக்கியமான ப்ராஜெக்ட் வேலை இருந்ததால், காலை விரைவாகவே எழுந்து அலுவலகம் சென்று விட்டாள். 


தேநீரைச் சுவைத்தவள், நேற்றைய பரபரப்பு இன்று இல்லாது, மெதுவாகவே கிளம்பினாள். 


குளிக்கச் செல்வதற்கு முன்னர் நெற்றிக் காலத்தைப் பரிசோதித்துப் பார்த்தாள் மௌனா. 


பிரித்துப் பார்த்தவுடன் காயத்தில் இரத்தக் கசிவு தென்படாததால், பிளாஸ்திரியைக் குப்பையில் போட்டு விட்டாள். 


ஆனால் இலேசாகத் தழும்பு இருந்தது. அதைப் பார்க்கவும், 

"முக்தா உன்னோட கிஃப்ட் தான் இது!" என்று சொல்லிக் குளித்து முடித்தாள். 



இங்கே, மஹதனோ , "நான் பேசியது எதுவுமே தப்பு இல்லை அம்மா. முக்தாவுக்கும், அவளோட அப்பாவுக்கும் சரியாகப் புரிய வச்சுட்டேன். எந்த கனவும் காணக் கூடாது தான? முக்தாவோ திரும்பத் திரும்ப மௌனாவை லவ் பண்றியா? கல்யாணம் பண்ணப் போறியா? என்று கேட்டு இம்சைப் பண்ணினா! நான் ரொம்ப பொறுமைசாலி கிடையாதே அம்மா! ஒரு தடவை சொன்னால் சொன்னது தான்" என்று காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருந்தான். 


கௌசல்யா, "சரி தான் மஹதா! ஆனால் நீ ஏன் கடுமையாக நடந்துக்கிற? நீலகண்டன் சார் உன் அப்பாவோட பிஸினஸ் பார்ட்னர். அப்படி இருக்கும் போது, அவங்க ரெண்டு பேருக்கும் மோதல் ஏற்படுமே! அதை நினைச்சுப் பார்த்தியா?" என்று வருத்தத்துடன் கூறினார். 


அவருக்கும் முக்தாவின் நடவடிக்கை மகிழ்ச்சியைத் தரவில்லை தான்! அதற்காக நீலகண்டனிடம் தங்கள் மகன் நடந்து கொண்ட முறை சரியல்ல என்று அவருக்குத் தோன்றியது. 


நீலகண்டன் தங்கள் குடும்பத்திற்கு நல்ல நண்பரும் கூட. நேற்றே கணவனிடம் இது பற்றி கூறி இருந்தார். இன்று மதியம் திருமூர்த்தியும் தாயகம் திரும்ப இருக்கிறார்.


அவருக்கும் இதில் அதிருப்தி இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 


ஏனெனில், நீலகண்டனும், அவரும் நல்ல நண்பர்கள். தொழில் பாதிக்காத வகையில், தங்களுக்குள் எந்தவித பூசல்களோ இல்லாமல், சீராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 


அப்படியிருக்கும் போது, தங்களது பிள்ளைகளால் இருவருக்குமே தர்ம சங்கட நிலை ஏற்படும் என்று தானே கணவர் நினைப்பார் என கௌசல்யாவிற்குத் தோன்றியது. 


அதை மஹதனிடம் சொல்லவும், 

"முக்தாவோட முட்டாள்தனத்திற்கு நான் பலியாக விரும்பல அம்மா. நீலகண்டன் அங்கிள் கிட்ட சொல்லிட்டேன். இனி அவராச்சு, அவரோட பொண்ணாச்சு. நான் ஆஃபீஸூக்குப் போய்ட்டு வர்றேன்" என்று அவன் சென்று விட, கௌசல்யாவிற்கோ கணவனின் நிலையை அறிந்து கொள்ள மனம் திண்டாடியது. 


மௌனா என்னும் அப்பெண்ணைப் பாராட்டியதும் கௌசல்யா தான்.ஏனெனில் அவளது செய்கைப் பாராட்டத்தக்கது தான். ஆனால், குடும்பம், நண்பர்கள் மற்றும் தொழில் என்று வரும் போது, சுயநலத்தின் பிடியில் சிக்கிக் கொள்வது இயற்கையே! 


கௌசல்யா இப்போது அந்த நிலையில் தான் இருக்கிறார்.விஷயம் தீவிரமாகி விடுவதற்குள் அனைத்தையும் சீர்படுத்த வேண்டும் என்று நினைத்தார். 


மௌனாவை இனியும் வேலைக்கு வைத்திருக்க வேண்டாம் என்று மகனிடம் வலியுறுத்த எண்ணினார். 


அவளுக்குமே இவர்களால் ஆபத்து வருவதற்கு வாய்ப்புள்ளது தானே? 


இவர் இங்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டு இருக்க, மஹதனின் தந்தை திருமூர்த்தியோ முந்தைய நாள் விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து, இன்னும் நண்பன் தனக்கு அழைக்கவில்லையே? என்று துணுக்குற்றார். 


அலுவலக விஷயமாக வெளிநாடு சென்றிருந்தவர், வேலையை முடிக்கும் தருவாயில், 

 மனைவித் தனக்கு அழைத்துப் பேசியதைக் கேட்டு, திகைத்திருந்தார் திருமூர்த்தி. 


நீலகண்டனும், அவரது மகளும் சாமானியர்கள் அல்ல.இவ்விஷயத்தை அப்படியே விட்டு விடும் அளவிற்குப் பெருந்தன்மையானவர்களும் கிடையாது. 


தான் இந்தியா சென்று சேர்ந்ததும், ஒரு பெரிய பூகம்பமே வெடிக்கப் போகிறது என்று மட்டும் அவருக்கு உறுதியாக தெரிந்தது. 


வீடு செல்லும் நேரம் வரைக்கும், நீலகண்டனையும், முக்தாவையும் எப்படியெல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தார் திருமூர்த்தி. 


தனக்கு இப்படியொரு சிக்கலை ஏற்படுத்தி விட்டானே! என்று மகன் மீது கோபமும், வருத்தமும் ஏற்பட்டது.


தன் பணியில் இருந்த மௌனாவிற்கோ, ஒரு அசௌகரியம் தோன்றியது. அது எதனால் என்று அவளால் கண்டறிய இயலவில்லை. 


அப்போது மஹதன் அலுவலகத்தை அடைந்திருந்தான். 


வழக்கமான நேரத்தை விட விரைவாக வந்தவனைக் கண்ட காவலாளி சலாமிட்டுக் கொண்டே, அவன் கார் உள்ளே செல்ல அனுமதித்தான். 


அசௌகரிய உணர்வையும் தாண்டி, வேலையில் முனைப்பாக இருந்தாள் மௌனா. 


அவனைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அங்கு வந்தான் மஹதன். 


'நினைச்சதும் வந்து நிக்குறான்!' பெருமூச்செறிந்தவாறே, நிமிர்ந்து அவனைப் பார்த்து, 

"குட் மார்னிங் சார்!" என்று புன்னகைத்தாள் மௌனா. 


அவன் குளிர் கண்ணாடி எதையும் அணிந்திருக்கவில்லை. அதனால், லேசர் பார்வை கொண்டு, மௌனாவின் நெற்றிக் காயத்தை ஆராய்ந்தான் மஹதன்.


தனக்குப் பதில் வணக்கம் சொல்லாமல், நெற்றியைக் கூரிய விழிகளால் வருடியவனைத் திகைத்து நோக்கினாள் பெண்ணவள். 


அவள் திகைப்பில், தன் இதழ்களில் மென் புன்னகையைப் படர விட்டவன், 

"பிளாஸ்திரியை எடுத்துட்ட, அதுதான் காயம் சரி ஆகிருச்சு போல என்று பார்த்தேன். வேறொன்னும் இல்லை" என தன் பார்வையின் நோக்கத்திற்கு விளக்கம் கொடுத்தான் மஹதன். 


திகைப்பைச் சமாளித்துக் கொண்டவள், 

"ஓஹ்! நன்றி சார்" என்று சிக்கித் திணறினாள் மௌனா. 


"குட் மார்னிங்" கூறி விட்டு, உள்ளே செல்ல, திகைப்பில் பெரிதாக விரிந்தது அவளது விலோசனங்கள். 


மௌனாவின் திகைப்பு நிறைந்தப் பாவனையையும், ஐந்து நிமிடத்திற்கு முன்னர் உள்ளே போன மஹதனையும் கண்டு கொண்ட நீலகண்டனோ, இறுகிய முகத்தை சிரமப்பட்டு மாற்றிக் கொண்டு, மௌனாவிடம் வந்தார். 


அவர் உள்ளே வந்ததுமே, மஹதனுக்குச் செய்தி சென்று விட்டது. 


வாயிற்காவலாளியிடம் , அவன் தான் மறுபடியும் முக்தாவோ, நீலகண்டனோ அலுவலகத்திற்குள் நுழைந்தால், தனக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு கட்டளை இட்டிருந்தான். 


அதேபோல் செய்தி வந்து சேர்ந்ததும், முக்தாவின் வருகை அன்று நடந்ததைப் போல், எந்த அசம்பாவிதமும் நடந்தேறக் கூடாது என மௌனாவிடம் விரைந்தான். 


அதற்குள், 

" வணக்கம்மா.உன் பேர் தான மௌனா?" என்று அவளிடம் தன்மையாக வினவினார் நீலகண்டன். 


விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள், இந்த ஊரில் தன்னைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகக் குறைவே! அப்படி இருக்க, இவர் தன் பெயரை இத்தனை உரிமையாகக் கூறி, அழைக்கிறாரே? என ஸ்தம்பித்தாள் மௌனா. 


"சொல்லும்மா?" என்று மறுபடியும் கேட்க, 


"ஆமாம் சார். என்னோட பேர் தான் மௌனா"


 அதற்குப் பிறகு என்ன கூறுவதென்று தெரியாமல் நின்றாள். 


நீலகண்டனே, "நான் முக்தாவோட அப்பா ம்மா. அவ உங்கிட்ட நேற்று ரொம்ப முரட்டுத்தனமாக

 நடந்துக்கிட்டா. அதுக்கு என்னோட வருத்தத்தைத் தெரிவிச்சுக்கிறேன்" என்று உண்மையாகவே வருந்துபவர் போல பேசினார். 


அவர் வயதின் பொருட்டு, 

"பரவாயில்லை சார்" என்று பெருந்தன்மையுடன் கூறினாள். 


அந்த இடத்தை அடைந்திருந்த மஹதனோ, 

"அங்கிள்!" நீலகண்டனைச் சற்று உரக்க அழைத்தான். 


தூக்கி வாரிப் போட்டவாறே திரும்பினர் இருவரும். 


முக்கியமானதைப் பேசி முடிக்கும் முன்பே, இடையூறு செய்த மஹதனைப் பார்த்து முகம் சுருங்கினார் நீலகண்டன். 


'அப்பாடா!' என ஆசுவாசமடைந்தாள் மௌனா.


"வா மஹத்" என்று அவனது அலுவலகத்திலேயே மஹதனை வரவேற்றார் என்றால் அது நகைப்பிற்குரிய விஷயம் தானே! 


"வந்துட்டேனே அங்கிள்.நீங்க வந்த காரணம்?" என்று புருவம் உயர்த்திக் கேட்டான் மஹதன். 


நீலகண்டனின் அசட்டுப் பார்வையும், வியர்த்த முகமும் சொல்லாதவற்றையா அவரது வாய் கூறப் போகிறது? 


இருந்தாலும் பதில் வேண்டி நின்றான் மஹதன். 


'நேத்துப் பொண்ணு, இன்றைக்கு அப்பா!' என்று நொந்து கொண்டாள் மௌனா. 


அவளது வேலை தானே பாதிக்கிறது! 


"மஹத்! இந்தப் பெண்ணைப் பார்த்துட்டு மன்னிப்புக் கேட்கலாம்னு வந்தேன். நீயும் நேத்து வீட்ல மௌனாவைப் பற்றி சொன்னியே! என்ன ஒரு தைரியமான பொண்ணு! வாழ்த்திட்டும் போகலாம்ன்னு வந்தேன்" என்று ஒருவாறு சமாளித்து முடித்தார் நீலகண்டன். 


அவர் சொன்னதைக் கேட்ட மௌனாவோ, 'என்னைப் பற்றி ஊரில் உள்ள எல்லாரிடமும் அள்ளித் தெளித்து இருக்கிறார்' என்று உள்ளுக்குள் புகைந்தாள். 


"சொல்லிட்டீங்களா? இனிமேல் தான் சொல்லனுமா?" 


அவன் கேட்டதும், மௌனாவை ஒரு கணம் பார்த்தவர், 

"சொல்லிட்டேன் மஹத்! அந்தப் பெண்ணுக்கும் ரொம்ப நல்ல மனசு. உடனே மன்னிச்சுட்டா" 


வார்த்தைக்கு வார்த்தை தன்னைப் புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கும் இவரைப் பார்க்கையில் மௌனாவிற்குள் கிலி பரவியது. 


தான் ஏதாவது பாராட்டும் வகையில் செய்திருந்தால் கூட, இப்படி புகழ்வதில் நியாயம் உள்ளது. அதுவும் இல்லாமல், இவருடைய மகளின் நிலைக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நான் காரணமாகி விட்டேன். அது நன்றாகவே தெரிந்திருந்தவர் தன்னை வானளவிற்குப் புகழ்ந்தால், ஐயம் ஏற்படும் தானே! 


எதுவுமே சரியில்லை என்று அவனுக்குத் தோன்றிற்று. 


நீலகண்டன் வந்த நோக்கமும் இதுவாக இருக்காது. எனவே, தந்தையும், மகளும் இவளைப் பழிவாங்க நினைக்கிறார்களோ? என்று தானே மஹதனுக்குச் சந்தேகம் எழும். 


அதனால்,"அப்பறம் என்ன? கிளம்ப வேண்டியது தான அங்கிள்?"


 அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் முனைந்தான் மஹதன். 


"இதோ கிளம்பிட்டேன் மஹத். மௌனா உன்னோட அப்பா, அம்மாவை விசாரிச்சதாக சொல்லு ம்மா. நான் வர்றேன்" என்று அவளது குடும்பத்தை அவளுக்கே ஞாபகப்படுத்தி விட்டுப் போனார். 


உறைந்து போன மௌனா, 

"சார் உங்க கூட தனியாகப் பேசனும்" என்று மஹதனிடம் கேட்டாள். 


"என் ஆஃபீஸ் ரூமுக்கு வா" 


என்றவனைத் தொடர்ந்தாள். 


உள்ளே தனக்கு எதிராக அமர்ந்திருந்த மௌனாவை, 

"என்ன?" என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான் மஹதன். 


"சார்! நான் வேலைப் பார்க்கத் தான் வந்தேன். நேற்று நடந்தது அப்போவே முடிஞ்சு போச்சு. அவங்களுக்கு என் மேல இவ்ளோ வன்மம் இருக்கக் கூடாது. அதுவும் இல்லாம நீங்க வேற என்னைப் பத்தி அவர்கிட்ட ஏதோ சொல்லி இருக்கீங்க! இப்போ தேவையில்லாமல் என்னோட குடும்பத்தை விசாரிச்சுட்டுப் போறார்.உங்களை யார் சார் என்னைப் பற்றி அவர்கிட்ட சொல்லச் சொன்னது?" 


இப்போதும் கூட துளி பயம் இல்லாமல் தன்னை நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்கும் இவளது துணிச்சலை மஹதனால் ரசிக்காமலும், பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன? 


ஆனாலும் விஷயம் தீவிரமானது என்பதால் அவளை அலைக்கழிக்கச் செய்யாமல், 

"அப்பாவையும் , பொண்ணையும் சமாதானப்படுத்தப் போனா முக்தா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு நினைச்சுட்டு, வாய்க்கு வந்ததைச் சொல்லிக் கத்துறா! உன்னைப் பற்றிப் பேசனும்னு எனக்கு எந்த உள் நோக்கமும் இல்லை. அவளுக்குப் புரியுற மாதிரி சொல்லவும் ட்ரை பண்ணேன்.முடியவே இல்லை. இதில் நானா ஒன்னும் உன்னை எங்கள் பேச்சில் இழுக்கல!" 


                            - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...