அந்த வேலையாள் கூறிய செய்தியைக் கேட்டதும்,”இங்கேயே நில்லு. சாப்பாட்டுப் பாத்திரத்தை எடுத்துட்டு வரச் சொல்றேன்”என்று அவனை அங்கேயே நிற்க வைத்து விட்டு உள்ளே சென்று சில நிமிடங்களிலேயே அவன் கேட்ட உணவுப் பாத்திரத்தைக் கொண்டு வந்து அவனிடம் சேர்ப்பித்தார் ராஜகுமாரி.
அதை வாங்கிக் கொண்டு அங்கேயிருந்து அகன்று விட்டான் அந்த வேலையாள்.
அப்போது,”அக்கா பசிக்கலைன்னுச் சொல்லும் போது எனக்கு என்னன்னு இருந்துட்டு இப்போ என்னடான்னா சாப்பாட்டுப் பாத்திரத்தை வாங்கிட்டு வரச் சொல்லி வீட்டுக்கு ஆளனுப்பி இருக்காரே சின்னவரு!”என ஆச்சரியமாக கூறினாள் செந்தாழை.
“க்கும். அதை நீ தான் மெச்சிக்கனும். நாம அடுத்த வேலையைப் பார்ப்போம். மதியச் சமையலுக்கு என்னென்ன செய்யனும்னுச் சொல்லிட்டு வர்றேன்”என எழுந்த மாமியாரிடம்,
“அத்தை!”என்று அவரைத் தயங்கிக் கொண்டே அழைக்க,
“என்னம்மா?”என்று தேன் ஒழுகும் குரலில் கேட்டார் ராஜகுமாரி.
“இன்னைக்குச் சமையலுக்கு என்னென்ன செய்யனும்னு நான் சொல்லவா?”என்று அவரிடம் பயத்துடன் வினவினாள் செந்தாழை.
அதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்டவரோ, தனது மகனின் இருப்பை உணர்ந்து கொண்டு,”அதுக்கு என்னம்மா நீயே சொல்லு! நீ அடுக்களை வரைக்கும் வர வேண்டாம். நான் ஆளை வரச் சொல்றேன்”என்றுரைத்து விட்டுச் சமையல்காரியை அழைத்து,
“இன்னைக்கு என்னச் சாப்பாடு எல்லாம் செய்யனும்னு மூத்த மருமக சொல்லுவாள். அவளோட இஷ்டப்படித் தான் சமைக்கனும். சரியா?”என்றிருந்தார் ராஜகுமாரி.
“சரிங்கம்மா”என்றவளோ,
அந்த வீட்டு மூத்த மருமகள் கூறும் குறிப்புகளைப் பவ்யமாக கேட்கத் தொடங்கி விட்டாள் அந்தச் சமையல்காரி.
“எனக்குப் பிடிச்சதையும் பெரிய மனசுப் பண்ணி அதில் சேர்ப்பியா?”எனத் தன் மனைவியிடம் குறும்பாக வினவினான் அறிவொளி.
“ம்ம். யோசிக்கிறேன்ங்க”என்றவளைப் பார்த்துப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்ட கணவனைக் கண்டுப் பக்கென்று சிரித்து விட்டாள் செந்தாழை.
இதையெல்லாம் எரிச்சலாகப் பார்த்து விட்டு,”நாம் போய்ச் சமையல் வேலை சரியாக நடக்குதான்னுப் பார்க்கிறேன்”என மற்ற இருவரிடமும் கூறி விட்டு அங்கேயிருந்து அகன்று சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார் ராஜகுமாரி.
அதற்குப் பிறகு அறிவொளியும், செந்தாழையும் தங்களுக்குள் பேசிச், சிரித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
அதே சமயத்தில், திருவாதிரனிடம் உணவுப் பாத்திரத்தைச் சேர்ப்பித்து விட்டிருந்தான் அவனது வேலையாள்.
“சரி. நீ போய் வேலையைப் பாரு”என அவனை அனுப்பி வைத்து விட்டு அந்தப் பாத்திரத்தை மேசையின் மேல் வைத்து விட்டு அலுவலக அறையிலிருந்து வெளியே வந்தான் திருவாதிரன்.
அவனை விசித்திரமாகப் பார்த்து விட்டு அலுவலகத்தின் கணக்கு, வழக்குகளைப் பார்க்கத் தொடங்கி விட்டார் நஞ்சுண்டன்.
இங்கே வெளியே வந்து தனது மனைவியைத் தான் அழுத்தமாகப் பார்த்திருந்தான் திருவாதிரன்.
ஆனால் அவளோ தனது மயக்கத்தைச் சமாளித்துக் கொண்டுத் தனது வேலையைச் செய்து கொண்டு இருந்தாள் பூவிழி.
தன் மனைவியை அவதானித்து விட்டு அப்படியே தனது பார்வையை அவளுக்கு அருகில் நின்றிருந்து அவளை வேலை ஏவிக் கொண்டிருந்த முருகையனைக் கூர்மையாகப் பார்வையுடன் நோக்கிய திருவாதிரனுக்கு அவரிடம் என்னவோ தவறாக இருப்பது போல் தோன்றியது.
ஏனென்றால், தனது மனைவியின் மேல் படிந்திருக்கும் அவரது வெறித்தப் பார்வையும், அவளிடம் பேசும் அலட்சியம் மற்றும் ஏளனமானத் தோரணையும் அவனது கண்களிலிருந்து தப்பவில்லை!
அதைக் கண்டுத் தனது கைகள் இறுக அவரைக் கண்களில் வன்மத்துடன் நோக்கிக் கொண்டிருந்தான் திருவாதிரன்.
அவன் நினைத்திருந்தால் அவரை அப்போதே அழைத்துக் கண்டித்து இருக்கலாம் தான்!
ஆனால் அதைச் செயல்படுத்த எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை அவன்!
அப்போது அவனைக் கண்டதுமே,”வாங்க ஐயா! வேலையெல்லாம் ஜரூராக நடக்குது! எல்லாரும் சுறுசுறுப்பாக சோலியைப் பார்த்துட்டு இருக்காங்க”என்று பெருமிதமாக அறிவித்தார் முருகையன்.
“ம்ஹ்ம். நானும் என் கண்ணாலேயே பார்க்கிறேனே! எல்லாம் நல்லபடியாகத் தான் போயிட்டு இருக்கு!”என்று அவரிடம் பொடி வைத்துப் பேசி விட்டு அவரை நிர்மலமான முகத்துடன் ஏறிட்டான் திருவாதிரன்.
அதில் தனது முதுகுத்தண்டுச் சில்லிட்டதை உணர்ந்தாலும் கூட அதை அவனிடம் மறைத்துக் கொண்டு,”ஆமாம் ஐயா! என்னோட வேலையை நான் சரியாகச் செய்யோனும்ல?”என அசடு வழிந்தார் முருகையன்.
“ஆமாம்”என்றவனோ தன்னுடைய கண்களைப் பூவிழியின் புறமாகத் திருப்ப, அவளோ அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக மயக்கம் போட்டு விழப் போனாள்!
உடனே செயல்பட்டு மனைவியை அணுகி அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் திருவாதிரன்.
அவனது அந்த எதிர்பாராத செயலைக் கண்டு அங்கேயிருந்த அனைத்து பணியாளர்களும் ஆவென்று வாயைப் பிளந்து கொண்டுப் பார்த்தார்கள்.
அவர்களைப் போலவே திருவாதிரனின் செயலைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போய் விட்டார் முருகையன்.
அங்கே இருந்த அனைவரும் தங்களைப் பற்றித் தான் முணுமுணுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டு கொண்டாலும் கூட அதையெல்லாம் அலட்சியம் செய்து விட்டுத் தன் பிடியிலிருந்து யாருக்கும் தெரியாமல் விலக முயன்றத் தன் மனைவியின் காதில்,”ஒழுங்கு மரியாதையாக முரண்டுப் பிடிக்காமல் என் கூட வர்ற நீ”என்று அவளிடம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தான் திருவாதிரன்.
உடனே தனது பிடிவாதத்தை கைவிட்டு விட்டு அவனிடம் சரணாகதி அடைந்து விட்டிருந்தாள் பூவிழி.
அப்போது,”இந்தப் பொண்ணு வெயிலில் நின்னு வேலைப் பார்த்துப் பழக்கப்பட்டவ தான் சின்னையா! இப்போ என்னன்னுத் தெரியலை ஏதோ வீட்டிலிருந்து வெளியே வராதவ மாதிரி பாவ்லா காட்டிட்டு இருக்கிறாள்! இவளை இங்கே இருந்து மத்தப் பொம்பளைங்க கூட்டிட்டுப் போய் நிழல்ல உட்கார வச்சுப்பாங்க! இதுக்குன்னு நீங்களே களத்துல இறங்கனும்னு அவசியம் இல்லை ஐயா!”என்று அவன் தனது தோள்களில் தாங்கி இருக்கும் பூவிழி என்னும் பெண்ணவள் அவனது மனைவி என்பதை மறந்து போய் அவனிடம் இப்படியாக அலட்சியமாக அறிவுரை வழங்கினார் முருகையன்.
அதில் அவர் மீதான தனது கட்டுக்கடங்காத கோபத்தைக் கை முஷ்டியை மடக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டு,
“இவ எம்பொஞ்சாதி! அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”என்று அவரிடம் அழுத்தமாக கேட்டான் திருவாதிரன்.
அதில் உடனே தனது எச்சிலை விழுங்கிக் கொண்டு,”அது எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்குங்க சின்னையா! ஆனால் இங்கே வேலை பார்க்கிற எல்லாரையும் ஒரே மாதிரி தானே நடத்தனும்? அதனால் தான் இப்படி பேசினேன். என்னை மன்னிச்சிருங்க ஐயா”என்றவரிடம்,
“நீங்க சொல்றது சரி தான். ஆனால் இப்படியான முறை தவறிய வார்த்தைகளை யார்கிட்டேயும் பயன்படுத்தக் கூடாது! புரிஞ்சுதா?”என அவரை எச்சரித்து விட்டு,
“அதே மாதிரி நீங்க என்னைப் பேசலை! எம்பொஞ்சாதியைப் பேசி இருக்கீங்க! அதனால் இவகிட்டே மன்னிப்புக் கேளுங்க”என்று அவருக்கு வலியுறுத்தினான் திருவாதிரன்.
அதில் தனது முகமும், கர்வமும் மிகவும் அடிபட்டுப் போனாலும் கூட அவனது கட்டளையை மறுக்க முடியாது என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு,
அவனது தோளில் சாய்ந்திருக்கும் பூவிழியிடம்,”என்னை மன்னிச்சிருங்கம்மா”என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் முருகையன்.
அதற்கு அவளோ,“ம்ம். பரவாயில்லை”எனக் களைத்த முகத்துடன் அவருக்குப் பதிலளித்தாள்.
அதை அவளது தலைக்கனம், கர்வம் என்று தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டு அந்தக் கணத்தில் இருந்து அவள் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டு அவளை இன்னும் துடிக்க வைக்க முடிவு செய்து விட்டிருந்தார்.
ஏனெனில் முருகையனைப் பொறுத்த வரைக்கும், தான் திருவாதிரனின் இந்தக் காட்டில் அவனது தந்தைக் காலத்தில் இருந்தே வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் மூத்த தொழிலாளர்!
அதனால் தான், சில ஆண்டுகளுக்கு முன்புத் தன்னை இந்தக் காட்டின் முதன்மை மேற்பார்வையாளராகப் பதவி உயர்வுக் கொடுத்திருக்கிறார் அவரது தந்தை நஞ்சுண்டன்.
அதனாலேயே அவரைத் தவிரத் தன்னை ஏவல் செய்வதோ, தனக்கு உத்தரவு இடுவதற்கோ வேறு யாருக்கும் உரிமையில்லை என்பது அவரது மனநிலையாக இருந்தது!
அப்படி இருக்கும் போது தன்னை இங்கு வேலை பார்க்கும் அனைவரின் முன்னிலையிலும் இந்தளவிற்கு அசிங்கப்படுத்தி இருக்கிறான் திருவாதிரன் என்பதை முருகையனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதனாலேயே அவனை நேரடியாக எதிர்க்க முடியாது என்பதால் நஞ்சுண்டனின் வார்த்தைகளுக்கு இணங்கிச் செய்வதாக எண்ணிக் கொண்டு அவனைப் பழி வாங்குவதற்காக அவனது மனைவியைக் கைப்பாவையாக உபயோகித்துக் கொள்ள முடிவெடுத்து விட்டார்.
அதே நேரத்தில், தன்னுடைய மனைவியை அலுவலக அறைக்குள் கூட்டிக் கொண்டு வந்திருந்தான் திருவாதிரன்.
அதைக் கண்டதும்,”என்னாச்சு?”என்றிருந்தார் நஞ்சுண்டன்.
“காலையில் சாப்பிடலைல? அதனால் மயக்கம் வந்துடுச்சு”எனப் பதிலளிக்க,
“ப்ச்! நான் அப்போவே நினைச்சேன்!”என்று சலித்துக் கொண்டு,
“ஏதாவது சாப்பிட இருக்கா? இல்லைன்னா, இங்கே வேலை பார்க்கிற யாரோட தூக்குச் சட்டியை எடுத்துட்டு வரச் சொல்லவா?”என்றத் தந்தையிடம்,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா. நான் ஏற்கனவே வீட்டிலிருந்து சாப்பாட்டை வரவழைச்சிட்டேன்”என்றவனை நஞ்சுண்டன் மட்டுமின்றிப் பூவிழிக்கும் கூட ஆச்சரியம் உண்டானது.
“இது தான் அந்தச் சாப்பாடு”என மேசையில் இருந்த உணவுப் பாத்திரத்தைக் காட்டினான் திருவாதிரன்.
“சரி. நீ உம்பொஞ்சாதியைச் சாப்பிட வை”என்றுரைத்து விட்டு அங்கேயிருந்து வெளியேறி விட்டிருந்தார் அவனது தந்தை.
உடனே அவரது நாற்காலியில் அமர்ந்து கொண்டுத் தனது மனைவியை ஏறிட்டு,”இதிலிருக்கிற சாப்பாட்டைச் சாப்பிடு”என்று அவளுக்கு அறிவுறுத்த,
அதில் அவனைத் தயக்கத்துடன் நோக்கினாள் பூவிழி.
“நீ தான் சாப்பாட்டை வீணாக்க மாட்டியே? இது உனக்காக வரவழைச்சது தான்! இப்போ நீ இதைச் சாப்பிடாமல் இருந்தால் இதை நீ வீணடிச்சதாகத் தான் அர்த்தம்!”என அவளிடம் அழுத்தமாக கூறியிருந்தான் திருவாதிரன்.
அதில் இதழைச் சுழித்துக் கொண்டு அந்த உணவுப் பாத்திரத்தை திறந்து அதிலிருந்த உணவை அள்ளி உண்ணத் தொடங்கி விடவும்,
அவள் சகஜமாக உணவை உண்ணட்டும் என்றெண்ணிக் கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்து அறையில் இருந்து வெளியே செல்ல எத்தனிக்கும் சமயத்தில் அங்குத் தூரத்தில் முருகையனும், தனது தந்தையும் மிகவும் தீவிரமான முகபாவனையுடன் ஏதோவொரு விஷயத்தை உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டுப் புருவத்தைச் சுருக்கி விட்டு அங்கே செல்லாமல் மீண்டும் உள்ளே வந்து தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டான்.
அவனது செயல்களை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் உணவுண்பதில் முனைப்பாக இருந்தாள் அவனது மனைவி பூவிழி.
இதே சமயம்,”உங்ககிட்ட இதைச் சொல்ல ரொம்பச் சங்கடமாகத் தான் இருக்குங்க ஐயா! ஆனாலும் என்னால் சொல்லாமல் இருக்க முடியலை!”என்ற முருகையனைக் கூர்மையாகப் பார்த்து விட்டு,
“என்ன விஷயம்?”என்றிருந்தார் நஞ்சுண்டன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக