அதில் அவனை மௌனமாய்ப் பார்த்து விட்டுத், தனது இதழை வளைத்துக் கசந்த புன்னகையை உதிர்த்தாள் பூவிழி.
அது அவனை என்னவோ செய்யவும்,”என்னம்மா?”என மனைவியிடம் கனிவுடன் கேட்டான் திருவாதிரன்.
அவளோ ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு,”உண்மையைச் சொல்லனும்னா எனக்கு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கலைன்றதை விடவும், அங்கே இருக்கிற ஒவ்வொரு நொடியும் எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருக்குதுங்க!”என்றவளைத் திடுக்கிட்டுப் போய் நோக்கியவனிடம்,
“அது நம்மக் கல்யாணத்தினால் இல்லைங்க. எங்க ஆத்தா இந்த வீட்டில் தானே உயிரை விட்டாங்க! அதை நினைச்சு, நினைச்சு எனக்கு இதயமே வெடிக்கிறா மாதிரி இருக்குதுங்க! அங்கே இருக்கிற ஓவ்வொரு நாளும் எனக்கு நரகமாக இருக்கு! உங்க வீட்டாளுங்க என்னைப் பேசுற வார்த்தைகளை விட என்னோட ஆத்தாவோட இழப்பைத் தான் என்னால் தாங்கிக்க முடியவே மாட்டேங்குது! அதனால் தான் அங்கே இருக்கப் பிடிக்காமல் காட்டு வேலை செய்றேன்னுச் சொன்னேன்! அதுக்கு நீங்க சம்மதிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க!”என்று அவனிடம் தொண்டைக் கமறக் கூறியிருந்தாள் பூவிழி.
அவளது துக்கம் அவனையும் தாக்கியதால்,”ஹேய் விழி!”என்றவனோ ஜீப்பை இயக்குவதைச் சட்டென்று நிறுத்தி விட்டு,
“உன் நிலைமை எனக்கு நல்லாவே புரியுதும்மா”என்றுரைத்தான் திருவாதிரன்.
உடனே அவனை ஏளனமாகப் நோக்கி,”அப்படி புரிஞ்சு இருந்தால் நீங்க என்னைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்திருக்க மாட்டீகளே!”என்று இயம்பி இருந்தாள் பூவிழி.
அதில் தன் வதனம் பொலிவிழக்க,”விழி!”எனத் தவிப்புடன் அவளைப் பார்க்க,
“நான் நெசத்தைத் தானே சொன்னேனுங்க? என் ஆத்தாவைப் பத்தின நினைவுகள் எனக்கு வரக் கூடாதுன்னும் தான் நான் இங்கே இருந்து போகனும்னு நினைச்சேன்! ஆனால் நீங்க எனக்கு அப்படியொரு வாய்ப்பையே தரலையே!”என்று விழிகளில் நீர் கசிய மொழிந்த மனைவியிடம்,
“அப்படின்னா, உனக்கு எப்போ தோணுதோ அப்போ இங்கேயிருந்து போக நான் உனக்கு அனுமதி தர்றேன்!”என்று அவளிடம் தீர்க்கமாக உரைத்து இருந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டவுடன் பெண்ணவளின் முகத்தில் வேதனையின் சாயல் படிந்தது.
“படிச்சவுகள்ல இப்படித் தான் பேசுவீக”என்றிருந்தாள் பூவிழி.
“நான் சொன்னதுக்கும், என் படிப்புக்கும் என்னச் சம்பந்தம்? நம்மக் கல்யாணம் முடிஞ்சுக் கொஞ்ச நாளில் உன்னோட எல்லா கஷ்டமும் சரியாகி நீ இயல்பாக மாறிடுவன்ற நம்பிக்கையோடத் தான் உன்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். ஆனால் நீ உன் மனசைத் தேத்திக்க முயற்சி செய்யாமல் அதையே நினைச்சு இன்னும் உடைஞ்சுப் போயிட்டு இருக்கன்றதை நான் இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன்! அதனால் தான் இப்போ உன்னை இங்கேயிருந்து போறதுன்னா போ - ன்னுச் சொல்றேன்”என்று அவளுக்கு விளக்கம் அளித்து இருந்தான் திருவாதிரன்.
“ம்ஹூம். அதுக்கான காலம் கடந்துடுச்சுங்க! நான் இதுக்கப்புறம் உங்களுக்கு நல்ல மனைவியாக இருக்க முயற்சிக்கிறேன்”என்றதுமே,
“அப்படி ஒன்னும் எனக்கு நீ கடமைக்காக மனைவியாக வாழ வேண்டாம்னு தான் நான் உன்னை இந்தப் பந்தத்தில் இருந்து விடுவிக்க முடிவெடுத்தேன்ம்மா”என அவளுக்குப் புரிய வைக்க முயல,
“அதுக்காக இந்தக் கல்யாணம் இல்லைன்னு ஆகிடுமா? இல்லை, நான் உங்கப் பொண்டாட்டின்றதும் இல்லைன்னு ஆகிடுமாங்க? நான் மறுக்க, மறுக்க என்னை ஒத்துக்க வச்சு உங்கப் பொண்டாட்டியாக ஆக்குனீங்க தானே? அப்போ நான் எப்படி உங்களை விட்டுப் போக முடியும்? நான் உங்க கூடத் தான் வாழுவேன்! எனக்கு அந்த வீட்டில் தங்குறது தான் பிரச்சினையே தவிர உங்கப் பொண்டாட்டியாக வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லைங்க”என்று அவனிடம் உறுதியாக கூறியிருந்தாள் பூவிழி.
அதைக் கேட்டு மனைவியை மலைத்துப் போய்ப் பார்த்தான் அவளது கணவன்.
“நீ என்ன இப்படி சொல்ற விழி? அப்போ நஈ என் கூட வாழ்க்கை முழுக்க எம்பொண்டாட்டியாக வரப் போறியா?”எனத் தன் வாழ்க்கையில் முதல் முறையாகத் தடுமாறிப் போய் விட்டிருந்தான்.
உடனே அவனைத் தீர்க்கமாகப் பார்த்தவளோ,”ஆமாம்ங்க. நாமக் காட்டிலிருந்து கிளம்பி ரொம்ப நேரம் ஆகிடுச்சு”என்று அவனிடம் அறிவித்தாள் பூவிழி.
அதைக் கேட்டவுடனேயே தன்னைச் சமன்படுத்திக் கொண்டு ஜீப்பை வேகமாக இயக்கவும்,
சில நிமிடங்களிலேயே வீட்டிற்குச் சென்று விட்டனர் இருவரும்.
அவர்களைப் பின் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் வந்திருந்தார் நஞ்சுண்டன்.
அவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
அவர்களைக் கண்ட ராஜகுமாரியோ,”நீங்க மூனு பேரும் கை, கால் முகம் கழுவிட்டு வாங்க. சாப்பாடு தயாராகிடுச்சு. நான் போய் மூத்தவனையும், அவம் பொண்டாட்டியையும் சாப்பிட அழைச்சிட்டு வர்றேன்”என்று அறிவுறுத்தி விட்டு அறிவொளியின் அறையை நோக்கிச் சென்று விடவும்,
அவரது அறிவுறுத்தலின் படி, நஞ்சுண்டன் மற்றும் திருவாதிரன், பூவிழியும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்குப் போயினர்.
தனது மூத்த மகனின் அறையை அடைந்ததும் கதவைத் தட்டி,”அறிவு!”எனக் குரல் எழுப்பினார் ராஜகுமாரி.
“என்னம்மா?”என்று குரல் வந்ததும்,
“மதியச் சாப்பாடு தயார்! நீயும், உம்பொண்டாட்டியும் வந்து சாப்பிடுங்க. செந்தாவுக்காகவே பக்குவம் பார்த்து தனியாகச் சமைச்சு வச்சிருக்கேன். சீக்கிரம் வந்து சேருங்க”என்று அறிவித்து விட்டுச் சாப்பாட்டு மேசைக்கு வந்து சேர்ந்தார்.
அதேபோல் தங்களைச் சுத்தம் செய்து கொண்டு வந்திருந்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் திருவாதிரன், பூவிழி.
“உட்காருங்க”என்றுரைத்து அவர்களுக்குச் சாப்பாட்டைப் பரிமாறுமாறு வேலையாட்களை ஏவினார் ராஜகுமாரி.
“நீயும் உட்கார்ந்து சாப்பிடும்மா”என்றக் கணவரிடம்,
“நான் அவங்க ரெண்டு பேரும் வந்ததுக்கு அப்பறம் சாப்பிட்டுக்கிறேனுங்க”என அவருக்குப் பதிலளிக்க,
அதைக் கேட்டாலும் கூடத் தாயை உணவு அருந்துமாறு வலியுறுத்தாமல் தன் உணவை உண்பதில் கவனம் செலுத்தினான் திருவாதிரன்.
சிறிது நேரம் கழித்து அறிவொளியும், செந்தாழையும் சாப்பிடும் இடத்திற்கு வந்தார்கள்.
அவர்களுடன் சேர்ந்து தானும் உணவருந்த ஆரம்பித்து விட்டிருந்தார் ராஜகுமாரி.
அப்போது திருவாதிரன் மற்றும் பூவிழியைத் தவிர்த்து தனது தந்தையை மட்டும் பார்த்து,”அங்கே வேலையெல்லாம் எப்படி நடக்குதுப்பா? புதுசாக வேலைக்குச் சேர்ந்தவங்க எப்படி வேலை பார்க்குறாக?”என
எகத்தாளமாக கேட்டிருந்தான் அறிவொளி.
“எல்லா வேலையும் ஒழுங்காகத் தான் நடக்குது. புதுசாக சேர்ந்தவங்களைப் பத்தி இப்போதைக்குச் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை! இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுக் கவனிச்சுப் பார்த்துச் சொல்றேன்!”என்று தன் மூத்த மகனின் கேள்விக்கு அலட்சியமாகப் பதிலளித்தார் நஞ்சுண்டன்.
அதில் தனது கை முஷ்டிகள் இறுக அவனுக்குச் சுடச்சுட பதில் கொடுக்க முனைந்த தன்னுடைய கையைப் பிடித்து தடுத்து இருந்த மனைவியைத் திரும்பிப் பார்க்கவும்,
அவளோ,”வேண்டாம் விட்ருங்க”என்று மெலிதாக முணுமுணுத்தாள் பூவிழி.
அவளது வேண்டுகோளுக்கு இணங்கித் தனது விழிகளை மூடித் திறந்து தன்னையும், அவளையும் ஆசுவாசப்படுத்தினான் திருவாதிரன்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் நேரெதிராகத் தனது கணவனின் கேள்வி மற்றும் அதற்குத் தனது மாமனார் கொடுத்தப் பதிலை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்தாலும், வெளியே தன் முகத்தைச் சோர்வாக வைத்துக் கொண்டாள் செந்தாழை.
“அப்படி அவங்க ஒழுக்கமாகப் பார்க்கலைன்னா அதுங்களை வேலையை விட்டுத் தூக்கிடுங்க!”எனக் கணவருக்கு அறிவுறுத்தினார் ராஜகுமாரி.
அதைக் கேட்டதும் திருவாதிரன் மற்றும் பூவிழியின் முகம் இறுகிப் போய் விட்டது.
ஆனால் அதைக் கேட்ட மற்றவர்களோ அவர்கள் இருவரையும் ஏளனமாகப் பார்க்க,
அந்தப் பார்வையில் மேலும் கடுப்படைந்து விட்டுத் தனது சாப்பாட்டுத் தட்டை முன்னே தள்ளி இருந்தான் திருவாதிரன்.
அவனது அந்தச் செயலால் மற்ற நால்வரும் அதிர்ந்து போயினர் என்றால், தன் முகத்தைச் சாந்தமாக வைத்துக் கொண்டு,”இந்த மாதிரியான பேச்செல்லாம் எனக்குப் பழக்கம் தானுங்க! உங்களுக்கு இது முதல் தடவை! அதான், இப்படி சாப்பாட்டுத் தட்டைத் தள்ளி விட்டுட்டீங்க! ஆனால் இந்தச் சாப்பாடு கூட எனக்குக் கிடைக்காமல் நான் நிறைய நாள் கஞ்சி மட்டும் குடிச்சி இருக்கேன்! அதனால் எனக்கு இதோட அருமை தெரியும். என்னோட புருஷனான நீங்களும் அதைப் புரிஞ்சிக்கிட்டால் நல்லது!”என்று கூறி விட்டுத்,
தன் கணவன் தள்ளி விட்டத் தட்டை அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தாள் பூவிழி.
அதைக் கேட்டு அவளிடம் மறுப்புத் தெரிவிக்காமல் அந்தத் தட்டிலிருந்து உணவை உண்ணத் தொடங்கி விட்டான் திருவாதிரன்.
அதை அவதானித்து விட்டு அவர்கள் இருவரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் நோக்கினர் மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.
ஆனால் அவர்கள் யாரையுமே சட்டைச் செய்யாமல் தங்களது உணவை நன்றாக உண்டு முடித்து இருந்தார்கள் திருவாதிரன் மற்றும் பூவிழி.
அவர்கள் இருவருக்கு இடையே காணப்பட்ட அந்த அந்நியோன்யத்தைக் கண்டுப் புகைச்சல் உருவானது செந்தாழைக்குள்.
‘எவ்வளவு தான் இவளைக் கடுப்பேத்தினாலும் சுளுவாகச் சமாளிக்கிறாளே! அதுவும் திருவையும் கூடச் சமாதானம் செய்ற அளவுக்குக் கைகாரியாக இருக்கிறாளே!'எனப் பூவிழியைப் பார்த்துக் கடுப்படைந்து போனார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அனைவரும் உணவுண்டு முடித்ததும்,”இப்போ நாம மூனு பேரும் ஒரே ஜீப்பிலேயே காட்டுக்குப் போகலாமா?”என்றத் தந்தையிடம்,
“சரிப்பா”என்றிருந்தான் திருவாதிரன்.
உடனே மற்றவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஜீப்பில் ஏறித் தங்களது காட்டிற்குச் சென்றனர் நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் பூவிழி.
அவர்கள் சென்றதுமே,”அத்தை! உங்க கிட்ட ஒரு விஷயத்துக்காக அனுமதி கேட்கலாமா?”என்று ராஜகுமாரியிடம் தயக்கத்துடன் கேட்டாள் செந்தாழை.
அதில் அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தவரோ,”கேளும்மா. எங்கிட்ட பேச உனக்கு என்னத் தயக்கம் வேண்டிக் கெடக்கு?”என்றார் பெருந்தன்மையுடன்.
அதேபோல்,”எதுவா இருந்தாலும் அம்மா கிட்ட சொல்லு செந்தா. அவங்க அதைப் பார்த்துப்பாங்க!”என்று தானும் அவளுக்கு ஊக்கம் அளித்தான் அறிவொளி.
“அது வந்து அத்தை… நாங்க ரெண்டு பேரும் நாளைக்கே கிளம்பி ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வரவா?”என்று அவரிடம் தழைந்த குரலில் வினவினாள் செந்தாழை.
அதைக் கேட்டதுமே அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் அவள் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் இப்படி அனுமதி கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு,”அதுக்கென்னம்மா? தாராளமாகப் போயிட்டு வாங்க”எனக் கூறிப் புன்னகைத்தார் ராஜகுமாரி.
அதில் தனது முகம் மின்ன,”ரொம்ப நன்றித்தை”எனத் தன் மாமியாருக்கு நன்றி நவில,
“இருக்கட்டும்மா”என்றார்.
“இதைக் கேட்கத் தான் தயங்கிட்டு இருந்தியா? பைத்தியம்!”என மனைவியைப் போலியாக கடிந்து கொண்டான் அறிவொளி.
“சரி விடுடா”என்றவரோ,
நீங்க அறைக்குப் போய் நாளைக்கு ஆஸ்பத்திரிக்குப் போறதுக்குத் தேவையானதை எல்லாம் எடுத்து வைங்க”என்று கூறி அவர்களை அனுப்பி வைத்து விட்டுக் கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
“இவ இப்படி திடீர்னு ஆஸ்பத்திரிக்குப் போறேன்னுக் கேட்கிறதுக்கு என்னக் காரணமாக இருக்கும்?”என்றெண்ணி விட்டு,
“ப்ச்! இந்த மனுஷன் இங்கே இருந்து இருந்தாலாவது இதைப் பத்திப் பேசி இருக்கலாம்! ஆனால் அவர் காட்டுக்குக் கிளம்பிப் போயிட்டார்!”என்று தன் கணவரைக் கரித்துக் கொட்டவும் தவறவில்லை ராஜகுமாரி.
இதே சமயம் ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த மூவரும் தங்களுக்குள் எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தாமல் அமைதியாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த அமைதியை உடைக்கும் விதமாக,”என்னம்மா காட்டில் உனக்கு வேலையெல்லாம் சரியாகப் பிரிச்சுக் கொடுக்கிறாங்களா?”என மருமகளிடம் இயம்பினார் நஞ்சுண்டன்.
“ம்ஹ்ம். சரியாகத் தான் பிரிச்சுக் கொடுக்கிறாங்க ஐயா”என்றிருந்தாள் பூவிழி.
“ம்ஹ்ம். சரி. நீயும் ஒழுங்காக வேலைப் பார்க்கனும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம வீட்டில் பேசினது ஞாபகம் இருக்குத் தானே?”என்றவரிடம்,
“ஞாபகம் இருக்குங்க ஐயா”எனக் கூறினாள்.
இந்த சம்பாஷணையைக் கேட்டுத் தனக்குப் பொறுமைக் காற்றில் பறக்கத் தயாராகி இருந்தாலும் கூடத் தனது மனைவிக்காக அதை இழுத்துப் பிடித்துக் கொண்டு மௌனமாய் வண்டியை இயக்கினான் திருவாதிரன்.
பின்னர் தங்களது காட்டை அடைந்து தத்தமது வேலைகளைப் பார்க்கத் துவங்கி விட்டார்கள் மூவரும்.
அங்கே நஞ்சுண்டன் சொன்ன மாதிரியே பூவிழிக்கு அதிகமான வேலைகளைக் கொடுத்து முதல் நாளே அவளைச் சக்கையாகப் பிழிந்து விட்டிருந்தார் அந்தக் காட்டின் மேற்பார்வையாளர்.
ஆனாலும் அதையெல்லாம் முகம் சுளிக்காமல் பார்த்தாள் அவள்.
அதே நேரத்தில்,”நீ ஏன்மா நாளைக்கே ஆஸ்பத்திரிக்குப் போகனும்னு முடிவு பண்ணின? அதை எங்கிட்ட சொல்லக் கூட இல்லையே?”என்று மனைவியிடம் பரிவுடன் வினவினான் அறிவொளி.
“அது குழந்தையைப் பத்தின கவலை என்னை அரிச்சு எடுக்குதுங்க. அதனால் தான் சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்னு தான் அத்தைகிட்டே கேட்டேன். இதைப் பத்தி உங்ககிட்ட கலந்து பேசாமல் இருந்தது தப்பு தான்! என்னை மன்னிச்சிருங்க”என்று அவனைப் பாவமாகப் பார்த்துக் கூறினாள் செந்தாழை.
“ஏய்! நான் இதனால் ஒன்னும் நினைச்சுக்கலைம்மா”என அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான் கணவன்.
மாலையில் நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் பூவிழி மூவரும் தத்தமது வேலைகளை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து இருந்தார்கள்.
அவர்களிடம் அறிவொளியும், செந்தாழையும் மறுநாள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் செல்லப் போவதை அறிவித்தார் ராஜகுமாரி.
“போயிட்டு வரட்டும்மா”என்று திருவாதிரன் மட்டுமே அவருக்கு மறுமொழி உரைத்து இருந்தான்.
ஆனால் அன்றைய நாள் முழுவதும், தான் செய்திருந்த அதீத உழைப்பின் காரணமாகத் தூங்கி வழிந்து கொண்டிருந்தாள் பூவிழி.
அதே சமயம் தனது கணவரின் முக பாவனைகளை ஆராய்ந்தார் ராஜகுமாரி.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக