முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 9

 


அந்த முதுகெலும்பு இல்லாதவரைக் குறைச் சொல்லியும் பயனில்லை! 


ஏனென்றால் தங்களது ஊரில் இந்த நிலை உருவானதற்குத் தனது குடும்பம் தானே முழுமுதற் காரணம்? 


தங்களால் முடிந்த அளவிற்கு இந்த ஊர் மக்களுக்காக ஏதாவது நல்லது செய்யும் வகையில் மருத்துவமனையோ, கல்லூரியோ கட்டிக் கொடுத்து இருக்க வேண்டும் அதைச் செய்யாமல் இவர்களை இப்படி அடிமையாக, முதுகெலும்பு இல்லாத கோழைகளாக மாற்றி விட்டோமோ

என்பதை நினைத்துக் கழிவிரக்கம் கொண்டான் திருவாதிரன்.


அதே நேரத்தில், அவனுக்கு ஏனோ பூவிழியின் அருகில் ஆதரவாக அமர்ந்து கொண்டு அவளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. 


ஆனால் அடுத்த நிமிடமே தனக்கு இப்படியானதொரு எண்ணம் வருவது தவறு என்பதை அறிந்து தனது தலையை உலுக்கி அதை தனது மூளையிலிருந்து அகற்றி விட்டு அங்கே நடப்பதை அமைதியாக கவனிக்கத் தொடங்கி விட்டான் திருவாதிரன். 


செந்தாழை மற்றும் பூவிழியின் அழுகை, ஆற்றாமை, ஆதங்கம் என்று அவர்களது அனைத்து உணர்வு வெடிப்புகளையும் தாங்கிக் கொண்டுத் தனது இறுதி ஊர்வலத்தை முடித்துச் சிதையில் ஏறி இருந்தது முத்துமணியின் உடல்! 


அவருக்குக் கொள்ளி வைத்தது வேறு யாருமில்லை திருவாதிரன் தான்! 


அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதில் இருந்து செந்தாழையை மட்டும் வீட்டில் வைத்துக் கொண்டுப் பூவிழியை வீட்டை விட்டு அனுப்பி வைப்பதைப் பற்றி முத்துமணியின் இறுதிக் காரியங்கள் முடிந்து சில நாட்கள் கழித்து இளைய மகனிடம் பேசலாம் என்று நினைத்திருந்தவர்களை அவனது இந்தச் செயல் தங்களது பொறுமையை மிகவும் சோதித்து விட்டிருப்பதை உணர்ந்து அவன் வீடு திரும்புவதற்காக காத்திருந்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.


ஆனால் இதை அறியாமல் தங்களது அறைக்குள் முடங்கிக் கொண்டுத் தாயை எண்ணி அழுது தீர்த்துக் கொண்டிருந்தனர் செந்தாழையும், பூவிழியும். 


சில மணி நேரங்கள் கழித்து வீடு வந்து சேர்ந்திருந்த தங்கள் இரண்டு மகன்களையும் வெறித்தனமான முறைத்துப் பார்த்தனர் அவர்களது பெற்றோர். 


“அவங்க ரெண்டு பேரும் எங்கேம்மா?”என்று செந்தாழை மற்றும் பூவிழியைப் பற்றி விசாரித்த மூத்த மகனைச் சட்டைச் செய்யாமல் இளைய மகனிடம் தங்களது கோபக் கனலைக் கக்கும் வகையில், 


“நீ உன்னோட எல்லையை ரொம்ப மீறிட்ட திரு! நீ இப்போ என்னப் பண்ணிட்டு வந்திருக்கிறன்னு உனக்கு வெளங்குதா? மூத்தவன் பண்ணதையே எங்களால் இன்னும் ஜீரணிக்க முடியலை! இதில் நீ இப்போ பண்ணிட்டு வந்தக் காரியத்தை தெரிஞ்சிக்கிட்டதும், உன்னைப் பெத்த என் வயிறுக் குளுந்து போச்சுடா! ஏன்டா உன் புத்தி இப்படி போச்சு? அந்த முத்துமணி உனக்கு யாருடா? அவளுக்கு நீ எந்த உரிமையிலேடா கொள்ளி வச்சிட்டு வந்திருக்கிற?”என்று அவரது சத்தமாகப் பேச ஆரம்பித்ததுமே தாங்கள் இருந்த அறையிலிருந்து வெளியே வந்திருந்த செந்தாழை மற்றும் பூவிழிக்கு அவர் ஆங்காரமாகச் சொன்ன செய்தி அதிர்ச்சியையும், குழப்பத்தையும் கொடுத்து இருந்தது எனலாம்! 


‘இது எப்படி சாத்தியம்?’என்று தாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். 


“நான் எவ்வளவு கேள்விக் கேட்டேன்? அதுக்கு எல்லாம் பதில் சொல்லு திரு! நீ உன் தாத்தாவோட அம்சத்தில் பொறந்தன்ற ஒரே காரணத்துக்காக நீ சொல்வதை தான் நாங்க கேட்போம், உன் வார்த்தை தான் இங்கே வேத வாக்குன்னு உனக்கு இந்த வீட்டில் முதல் மரியாதையைக் கொடுத்ததுக்கு எல்லாம் சேர்த்து வச்சு இன்னைக்கு எங்களுக்கு ரொம்ப நல்லா நன்றிக்கடன் செய்துட்ட! என் மனசும், வயிறும் அப்படி எரியுதுடா!”என்று தனது மனம் அடங்காமல் இளைய மகனைக் கத்தித் தீர்த்தார் ராஜகுமாரி. 


ஆனால், தான் எதுவுமே பேசாமல் அவரையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன். 


அவனது அருகிலிருந்த அவனது தமையன் அறிவொளியும் கூட அவனுக்குத் துணையாக நின்று அவன் மீதான தன் தாயின் குற்றச் சாட்டுக்களை மறுத்துப் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டான்! 


“நீ இப்போ செஞ்சிட்டு வந்தக் காரியம் ரொம்பத் தப்புத் திரு! உன்னைக் கேட்க ஆளில்லைன்னு நினைச்சிக்கிட்டு உனக்குத் தோன்றதைச் செய்வியா என்ன? உங்கம்மா இவ்வளவு நேரமாக உங்கிட்ட கேள்விக் கேட்டுட்டு இருக்கா! இவளுக்குப் பதில் சொல்லாமல் இப்படியே நின்னு எங்களைப் பார்த்துட்டு இருக்கிறது தான் உன் உத்தேசமா?”என்று திருவாதிரனைப் பார்த்து ஆதங்கத்துடன் வினவினார் நஞ்சுண்டன். 


இப்போது தனது மௌனத்தை உடைத்து விட்டு,”எனக்கு எந்த உத்தேசமும் இல்லப்பா. நான் முதல்ல அண்ணாவைத் தான் கொள்ளி வைக்கச் சொன்னேன்! ஆனால் இவர் தான் செந்தா கர்ப்பமாக இருக்கிறாள் அதனால் நான் கொள்ளிப் போடலாமான்னுத் தெரியலைன்னுத் தயங்குனாரு! அதனால் தான் வேற வழியில்லாமல் நான் கொள்ளிப் போட வேண்டியதாகப் போச்சு! இப்போ இதனால் என்ன ஆகிப் போச்சுப்பா? ஒரு உயிரை நல்லபடியாக வழியனுப்பி வச்சிட்டு வந்திருக்கேன்! அதுவும் இல்லாமல் அவங்க நம்ம வீட்டோட மூத்தச் சம்பந்தி! அப்படி இருக்கும் போது அவங்களோட சாவுக்கான எல்லா சடங்கையும் நாம தானே செய்யனும்? அதைத் தான் நான் செஞ்சிட்டு வந்திருக்கேன்! அதே மாதிரி உங்களோட வார்த்தையை மீறனும்னு எனக்கு எந்த உத்தேசமும் இல்லை! இப்போவே அண்ணனோட விஷயம் நம்ம ஊரில் இருக்கிற எல்லாருக்குமே சூசகமாகத் தெரிஞ்சுப் போச்சு! இனி இவரோட கல்யாணத்தப்போ எல்லாமே தெரிஞ்சுப் போயிரும்! அப்போ என்னப் பண்ணுவீங்க? எல்லார் கிட்டேயும் என்னச் சொல்லிச் சமாளிப்பீங்க? அதைப் பத்தின யோசனைப் பண்ணிட்டு எங்கிட்ட வந்து கேள்விகளைக் கேளுங்க!”என்று அவர்கள் இருவரிடமும் அறிவுறுத்தி விட்டுக் கொல்லைப் புறத்தில் இருந்த குளியலறைக்குச் சென்று விட்டிருந்தான் திருவாதிரன். 


அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் தன்னைச் செருப்பால் அடித்ததைப் போன்று உணர்ந்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டுத் தானும் கொல்லையில் இருந்த இன்னொரு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் அறிவொளி. 


“என்னங்க இவன் இப்படி பேசிட்டுப் போறான்?”எனத் தன் கணவரிடம் ஆற்றாமையுடன் கேட்டுக் கொண்டே தற்செயலாகத் திரும்பிப் பார்க்கவும் அங்கே செந்தாழையும், பூவிழியும் நின்றிருப்பதைக் கண்டதுமே, 


“எங்கக் குடியைக் கெடுக்க வந்தவளுகளா! இப்போ உங்களுக்கு நிம்மதியாக இருக்கா? எங்கப் பையன் கையாலே கொள்ளி வாங்குன உங்கம்மாவோட ஆத்மாவும் நிம்மதியாகச் சொர்க்கத்துக்குப் போயிடும்! நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுல காலை வச்ச உடனேயே இங்கே தரித்திரமும் வந்து சேர்ந்திருச்சு! என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க! எங்கேயாவது போய்த் தொலைங்க!”என்று அவர்களைச் சத்தம் போட்டார் ராஜகுமாரி.


அதைக் கேட்டதும் உடனே அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர் செந்தாழை மற்றும் பூவிழி. 


“ச்சீ! இதுங்க மூஞ்சில முழிச்சாலே வெளங்காது போலவே! இதுல ஒன்னு நம்ம வீட்டுக்கு மூத்த மருமகளாக வேற ஆகப் போகுது!”என்ற மனைவியின் பேச்சை ஆமோதிக்கும் விதமாக, 


“எல்லாம் நம்ம நேரம் குமாரி!”என்று தானும் முணுமுணுத்தார் நஞ்சுண்டன். 


“இப்போ அந்த மூத்தவளை எங்கே கொண்டுப் போய் விட்றதுன்னு இன்னைக்கே சின்னவங்கிட்டே பேசி முடிச்சிடலாம்ங்க”என அவரிடம் பரபரத்தார் ராஜகுமாரி. 


“அது எப்படிம்மா முடியும்? நீ ரொம்ப அவசரப்பட்ற”என்று அவருக்குச் சொல்லிப் புரிய வைத்து அவரைக் கொஞ்சம் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்திய சமயத்தில் அவர்களது இரண்டு மகன்களும் குளித்து விட்டு வந்து விட்டார்கள். 


“அறிவு, திரு! அடுத்து என்னப் பண்ணலாம்?”என்று அவர்களிடம் வினவினார் நஞ்சுண்டன். 


“இன்னும் ஒரு வருஷத்துக்கு அண்ணனோட கல்யாணத்தை நடத்த முடியாது!”என்றிருந்தான் இளையவன். 


அதைக் கேட்டதும் அதிர்ந்து போய்த் தம்பியைப் பார்த்தான் அறிவொளி. 


ஆம்! தன்னுடைய வருங்கால மாமியார் இறந்து ஒரு வருடம் ஆகாமல் எந்த நல்ல காரியத்தையும் செய்ய முடியாது என்பதே அவனுக்கு இப்போது தான் புரிந்தது! 


“ப்ச்!”என்று தனது ஆதங்கத்தை அவசரப்பட்டு வெளிப்படுத்தி விட்ட தமையனைக் கண்டிப்புடன் நோக்கினான் திருவாதிரன்.


அதைப் புரிந்து கொண்டு,”அவங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்கம்மா?”என்று செந்தாழை மற்றும் பூவிழியைப் பற்றி மீண்டுமொரு முறைத் தாயிடம் விசாரித்தான் அறிவொளி. 


“அவுக அறையில் இருப்பாக”என்று தனது பொருமலை மறைத்துக் கொண்டு அவனுக்குப் பதிலளித்தார் ராஜகுமாரி. 


“சாப்பிட்டாங்களா?”என்றான் திருவாதிரன். 


“தெரியலை”என்றவரின் விட்டேற்றியான பதிலில் பெருமூச்செறிந்தவாறே அவர்களது அறையின் முன்னால் நிற்கவும்,


உடனே தம்பியைப் பின்பற்றித் தானும் அவனது அருகில் சென்று நின்று கொண்டான் அறிவொளி. 


ஆனால் சிறிதும் தாமதிக்காமல் அந்த அறையின் கதவைத் தட்டி விட்டுக் காத்திருந்தான் திருவாதிரன். 


ஏற்கனவே தங்கள் அன்னையின் இழப்பில் மிகவும் நொடிந்து போயிருந்த தங்களை அந்த வீட்டின் மூத்தப் பெண்மணியான ராஜகுமாரி தங்கள் மனதை மேலும் காயப்படுத்தும் விதமாகப் பேசியதை எண்ணித் தாங்கள் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுது கரைந்தனர் செந்தாழையும், பூவிழியும். 


அப்போது திடீரென்று அறைக் கதவுத் தட்டப்படும் சத்தத்தைக் கேட்டதும் மேலும் பயந்து போயினர் இருவரும். 


“நான் தான்! கதவைத் திறங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்”என்றத் திருவாதிரனின் குரலைக் கேட்டதும் தான் கதவைத் திறந்தார்கள் சகோதரிகள் இருவரும். 


அவர்களது முகங்களில் தெரிந்த மிரட்சியும், பயமும் சகோதரர்கள் இருவரையும் மிரளச் செய்தது.


“நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா? இல்லைன்னா சாப்பாடு கொண்டு வரச் சொல்லவா?”என்று அவர்களிடம் விசாரித்தான் திருவாதிரன். 


அவனது கண்கள் பூவிழியின் மேல் தான் ஆராய்ச்சியாகப் படிந்தது. 


ஆனால் அவளோ அந்தப் பார்வையின் அர்த்தத்தை அறியாமல் வெளிறிப் போய்க் காணப்பட்டாள்.


“நீ ரொம்பச் சோர்வாகத் தெரியுறியே செந்தா? ஏதாவது பழச்சாறு குடிக்கக் கொண்டு வரச் சொல்லவா? நீ இனிமேல் தான் சரியாகச் சாப்பிடனும்! நம்மக் குழந்தையைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? நான் உடனே உங்களுக்குச் சாப்பாட்டைக் கொண்டு வரச் சொல்றேன்!”என்று செந்தாழையிடம் அனுசரணையுடன் கூறினான் அறிவொளி. 


அதில் அவள் தனது விழிகளில் நிறைந்த கண்ணீருடன்,”என்னால் முடியலைங்க!”என்று அவனிடம் அழுகையுடன் சொல்லவும், 


“எல்லாத்தையும் கடந்து வந்து தான் ஆகனும்மா! இங்கே சாப்பாட்டைக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லலாம்னு தான் இருந்தேன்! நீங்க அங்கேயே வந்து எங்க கூடச் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்க. வாங்க”என்றத் திருவாதிரனிடம், 


“அதெல்லாம் சரியாக வராதுங்க ஐயா! நான் எங்கம்மாவுக்குக் காரியம் முடிஞ்சதும் இந்த வீட்டை விட்டுப் போயிடலாம்னு இருக்கேனுங்க ஐயா. அதனால் நீங்க இவளை மட்டும் உங்க கூடக் கூட்டிட்டுப் போய்ச் சாப்பிட வைங்க. எனக்கு எதுவும் வேண்டாம்”என்று உறுதியாக மறுத்து விட்டாள் பூவிழி. 


அதைக் கேட்டதுமே அவளைக் கடுங்கோபத்துடன் முறைத்துப் பார்த்தான் திருவாதிரன். 


அதில் தனது எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு,”எனக்கு இந்த வீட்டில் இருக்கிறதுக்கு எந்த உரிமையும் இல்லைங்க ஐயா!”என்றிருந்தாள் பெண்ணவள். 


                            - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...