முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 28

 


அதே நேரத்தில் தங்களது பயத்தை மறைத்துக் கொண்டு அந்த ஐவரைப் பார்த்தும்,”முருகையன் அண்ணனுக்கு இன்னைக்கு உடம்புக்குக் கொஞ்சம் முடியலையாம். அதனால் அவரோட மேற்பார்வை வேலையை இன்னைக்கு மட்டும் எங்களைப் பார்த்துக்கச் சொன்னாரு. அதான், நாங்க காட்டைச் சுத்திப் பார்க்க வந்திருக்கோம்”என்றிருந்தான் சடையன்.


“ஓஹோ! அப்போ ஏன் நீங்க ரொம்ப நேரமாக இந்த இடத்தை மட்டுமே மேற்பார்வைப் பார்த்துட்டு இருக்கீங்க? இந்தக் காட்டுக்குள்ளே இன்னும் நிறைய இடங்கள் இருக்குத் தானே அங்கே எல்லாம் போய் மேற்பார்வைப் பாருங்க. போங்க”என அவர்கள் இருவருக்கும் கடுமையாக எச்சரிக்கை விடுத்தான் தரமணி. 


அதில் பம்மிக் கொண்டே அங்கேயிருந்து அகன்று விட்டார்கள் சடையன் மற்றும் விருமன். 


அவர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றதும்,”சின்னய்யா இங்கே வர்ற வரைக்கும் உங்களை அவரோட அலுவலக அறையில் உட்காரச் சொல்லி விட்டார்ம்மா”என்று பூவிழியிடம் அறிவித்தான் சீலன். 


அதைக் கேட்டதும்,”எதுக்குண்ணா?”என்றிருந்தாள்.


அதற்கு,”அது எனக்குத் தெரியாதும்மா. அவர் போனு போட்டுச் சொன்னதை நாங்க உங்கிட்ட சொல்லிட்டோம். அவ்வளவு தான்”என்றான் பூதபதி. 


“ம்ஹ்ம். சரிங்கண்ணா”என்றவளோ,


அங்கேயிருந்து விலகி நடந்து அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டாள் பூவிழி. 


அதைக் கவனித்து விட்டுச் சடையன் மற்றும் விருமனிடம் வந்து,”என்னடா அவ பாட்டுக்கு அதிகாரமாக அந்த ரூம்புக்குள்ளே போய் உட்கார்ந்து இருக்கிறாள்! அவளை நீங்க எதுவுமே பண்ணலையா? தடிப்பசங்களா! உங்களை எல்லாம் பெரிய சம்பவம் பண்ற ஆளுங்கன்னு நினைச்சு இந்த வேலையைக் கொடுத்தேன் பாருங்க! என்னைச் சொல்லனும்! ஒன்னுத்துக்கும் உதவாத தற்குறிங்களா!”என்று அவர்கள் இருவரையும் கண்டபடி திட்டினார் முருகையன். 


ஆனால் அவர்களோ,”நீங்க சொன்னா மாதிரி நாங்க அவளை ஏதாவது செய்யத் தான் போனோம் அண்ணே! ஆனால் அங்கே…”என்றவர்களோ,


தங்களிடம் பூவிழிப் பேசியதையும், அங்கே திடீரென்று வந்த ஐவரையும், அவர்கள் தங்களுக்கு அளித்த மிரட்டலையும் பற்றி ஒப்புவித்து முடித்தார்கள். 


அதைக் கேட்டு மிரண்டு போய்,”என்னடா சொல்றீங்க? அவனுங்க தான் அங்கே வந்தாங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியுமா?”என வியர்த்து விறுவிறுத்துப் போய்க் கேட்டிருந்தார் முருகையன். 


“ஆமாம்ண்ணே! அவங்களைப் பத்திச் சொன்னால் நீங்க ஏன் இவ்வளவு பயப்பட்றீங்க?”என்றான் விருமன். 


“ஏன் அவனுங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியாதாடா? அவனுங்க கொஞ்சம் திமிருப் புடிச்சவனுங்கடா! அதே மாதிரி நிறையப் பேரை இந்தக் காட்டில் வச்சு என் கண்ணு முன்னாடியே அடிச்சு வெளுத்து இருக்கானுங்க! ரொம்ப மோசமானவனுங்களாச்சே! அந்த அஞ்சுப் பேரும் நீங்க அந்தப் பூவிழி கிட்டே பேசுனதைக் கேட்கலை தானே?”என்று அவ்விருவரிடமும் குரலைத் தணித்துக் கொண்டு வினவ, 


“ம்ஹூம். இல்லண்ணே! அவனுங்க விஷயம் தெரியாமல் சாவதானமாகத் தான் வந்து பேச்சுக் கொடுத்தானுங்க!”என அவருக்குப் பதிலளித்தான் சடையன். 


ஆனாலும் அவரது சந்தேகமும், பயமும், பதட்டமும் குறையவில்லை! 


இங்கு அலுவலக அறையிலிருந்து கொண்டுத் தன்னிடம் எதற்காக அந்தச் சடையனும், விருமனும் அப்படி நடந்து கொள்ள முயற்சி செய்தார்கள் மற்றும் அதே சமயத்தில் சரியாக அவ்விடத்திற்கு எவ்வாறு அந்த ஐவரும் பிரசன்னமானார்கள் என்பவற்றை ஆழ்ந்து யோசித்துக் கொண்டு இருந்தாள் பூவிழி. 


அப்போது அந்தக் காட்டிற்குத் திரும்பி வந்து விட்டிருந்தார்கள் தந்தையும், மகனும். 


அவர்களைப் பார்த்ததுமே,”சரி, சரி. இங்கே நின்னுச் சும்மா வெட்டிக் கதைப் பேசாமல் ரெண்டு பேரும் போய் உங்க வேலையைப் பாருங்க!”என்று அவர்களிடம் அறிவுறுத்தி அனுப்பி வைத்து விட்டார் முருகையன். 


அதே சமயத்தில் தங்களது அலுவலக அறைக்குள் நுழைந்த போது அங்கே இருந்தப் பூவிழியைக் கண்டுத் தனது புருவத்தைச் சுருக்கிப் பார்த்தார் நஞ்சுண்டன். 


ஆனால் அவரது மகனோ,”நீ இப்போ போய் உன் வேலையைப் பாரு”என்று தன் மனைவியிடம் அறிவித்தான். 


உடனே தனது கணவனின் கூற்றிற்கு இணங்கி,”சரிங்க. ஆனால்…”என்றவளிடம், 


“எதுவாக இருந்தாலும் வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம். இப்போ கிளம்பு”என்று அறிவுறுத்தினான் திருவாதிரன். 


அதைக் கேட்டவுடனேயே அங்கிருந்து அகன்று விட்டாள் பூவிழி. 


“இங்கே என்ன நடக்குது? அந்தப் பொண்ணு வேலை நேரத்தில் இங்கே என்னப் பண்ணிட்டு இருந்தாள்?”என்று மகனிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் நஞ்சுண்டன். 


“நான் தான் அவளை நாம திரும்ப வர்ற வரைக்கும் இங்கே உட்கார்ந்து இருக்கச் சொன்னேன்ப்பா”என்று அலட்டாமல் பதிலளித்தான் திருவாதிரன். 


அதைக் கேட்டுக் கோபம் கொண்டு,”ஏன்? அந்தப் பொண்ணு தானே வேண்டி, விரும்பி இங்கே வேலைப் பார்க்க ஆசையாக இருக்குன்னுச் சொல்லிட்டு வந்தாள். அப்பறம் வந்தவ எதுக்கு இப்படி ரூம்புல காத்தாடிக்குக் கீழே உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டு இருந்தாள்? இதையெல்லாம் மத்த வேலையாளுங்க பார்த்தால் பூவிழி நம்ம வீட்டுப் பொண்ணுங்கிறதால் அவளுக்கு மட்டும் இப்படியான சலுகைகள் எல்லாம் தர்றோம்ன்னு நம்மளைக் கண்டபடி பேசுவாகளே திரு? அது உனக்கு நினைப்பில் இருக்குதா?”என அவனிடம் பொரிய, 


“அவங்க அதை எங்கிட்ட நேரடியாக வந்து சொல்லட்டும். அப்போ பதில் சொல்லிக்கிறேன். அதுக்கு முன்னாடி முருகையனை இங்கே வரச் சொல்லுங்க. நான் அவர்கிட்ட கொஞ்சம் பேசனும்”என்று அவரை அழுத்தமாகப் பார்த்து மொழிந்தான் அவரது மகன். 


“முருகையன் கிட்டே என்னப் பேசப் போற திரு?”என அவனிடம் வினவினார் நஞ்சுண்டன். 


“அது அவர் இங்கே வந்ததும் உங்களுக்கே தெரிஞ்சிடும்ப்பா”என்றுரைத்து விட்டான் திருவாதிரன். 


அவனை முறைத்துக் கொண்டே அங்கிருக்கும் எடுபிடி வேலை பார்க்கும் பணியாளரிடம் முருகையனிடம் சென்று அவரை இங்கு வருமாறு கூறி அனுப்பி வைத்தார் அவனது தந்தை. 


அவர் சொல்லி விட்டதை அப்படியே சென்று முருகையனிடம் மொழிந்தார் அந்தப் பணியாளர்.


அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்ச் சரேலென நிமிர்ந்து பார்த்து,”நம்மப் பெரிய ஐயாவா என்னை வரச் சொல்லி உன்னை அனுப்பினாரு?”எனத் தனது நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவரிடம் கேட்டிருந்தார் முருகையன். 


“ஆமாண்ணே! சீக்கிரமாக வாங்க. அப்பறம் என்னைப் பிடிச்சுத் திட்டுவாங்க”என்று அவரைத் தன்னுடன் வருமாறு கூறவும், 


உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டு அந்தப் பணியாளருடன் இணைந்து நடந்து அலுவலக அறைக்கு வெளியே அனுமதிக்காக நிற்பதைக் கண்டதும், 


“அடடே! முருகையண்ணே! உள்ளே வாங்க”என்று அவரை உள்ளே வர அனுமதித்தான் திருவாதிரன். 


அதில் அவரும் அறைக்குள் நுழைந்து இருவரின் முன்னிலையிலும் அடக்கமாக நின்று கொண்டிருந்தாலும் கூடத் திருவாதிரனிற்கு அவனது மனைவியின் வாயிலாக உண்மைத் தெரிந்து விட்டதோ! என்று உள்ளுக்குள் பயத்துடனும், நடுக்கத்துடனும் தான் இருந்தார் முருகையன். 

 

அவரை ஏறிட்டுப் பார்த்து,“ம்ஹ்ம். நாய்க்கு ஒரு வேலையைக் கொடுத்தால் அது அந்த வேலையைத் தன்னோட வாலுக்குக் கொடுக்குமாம்! அந்த மாதிரி இருக்கு உங்களோட நடவடிக்கை!”என்று அவரிடம் நக்கலாக சொல்லவும், 


அதில் அவருக்கு மேலும் உதறல் எடுத்து விட்டிருந்தது.


ஆனாலும்,“நான் அப்படி என்னப் பண்ணேனுங்க சின்னய்யா?”என்று பாவமான முகபாவனையுடன் வினவினார் முருகையன். 


அதற்கு,”ஏன் நீங்கப் பண்ணினது உங்களுக்கே மறந்து போயிருச்சா?”என்று விடாப்பிடியாக கேட்டிருந்தான் திருவாதிரன். 


அதில் தன் தலையைச் சொரிந்து கொண்டே நஞ்சுண்டனைப் பார்த்தார் முருகையன். 


ஆனால் அவரோ இந்த விசாரணையை மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாரே தவிர்த்து, அவருக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை. 


ஏனென்றால் அந்தப் பெண் பூவிழியை ஏதாவது செய்து இங்கேயிருந்து விரட்டி விடுமாறு கேட்டுக் கொண்டதற்கு அதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கக் கேட்க அதையும் செய்து கொடுத்த போதிலும் கூடப் பூவிழிக்கு எதுவுமே ஆகவில்லை! அவள் குத்துக்கல்லைப் போல் நன்றாக இருப்பதைக் கண்டு ஏற்கனவே முருகையனின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார் நஞ்சுண்டன். 


அதனாலேயே அவருக்குச் சாதகமாக ஒன்றும் கூறாமல் அப்படியே அமைதியாக இருந்து கொள்ளவும், 


“என்ன எங்க அப்பாவைப் பார்க்கிறீங்க? நான் கேள்விக் கேட்டது உங்ககிட்ட! நீங்கப் பதில் செல்லாமல் தலையைச் சொரிஞ்சா என்ன அர்த்தம்?”என்றவனிடம், 


தானே தனது வாயைக் கொடுத்து தன்னை அவனிடம் வெளிப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று சமயோசிதமாக யோசித்து விட்டு,”நீங்க எங்கிட்ட எதைப் பத்திக் கேட்கிறீங்கன்னு எனக்குச் சத்தியமாகத் தெரியலை ஐயா”எனப் பரிதாபமாக மொழிந்தார் முருகையன். 


“உங்களை மேற்பார்வை செய்ற வேலைக்கு வச்சா நீங்க அந்த வேலையை வேற ரெண்டு பேருக்கும் கொடுத்து இருக்கீங்க போலவே”என்று அவரிடம் அழுத்தமாக வினவினான் திருவாதிரன். 


உடனே தனது முகம் பயத்தில் வெளிறிப் போய் விட,”அது வந்துங்க ஐயா!”என்றவரிடம், 


“நீங்க முதல்ல அவனுங்களை இங்கே கூட்டிட்டு வாங்க. அதுக்கப்புறம் இன்னும் விவரமாகப் பேசுவோம்”என அவருக்குக் கட்டளையிடவும்,


அதில் நடுநடுங்கிப் போய் உடனே செயல்பட்டு அங்கிருந்து வெளியேறிச் சடையனையும், விருமனையும் அழைத்து வந்து அவனது முன்னால் நிறுத்தி விட்டிருந்தார் முருகையன். 


அந்த இருவரும் கூடத் திருவாதிரனின் கூரியப் பார்வையில் உடல் வெடவெடக்க நின்றிருந்தார்கள்! 


“இவனுங்களையா நீ மேற்பார்வைக்கு வச்சிருந்த?”என முருகையனிடம் விசாரித்தார் நஞ்சுண்டன். 


“அவருக்கு உடம்பு சரியில்லையாமுங்க ஐயா! அதனால் தான் அவருக்குப் பதிலாக இன்னைக்கு மட்டும் எங்களை மேற்பார்வை வேலையைப் பார்க்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டார்!”என அவரைக் கைக் காட்டி விட்டார்கள் சடையனும், விருமனும். 


அதில் அவர்களைப் பயங்கரமாக முறைத்துப் பார்த்து விட்டு,”ஆமாங்க ஐயா! எனக்கு மேலுக்குச் சுகமில்லை. அதனால் தான், இவனுங்களை ஒத்தாசைக்குக் கூப்பிட்டேன்”என்றுரைத்தார் முருகையன்.


“ஓஹோ! சரி. நீங்க ரெண்டு பேரும் போங்க”எனச் சடையன் மற்றும் விருமனை மட்டும் அப்போதைக்கு அனுப்பி வைத்து விட்டு, 


“நீங்க உடனே கிளம்பி உங்க வீட்டுக்குப் போய் ஓய்வெடுங்க அண்ணே! உங்க உடம்புச் சரியானதுக்கு அப்பறமாக வேலைக்கு வாங்க. போதும்”என்று முருகையனிடம் சொன்னான் திருவாதிரன்.


அதைக் கேட்டு அவருக்கு மட்டுமில்லாமல் நஞ்சுண்டனுக்கும் தூக்கி வாரிப் போட்டது எனலாம்.


“அந்தளவுக்கு எனக்கு மேலுக்கு முடியாமல் இல்லீங்க ஐயா! நான் சமாளிச்சுக்குவேன்”என்று பதட்டத்துடன் கூறினார் முருகையன். 


“அப்படி சமாளிச்சுக்கிற மாதிரி உங்களோட உடல்நிலை இருந்து இருந்தால் நீங்க ஏன் அந்த ரெண்டு பேரை ஒத்தாசைக்குக் கூப்பிட்டு இருக்கப் போறீங்க? அதனால் நான் சொன்னதைச் செய்யுங்க!”என்று அவருக்கு வலியுறுத்தினான் திருவாதிரன். 


அதற்குப் பிறகும் அவனிடம் மேலே பேசத் துணிவின்றி,”சரிங்க சின்னய்யா”என்றதுமே, 


“இப்போவே வீட்டுக்குப் போங்க”என்று அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, 


“அப்பறம்ப்பா, மறு வீட்டு விருந்துக்கான வேலைகள் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?”என்று தந்தையிடம் இயல்பாக வினவி இருந்தான் திருவாதிரன். 


                               - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...