முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 29

 


தனது புகைச்சலை அடக்கிக் கொண்டு,”முக்கால்வாசி முடிஞ்சது. இந்த வாரக் கடைசியில் விருந்தை வச்சிடலாம்”என்று அவனுக்குப் பதிலளித்தார் நஞ்சுண்டன். 


“சரிப்பா”என்றிருந்தான் திருவாதிரன். 


அதற்குப் பின் தங்களது மற்ற வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விட்டனர் இருவரும். 


அதே சமயத்தில் அலுவலக அறைக்குள் நடந்ததை மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டிருந்த முருகையனோ, அங்கே வேலை செய்து கொண்டிருந்த பூவிழியை அப்போதே கொன்று போட்டு விடும் அளவிற்குக் கொலைவெறியுடன் பார்த்தார். 


ஆனால் அவளோ அவரைக் கண்டு கொள்ளவே இல்லை! 


உடனே அவளிடமிருந்து தனது பார்வையை விலக்கிக் கொண்டுத் திருவாதிரன் அறிவுறுத்தியபடியே காட்டை விட்டு வெளியேறித் தன் இல்லத்திற்குச் செல்ல எத்தனித்தார் முருகையன். 


ஆனால் பாதி வழியிலேயே அவரை மடக்கி வேறொரு இடத்திற்குக் குண்டுக்கட்டையாகத் தூக்கிக் கொண்டுச் சென்று விட்டார்கள் சில மர்ம நபர்கள். 


அதேபோல் அன்றைய மாலை நேரத்தில் சடையன் மற்றும் விருமனையும் அந்த மர்ம நபர்கள் விட்டு வைக்காமல் அவர்களையும் யாருக்கும் தெரியாமல் கடத்தி விட்டிருந்தனர். 


மாலையில் தங்களது வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள் நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் பூவிழி. 


அப்போது வரவேற்பு அறையிலிருந்து யாரிடமும் எதுவும் பேசாமல் அறைக்குள் புகுந்து விட்ட அந்த வீட்டின் இளைய மருமகளைக் கண்டு,”நம்மளை எல்லாம் மதிக்காமல் எவ்வளவு திண்ணக்கமாகப் போறாள் பாரு!”என்று மற்றவர்களிடம் பொருமி விட்டு, 


“இங்காரு பூவு! உங்க ரெண்டு ஜோடிகளுக்குமான மறு வீட்டு விருந்தைப் பத்தின பேச்சு வார்த்தையை நடத்தப் போறோம். அதனால் நீயும் இங்கே இருக்கிறது முக்கியம்! அதனால் இப்படி வந்து உட்காரு!”என்று தன் இளைய மருமகளுக்கு உத்தரவிட்டார் ராஜகுமாரி. 


அதில் தனது விழிகளைச் சுழற்றிச் சலித்துக் கொண்டு அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள் பூவிழி. 


அவளது அத்தகைய செயலை அவதானித்து விட்டு அவளை முறைக்க, 


“அம்மா! அவளை விடுங்க. மறு வீட்டு விருந்தைப் பத்திப் பேசுவோமா? அதுக்கு யார், யாரையெல்லாம் கூப்பிடப் போறோம்?”என்று அவரிடம் விசாரித்தான் திருவாதிரன். 


அதில் எரிச்சல் மேலிட,”தன்னோட பொண்டாட்டிக்கு எப்படி சொம்புத் தூக்குறான் பாரு”எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவரோ,


“எனக்கு எல்லாரையும் கூப்பிடனும்னு ஆசை தான்! ஆனால் நம்மச் செந்தா கர்ப்பமாக இருக்கிறதால் அவளோட உடல்நிலையை மனசில் வச்சுக்கிட்டுக் நம்ம வீட்டுக்கு ரொம்ப நெருக்கமான உறவுக்காரங்களை மட்டும் கூப்பிட்டு விருந்து போடலாம்னு நினைக்கிறேன். நம்ம கிட்டே வேலை பார்க்கிற எல்லாருக்கும் அவங்க வேலை செய்ற இடத்திலேயே விருந்து சாப்பாட்டைப் போடலாம்னும் தோணுது! இதைப் பத்தி நீங்க எல்லாரும் என்னச் சொல்றீங்க?”என மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்டிருந்தார் ராஜகுமாரி. 


அதற்கு,”அதுவும் சரி தான்ம்மா. ஏன்னா, அண்ணாவோட குழந்தை இன்னும் கொஞ்ச மாதங்கள்ல பிறந்துடும்ன்னு விருந்துக்கு வர்ற எல்லாருக்கும் தெரிஞ்சிடும் தானே? அதுக்காகவே நாமக் கொஞ்சம் பேரை மட்டும் கூப்பிட்றது நமக்கு நல்லது”என இகழ்ச்சியாக மொழிந்தான் திருவாதிரன். 


அவனது அந்தப் பேச்சை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை! 


அந்தப் பேச்சுத் தங்களை வெகுவாகப் பாதிக்கவும், கோபமடையவும் செய்திருந்ததால்,”உன்னோட வார்த்தைகள் எல்லாம் வரைமுறை இல்லாமல் இருக்கு! ஒழுங்காகப் பேசு!”என அவனுக்கு எச்சரிக்கை விடுத்தான் அறிவொளி.


“இதை தான் நானும் உங்க நாலு பேருக்கும் சொல்றேன்! ஏன்னா, நீங்க நாலு பேரும் எம்பொண்டாட்டியைப் போறப் போக்கில் கிண்டலாக, நக்கலாகப் பேசுறதை நானும் கவனிச்சிட்டுத் தான் இருக்கேன்! எத்தனை தடவை சொன்னாலும் நீங்க யாரும் இதைச் செய்றதை நிறுத்துற மாதிரி தெரியலை! அதனால் இதை நீங்க எல்லாரும் இத்தோட விட்டால் நம்ம எல்லாருக்குமே நல்லது!”என்றவனை நஞ்சுண்டன், ராஜகுமாரி மற்றும் பூவிழியோ பிரம்மிப்புடனும், அவனது கோபத்தில் உறுத்து விழித்த கண்களையும் பயத்துடனும் பார்த்தார்கள் என்றால், 


திருவாதிரனின் மிரட்டலைக் கேட்டுப் பூவிழியின் தங்கையான செந்தாழையின் கோபம் முழுவதும் அவளது அக்காவின் மீது திரும்பிற்று. 


ஆனாலும் தனது இதழ்களில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு,”ஏனுங்க சின்னவரே! என்னோட அக்காவைக் கேலி செஞ்சிப் பேசுறதுக்கு எனக்கு உரிமை இல்லையா?”என்று அவனிடம் பாவமாக வினவினாள். 


அதில்,”அதானே! அவ அக்கா மேலே அவளுக்கு இல்லாத உரிமையா என்ன?”என்று அவளுக்கு ஒத்து ஊதினார் ராஜகுமாரி. 


“அந்த உரிமை எல்லாம் எங்களுக்குக் கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி தான்! ஆனால் இப்போ இவ எனக்கு மட்டுமே உரிமைப்பட்டவ! அதனால் இவளை யாரும் கிண்டல், கேலி செய்யக் கூடாது!”என்று ஒரே போடாகப் போட்டிருந்தான் திருவாதிரன். 


அதில் இது பெரிய சண்டையாகி விட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து,”போதும் நிறுத்துங்க! நாம விருந்தைப் பத்தி தானே கலந்துப் பேசக் கூடி இருக்கோம்! அதை தவிர்த்து எல்லாத்தையும் பேச்சுக்குள்ளே இழுத்தாச்சு! இப்போதாவது நாமப் பேச வேண்டியதை ஆரம்பிப்போமா?”என்று அழுத்தமாக வினவி இருந்தார் நஞ்சுண்டன். 


உடனே,”சரிங்கப்பா”என்றிருந்தனர் திருவாதிரன் மற்றும் அறிவொளி. 


“ம்ஹ்ம். என்ன வகையான சாப்பாடு எல்லாம் சேர்க்கனும்னு ஒவ்வொருத்தராகச் சொல்லுங்க”என்றதுமே, 


அனைவருக்கும் முந்திக் கொண்டுத் தனக்குப் பிடித்தமான உணவுகளை வரிசைப்படுத்த தொடங்கி விட்டாள் செந்தாழை. 


அவளைப் புன்னகையுடன் நோக்கலானான் அவளது கணவன். 


ஆனால்,”நீ இதையெல்லாம் இப்போதைக்குச் சாப்பிடக் கூடாது செந்தா. அதனால் உனக்கான சாப்பாட்டு வகைகளை நான் தான் முடிவுப் பண்ணப் போறேன்”என்றத் தன் மாமியாரை அதிர்ச்சியுடனும், ஏமாற்றத்துடனும் ஏறிட்டாள் செந்தாழை. 


“ஆமாம்மா. இன்னும் கொஞ்சம் மாசம் போகட்டும். நானே என் கையாலே உனக்கு வாய்க்கு ருசியாகச் சமைச்சுப் போட்றேன்”எனக் கூறி அவளைத் தேற்றினார் ராஜகுமாரி. 


“சரிங்கத்தை”என்றவளுக்கோ இன்னும் ஏமாற்றம் அடங்கவில்லை. 


“நீ என்ன எதுவுமே சொல்லாமல் எங்க வாயைப் பார்த்துட்டு இருக்கே! உனக்குப் பிடிச்சதைச் சொல்லு”என்று தன் இளைய மருமகளுக்கு அறிவுறுத்த, 


உடனே,”நான் கோழிக்கறி மட்டும் தான் சாப்பிட்டு இருக்கேன்த்தை! அதனால் எனக்கு அதையே செஞ்சிடுங்க. மத்த எந்த அசைவமும் வேண்டாம்”என்றுரைத்து விட்டிருந்தாள் பூவிழி. 


“ம்க்கும். சரி தான்”என்றவரிடம், 


“அவளுக்கும் சேர்த்தே எல்லா அசைவத்தையும் செய்யச் சொல்லுங்கம்மா”எனத் தெரிவித்தான் திருவாதிரன். 


அதற்கு,“சரிடா”என்று ஒப்புக் கொண்டார் ராஜகுமாரி. 


ஆனால் தனது கணவனை நிமிர்ந்து சங்கடத்துடன் பார்த்தாள் பூவிழி. 


அதை அறிந்து கொண்டாலும் அவளது புறம் திரும்பாமல்,”எந்தச் சமையல்காரரை வரவழைக்கப் போறீய?”என்று தந்தையிடம் வினவினான் திருவாதிரன். 


“எப்பவும் நம்ம வீட்டு விசேஷத்துக்குச் சமைக்கிற ஆட்களைத் தான் வரவழைக்கப் போறோம்”என்றவரோ,


தன் குடும்ப உறுப்பினர்கள் சொன்ன அனைத்து அசைவ உணவு வகைகளையும் வெள்ளைத் தாளில் குறித்து வைத்துக் கொள்ளுமாறு இளைய மகனிடம் அறிவுறுத்தி விட்டு, 


“எல்லாருக்கும் அவங்கவங்க ரூம்புல காப்பியையும், அதுக்குத் தோதாக ஏதாவது பலகாரம் செஞ்சிருந்தால் அதையும் அனுப்பி வச்சிட்டு வா குமாரி”என மனைவியிடம் கூறி விட்டுத் தங்களது அறைக்குப் போய் விட்டார் நஞ்சுண்டன். 


அதேபோல், தாங்களும் தங்களது அறைக்குள் புகுந்து கொண்டனர் அறிவொளி மற்றும் செந்தாழை. 


ஆனால் அதையெல்லாம் கவனிக்காமல் வேறொரு விஷயத்தைப் பற்றிய தீவிர யோசனையில் இருந்த மனையாளிடம்,”என்ன நம்ம ரூமுக்கு வர்ற யோசனை உனக்கு இருக்கா? இல்லையா?”என்று கேட்டிருந்தான் திருவாதிரன். 


அதைக் கேட்டதும் தான், நாற்காலியில் இருந்து எழுந்தாள் பூவிழி. 


தங்களது அறைக்குச் சென்றதும் தனது மாற்றுடையை எடுத்த திருவாதிரனிடம், 


“அந்த மூனு பேரையும் என்னச் செய்றதாக உத்தேசம்?”என்று அழுத்தமாக கேட்டு விட்டு அவனைக் கூர்மையாக நோக்கினாள். 


ஆனால் அவனோ,”எந்த மூனு பேர்? நீ யாரைப் பத்திப் பேசுற? அதே மாதிரி நான் அவங்களை என்னப் பண்ணப் போறேன்?”என்று புரியாமல் வினவ, 


“ரொம்ப நடிக்காதீய! அந்த அஞ்சுப் பேரையும் நீங்க தானே என்னைக் கண்காணிக்கிறதுக்காக நியமிச்சு இருக்கீய?”என்றிருந்தாள் பூவிழி.


அதைக் கேட்டதும் அவளை மெச்சும் பார்வைப் பார்த்து விட்டு,”பரவாயில்லையே! அதை இவ்வளவு சீக்கிரத்திலேயே கண்டுபிடிச்சுட்டியே! ஆனால் அதுல ஒரு திருத்தம்! நான் அவங்களை நியமிச்சது உன்னைக் கண்காணிக்கிறதுக்கு இல்லை! பாதுகாக்கிறதுக்காக!”என அவளிடம் தீர்க்கமாக கூறியிருந்தான் திருவாதிரன். 


அதில் தனது விழிகள் விரிய,”இப்படி ஆளைப் போட்டு என்னைப் பாதுகாக்கிறதுக்கு என்ன அவசியம் வந்துச்சு?”என்றவளிடம், 


“இப்போ இல்லை! அதுக்கான அவசியம் எப்பவோ வந்துடுச்சு! ஆனால் நீ தான் எதையுமே கவனிக்காமல் தேமேன்னுச் சுத்திட்டு இருக்கிற”என்றவனைக் கடுமையாக முறைத்தாள் பூவிழி. 


அதில் தனது இதழ்களை வளைத்து,”என்னை முறைக்கிறதை விட்டுட்டு இனிமேலாவது உனக்கு நடக்கிற எல்லா அவமானங்களையும், அசிங்கங்களையும் என்கிட்ட பகிர்ந்துக்க! இல்லைன்னா, அதையெல்லாம் நான் கண்டுபிடிச்சு அதுக்கான தீர்ப்பை எழுத வேண்டி இருக்கும்! அதுக்கான முதல் படியாகத் தான் அந்த மூனு பேருக்குத் தண்டனை கொடுக்கப் போறேன்!”என அவளிடம் தன் விழிகள் சிவக்க மொழிந்தவனைப் பயத்துடன் பார்த்து, 


“நீங்க எதுக்காக இதையெல்லாம் பண்றீய? எனக்காகவா?”என்றாள் கம்மிய குரலில். 


“உனக்காக எல்லாம் இல்லை! எம்பொண்டாட்டிக்காக! ஆனால் நீ தான் என்னோட பொண்டாட்டின்ற உரிமையை எடுத்துக்காமல் என் கூடக் கடமைக்கு வாழ்ந்துட்டு இருக்கியே! அதனால் நீ இன்னும் என்னோட பொண்டாட்டியாக மாறலை!”என அவளுக்கு விரக்தியாகப் பதிலளித்தான் திருவாதிரன். 


“ஓஹ்! அப்போ நான் உங்கப் பொண்டாட்டியாக மாறிட்டால் எனக்காக எதையும் செய்வீங்களா?”என்று அவனிடம் அதிரடியாக கேட்டிருந்தாள் பூவிழி.


அதில் அவளை விழி விரித்துப் பார்ப்பது இவனது முறை ஆயிற்று. 


“என்னப் பார்க்கிறீய? என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க”என்றவளிடம், 


“நான் எம்பொண்டாட்டிக்காக எது வேணும்னாலும் பண்ணாமல் வேற யாருக்காகப் பண்ணப் போறேன்! அப்போ தான் இன்னும் இறங்கிப் பண்ணுவேன்!”என அவளிடம் உறுதி அளித்தான் திருவாதிரன். 


உடனே,”அப்போ நான் இந்த நிமிடத்தில் இருந்து உங்களோட பொண்டாட்டியாக மாறப் போறேன்”என்றவளோ, 


அவன் எதிர்பாராத நேரத்தில் அவனது இதழ்களைத் தனது உதடுகளால் அழுத்தமாகக் கவ்வி விட்டிருந்தாள் பூவிழி. 


அதில் உன்மத்தம் ஆகிப் போய்த் தனது கண்கள் சொருக மனைவியிடம் தன் இதழ்களை ஒப்படைத்து விட்டு அவளது இடையில் தனது கரங்களை அழுந்தப் பதித்தான் திருவாதிரன். 


உடனே தனது கரங்களை கணவனின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அவனது இதழ்த் தேனை மிச்சம் வைக்காமல் உறிஞ்சலானாள் பூவிழி. 


                               - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...